ஜெர்மெனியில் வேலை நேரம் என்பது Early Bird கான்செப்ட் தான். காலை 7 மணிக்கே பெரும்பாலானவர்கள் அலுவலகம் வந்து விடுவார்கள். இதனால் காலை நேர போக்குவரத்து சில குறிப்பிட்ட வழித்தடங்களில் ரொம்ப பிசியாக இருக்கும். இந்த நேரம் குழந்தைகளும் பள்ளிக்கு செல்வதால் பேருந்து மற்றும் ரயிலில் நின்று கொண்டு பயணம் செய்ய நேரிடும். டிரெயினோ, பேருந்தோ எதுவாகினும் கிளம்பும்போது கதவை பூட்டி விடுவார்கள்.
வருடத்தின் பெரும்பாலான நாட்கள் குளிராக இருப்பதால் எல்லா வண்டிகளிலும் ஹீட்டர் வசதி இருக்கும். அதுபோல மே, ஜூன், ஜூலை ஆகிய வெயில் காலங்களில் ஏசியை 'ஆன்' செய்து விடுவார்கள். நான்கு சக்கர வண்டிகளில் வருபவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான 'ஸ்ட்ரோலர்' வைத்திருப்பவர்களுக்கு பேருந்துக்குள் தனியிடம் ஒதுக்கப்பட்டிருக்கும்.
அங்கு அவர்கள் வண்டியை நிறுத்தி பெல்ட் போட்டுக் கொள்ளலாம். எல்லா இருக்கைகளிலும் பட்டன் வசதி இருக்கும். நாம் இறங்க வேண்டிய இடம் வரும்போது அந்த பட்டனை 'பிரஸ்' செய்ய வேண்டும். அப்போது டிரைவருக்கு முன்னிருக்கும் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் அது தெரிவிக்கப்பட்டு உடனே அந்த நிறுத்தத்தில் பேருந்து நிற்கும்.
பொதுவாக ஒரு வாரத்திற்கு 36 மணி முதல் 40 மணி நேரம் வரை கம்பெனியை பொறுத்து வேலை நேரம் ஒதுக்கி இருப்பார்கள். அதே சமயம் நிறைய கம்பெனிகளில் உள் மற்றும் வெளியேறும் நேரம் எதுவுமே பஞ்ச் பண்ண தேவையிருக்காது. 'எட்டு மணி நேரம் வேலை செய்வார்கள்' என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் இங்கு வேலை பார்க்கிறார்கள்.
மதிய இடைவேளை பதினொன்றரை மணிக்கு ஆரம்பமாகும். அலுவலக கேன்டீன் மட்டுமல்ல, ஹோட்டல், ரெஸ்டாரன்ட் என எல்லா உணவகங்களிலுமே மதிய உணவு பதினொன்றரைக்கு ரெடியாக இருக்கும்.
அலுவலக கேன்டீனுக்கு தங்களின் 'டீம்' நண்பர்களுடன் செல்வார்கள். ஒன்றரை மணிக்கு கேண்டீக்கு சென்றால் பெரும்பாலும் காலியாக இருக்கும். நம் ஊரிலோ, ஒன்றரை மணிக்குத் தான் கூட்டம் அதிகமாக இருக்கும்.
மதிய இடைவேளை அரை மணி நேரம். எனவே பிற்பகல் மூன்றரை மணிக்கு வீட்டுக்கு கிளம்பி விடலாம். கொரோனாவுக்கு பிறகு நிறைய பேர் வீட்டிலிருந்து வேலை செய்வதால், யாரும் வெள்ளிக்கிழமைகளில் அலுவலகம் வர மாட்டார்கள். அப்படியே வந்தாலும் மதியத்திற்கு மேல் வீட்டுக்கு கிளம்பி விடுவார்கள்.
வெள்ளிக்கிழமைக்கான வேலை நேரத்தை வியாழக்கிழமைகளில் 'மேக்கப்' செய்து விடுவார்கள். அதாவது ஜெர்மெனியில் வியாழக்கிழமையின் வேலை நேரம் அதிகம். காலை 7 முதல் மாலை 6 மணி வரை அரசு அலுவலகங்கள் முதல் தனியார் நிறுவனங்கள் வரை அனைத்துமே நீண்ட நேரம் வேலை நேரமாக அறிவித்திருக்கிறார்கள். அதனால் வெள்ளிக்கிழமைகளில் மதியம் வரைக்கும் தான்.
இவர்களுக்கு 'வீக்-எண்ட்' என்பது வெள்ளிக்கிழமை மதியமே ஆரம்பித்து விடுகிறது. வார நாட்களில் இரவு 8 மணிக்கு முன் சாப்பிட்டு விரைவில் படுக்கைக்கு சென்று விடுவார்கள். அதுவே விடுமுறை நாட்களிலோ தலைகீழ் தான்.
இப்போது பெரும்பாலான அலுவலகங்கள், தங்கள் ஊழியர்களின் உடல், மன நலத்தை கருத்தில் கொண்டு வேலை நேரத்தை 40 மணியிலிருந்து 36 நேரம் மணி நேரமாக குறைத்து விட்டார்கள். அதுபோல தனியார் நிறுவனமாக இருந்தாலும் சரி, அரசு அலுவலகத்தில் வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி, எல்லோருக்குமே ரிட்டயர்மென்ட்க்குப் பிறகு கண்டிப்பாக பென்ஷன் உண்டு.
ஆனால் ரிட்டயர்மென்ட் எப்போது தெரியுமா? 65 -வது வயதில்!