
நாராவில் நாம் பார்க்கவேண்டிய முதன்மையான இடம் அங்குள்ள டோட்டய்ஜி (Todaiji) என்னும் பெளத்த ஆலயம். ஜப்பானிலுள்ள ஏழு புகழ்பெற்ற மாபெரும் பெளத்த ஆலயங்களில் இதுவும் ஒன்று. கி.பி.738 இல் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. கி.பி 738 இல் கட்டப்பட்ட இந்த ஆலயம் கி.பி.752 இல்தான் வழிபாட்டிற்காகத் திறக்கப்பட்டது. உலகிலுள்ள மிகப்பெரிய பித்தளையாலான புத்தர் சிலை இங்குதான் உள்ளது.
பேரரசர் ஷோமுவின் ஆட்சிக்காலத்தில் பஞ்சம், விபத்து முதலிய இழப்புகள் உருவாயின. (நமது வரலாற்றிலும் தாது வருஷப் பஞ்சம் என்ற மிகப்பெரிய பஞ்சம் மக்களை வாட்டியாதாகப் பெரியோர் வழி அறிகின்றோம்.) மன்னரது ஆணைப்படி ஜப்பான் முழுக்க இத்தகைய சிலைகள் உருவாக்கப்பட்டன. உச்சகட்டமாக இந்தப் பெரிய சிலை வார்க்கப்பட்டது. இச்சிலை 'டாய்பிட்சு' (Daibutsu) எனப்படுகிறது. இது சுமார் 50அடி உயரமுடையது. முகம் மட்டும் 17 அடி; கண்கள் மூன்றடி நீளம் கொண்டவை. மூக்கு இரண்டடி நீளம்; மொத்தத்தில் 500 டன் எடை கொண்டது இச்சிலை.