

கோனு ஜா மிதிலை நாட்டு மன்னன் சபையில் 13 ஆம் நூற்றாண்டில் இருந்த புத்திசாலியான ஒரு விதூஷகர். அவருடைய புத்தி சாதுரியத்தை புகழாதவரே இல்லை. மன்னருக்கு மிகவும் நெருங்கிய தோழராகவும் அறிவுரை கூறுபவராகவும் விளங்கினார். அவரை புகழ்பவரும் இருந்தனர்; அதே சமயத்தில் அவர் மேல் பொறாமை கொண்டவர்களுமிருந்தனர். அதில் ஒருவன் தான் அரசரின் பிரத்யேக முடி திருத்துபவர், இந்த மனிதனுக்கு கோனு ஜாவை எப்படியாவது கொல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
அதற்கு ஒரு திட்டம் தீட்டினான். அரசர் தினமும் தன் தகப்பனாரின் சமாதிக்கு சென்று மலர்கள் வைப்பது வழக்கம். இதை அறிந்த பார்பர், அரசரின் தந்தை எழுதியது போல ஒரு கடிதம் தயாரித்து சமாதியில் வைத்து விட்டான். அதில் "நான் சொர்க்கத்தில் இருக்கிறேன். எனக்கு பூஜை செய்வதற்கு உதவியாக யாரும் இல்லை.
உன் அவையில் இருக்கும் கோனு ஜாவை அனுப்பி வைத்தால் நன்றாக இருக்கும். மூன்று மாதம் கழிந்ததும் அவனை திருப்பி அனுப்பி விடுகிறேன். கோனுவின் வீட்டருகில் செங்கல்கள் பரப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன் மேல் கோனுவை அமர்த்தி அஞ்சு வண்டி வைக்கோலை போட்டு மூடி பற்ற வைத்து விடவும். அவன் என்னிடம் வந்து சேர்ந்து விடுவான்." என்று எழுதியிருந்தது.
அந்த கடிதத்தை எடுத்து படித்த அரசர் மிகவும் குழம்பிப் போனார். இதை பற்றி கோனு விடமே பேசினார். கோனுவுக்கு இது தன் எதிரி ஒருவனின் சதி என்று புரிந்து விட்டது. இதை செய்தவனுக்கு பாடம் புகட்ட அவரும் ஒரு திட்டம் போட்டார். மறுநாள் அரசவையில் தான் ஸ்வர்கம் போக தயார் என்றும் அதற்கு மூன்று நிபந்தனைகளும் விதித்தார். அரசரும் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டார்.
1. சுவர்க்கம் போவதற்கு 3 மாதம் அவகாசம் வேண்டும்.
2. மூன்று லக்ஷ ரூபாய் அரசர் தனக்கு தர வேண்டும்.
3. தான் திரும்பி வரும் வரை தனது முழு ஊதியத்தை கொடுக்க வேண்டும்.
கடிதத்தில் சொல்லப்பட்ட படி கோனு வீட்டருகில் அடுக்கப்பட்ட செங்கற்கள் மீது உட்கார்ந்தார். நான்கு வண்டி வைக்கோலை அவர் மீது போட்டு மூடினார்கள்; அந்தணர்கள் மந்திரம் ஓதினார்கள்; மிகுந்த வருத்தத்துடன் அரசர் வைக்கோலுக்கு தீ மூட்ட உத்தரவு கொடுத்தார். தீயும் மூட்டப்பட்டது. வைக்கோலும் எரிந்து சாம்பலானது. அரசரும் மற்ற கோனுவின் நண்பர்களும் கண்ணீர் விட்டனர்.
பார்பரும், அவரை போல கோனுவின் மீது பகைமை கொண்டவர்களும் அளவில்லா சந்தோஷப்பட்டனர். மூன்று மாதம் முடிந்த மறுநாளே கோனு அரசவையில் தோன்றி எல்லோரையும் அதிர வைத்தார்.
அரசரிடம் கோனு சொன்னார். "மன்னா உங்கள் தந்தை மிகவும் நலமாக சொர்க்கத்தில் இருக்கிறார். ஆனால், ஒரே ஒரு குறை. அவருக்கு முடி வெட்டவும் முக க்ஷவரம் செய்யவும் யாரும் அங்கு இல்லை. ஆகவே, உங்களின் ஆஸ்தான பார்பரை அவரிடம் அனுப்பி வைக்குமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார்.
என்னை அனுப்பியது போலவே நமது பார்பரையும் செங்கல் தரையில் உட்கார வைத்து வைக்கோலால் மூடி தீ வைத்து சொர்க்கத்துக்கு அனுப்பி வைக்கலாம்..." இதை கேட்டதும் நடு நடுங்கி போன பார்பர் அவையை விட்டு ஓட ஆரம்பித்தான். அவனை காவலர்கள் பிடித்து அரசர் முன் நிறுத்தினர்.
பயத்தில் கை கால் உதர, தான் செய்த சூழ்ச்சியை ஒப்புக்கொண்டான் பார்பர். அவனுக்கு கடுமையான தண்டனை அளித்த அரசர் கோனுவை பார்த்து "நீர் எப்படி ஸ்வர்கம் போயி திரும்பி வந்தீர்கள். நீங்கள் எங்கள் கண் முன் தானே எரிந்து சாம்பலானீர்கள்" என்றார். அதற்கு கோனு "நீங்கள் எனக்கு அளித்த மூன்று மாத அவகாசத்தில், என்னை எரிக்க போடப்பட்ட இடத்திலிருந்து என் வீட்டிற்கு ஒரு சுரங்கப்பாதை தோண்டி தயார் படுத்தினேன். அதன் வழியேதான் தான் அன்று தப்பினேன். வீட்டிலிருந்தே என்னை கொலை செய்ய சதி செய்தது பார்பர் தான் என்று தெரிந்து கொண்டேன். பின்பு நடந்ததெல்லாம் உங்களுக்கு தெரிந்தது தானே" என்று சொல்லி முடித்தார். தான் விரித்த வலையில் தானே மாட்டி கொண்ட பார்பரை நினைத்து எல்லோரும் சிரித்தனர்.