
போரோபுதூர்(Borobudur) - உலகின் மிகப்பெரிய பௌத்த கோவில்... இது, இந்தோனேசியாவில் மத்திய ஜாவாவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய பௌத்தர் நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும். கிபி 8 மற்றும் 9ஆம் நூற்றாண்டுகளில் சைலேந்திர வம்சத்தின் ஆட்சியின்போது கட்டப்பட்டது.
போரோபுதூர் என்றால் 'மலையில் உள்ள புத்தர்' என்று பொருள்படும். கோவிலின் கட்டுமானமும் மலையின் வடிவத்தில் செய்யப்பட்டுள்ளது. கோவிலின் சுவர்களில் புத்தரின் வாழ்க்கை மற்றும் போதனைகள் பற்றிய பல சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது யுனெஸ்கோ (UNESCO) உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள். இது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.
14ஆம் நூற்றாண்டில் ஜாவாவில் இஸ்லாம் பரவிய பொழுது போரோபுதூர் கோவில் கைவிடப்பட்டது. பின்பு 100 ஆண்டுகளுக்கு முன்பு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டது.
சாம்பல் நிற ஆண்டி சைட் போன்ற கற்களால் கட்டப்பட்ட இந்த நினைவுச் சின்னம் 1970களில் யுனெஸ்கோவின் உதவியுடன் மீட்டெடுக்கப்பட்டது. சைலேந்திர வம்சத்தின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில் வடிவமைப்பு ஜாவானிய பௌத்த கட்டிடக்கலையை பின்பற்றுகிறது.
இது 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் பின்பு 14 ஆம் நூற்றாண்டில் ஜாவாவில் இந்து ராஜ்ஜியங்கள் வீழ்ச்சி அடைந்து ஜாவானியர்கள் இஸ்லாத்திற்கு மாறியதைத் தொடர்ந்து கைவிடப்பட்டதாகவும் சான்றுகள் தெரிவிக்கின்றன. இது உலகின் மிகப்பெரிய புத்தர் கோவிலாகும். யோக கர்த்தாவிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இக்கோவில்.
கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் புத்தர் கோவிலை விடவும் 300 ஆண்டுகள் பழமையானது. சுமார் 27 ஆயிரம் சதுர அடி பரப்பளவும், 115 அடி உயரமும் கொண்டது போரோபுதூர். எரிமலை கற்களை கொண்டு கோவிலை முழுவதுமாக கட்டி முடிக்க 75 ஆண்டுகள் ஆனது என்று கூறப்படுகிறது.
புத்தரின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் போரோபுதூர் கோவில் 14ஆம் நூற்றாண்டு முதல் எரிமலை வெடிப்புகளாலும், நிலநடுக்கத்தாலும், பயங்கரவாத தாக்குதலாலும் தொடர் பாதிப்புகளை சந்தித்திருக்கிறது.
புத்த சமயத்தில் மகாயானம், ஹீனயானம் என்ற இரண்டு பிரிவுகள் உண்டு. அவற்றுள் மகாயானப் பிரிவை சேர்ந்தவர்கள் புத்தரை கடவுளாக வழிபடுகிறார்கள். ஹீனயானத்தை சேர்ந்தவர்கள் அவருடைய போதனைகளை மட்டும் பின்பற்றுகின்றார்கள். இது மகாயான புத்தர் கோவிலாகும்.
ஒன்றின் மேல் ஒன்றாக ஆறு சதுர வடிவிலான தளங்களும், அவற்றின் மேல் 3 வட்ட வடிவ மேடைகளும், நடுவில் ஒரு முக்கிய குவிமாடமுமாக காட்சி தருகிறது இந்த கோவில். ஒவ்வொரு தளத்திலும் 72 விகாரங்கள் உள்ளன. விகாரங்கள் ஒவ்வொன்றிலும் அமைந்துள்ள சிறு துவாரங்கள் வழியாகப் பார்த்தால் அழகிய புத்தர் சிலை தெரியும். ஏழு தளங்களையும் சேர்த்து 504 புத்தர் சிலைகள் உள்ளன.
ஜூன் 2012இல் போரோபுதூர் உலகின் மிகப்பெரிய புத்தர் கோவிலாக கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. கோவிலுக்குள் ஆன்சைட் சேவைகள் மற்றும் உணவகங்கள் உள்ளன. கோவில் காலை 6.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும். கோவிலுக்குள் நுழைவதற்கு நுழைவுச்சீட்டு தேவை. முன்கூட்டியே டிக்கெட்டுகள் வாங்கவும் செய்யலாம். அத்துடன் கட்டண பார்க்கிங் வசதியும் உள்ளது.