
காஷ்மீரின் செனாப் பாலம் உலகின் மிக உயரமான ரயில் பாலம் ஆகும். இது ஜூன் 6 ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடியால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
செனாப் பாலத்துடன், கத்ரா-ஸ்ரீநகர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸும் புதிய வழித்தடத்தில் திறக்கப்பட்டது. ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளான காஷ்மீரின் சுற்றுலாத் துறையில் இந்த புதிய சேவை நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
செனாப் நதியின் மீது கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான இந்த ரயில் பாலம் கத்ராவை ஸ்ரீநகருடன் இணைக்கிறது. மேலும், காஷ்மீருக்கு பொருளாதார முன்னேற்றத்தை இப்பாலம் கொண்டு வரும் எனவும் நம்பப்படுகிறது.
செனாப் இரயில் பாலம் ஆற்றுப் படுகையிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரத்திலும், டெல்லியின் குதுப் மினாரை விட கிட்டத்தட்ட ஐந்து மடங்கு உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.
1.31 கி.மீ நீளத்தில் 28,660 மெகா டன் எஃகினைப் பயன்படுத்தி கட்டப்பட்ட இந்தப் பாலம், இப்போது அதிகாரப்பூர்வமாக உலகின் மிக உயரமான ரயில்வே பாலமாகும்.
உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பின் முக்கியப் பகுதியான இந்தப் பாலத்தை கட்டி முடிக்க இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகியது, மேலும், இது இந்திய ரயில்வே வரலாற்றில் மிகவும் சவாலான சிவில் பொறியியல் சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டத்தின் ஆபத்தான நிலப்பரப்பில் கட்டப்பட்ட இந்தப் பாலம், மணிக்கு 266 கிமீ வேகத்தில் வீசும் அதிவேக காற்று, பூஜ்ஜியத்திற்குக் குறைவான வெப்பநிலை மற்றும் அதிக தீவிரம் கொண்ட பூகம்பங்களைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஃப்கான்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (இந்தியா), விஎஸ்எல் இந்தியா மற்றும் தென் கொரியாவின் அல்ட்ரா கன்ஸ்ட்ரக்ஷன் ஆகியவற்றின் கூட்டமைப்பால் கட்டப்பட்ட இந்தப் பாலம், கனேடிய நிறுவனமான WSP ஆல் வடிவமைக்கப்பட்ட எஃகு வளைவு அதிசயமாகும்.
கடுமையான குளிர்கால சூழ்நிலைகளில் செயல்படுவதற்காக வந்தே பாரத் சேவை அதிநவீன தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. உறைபனியைத் தடுக்க சிலிகான் வெப்பமூட்டும் பட்டைகள் மற்றும் பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலையில் தடையற்ற மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதற்கான சென்சார்கள் ஆகியவை இதில் அடங்கும்.
பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக குளிர்காலத்தில் அடிக்கடி துண்டிக்கப்படும் ஒரு பகுதிக்கு பாதுகாப்பான, வேகமான மற்றும் வசதியான பயணத்தை வழங்க இதன் அறிமுகம் உறுதியளிக்கிறது.
செனாப் பாலம் ரூ.42,000 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் 943 பாலங்கள் மற்றும் 36 முக்கிய சுரங்கப் பாதைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் மிக நீளமான ரயில்வே சுரங்கப்பாதை 12.77 கி.மீ நீளத்தில் அமைந்துள்ளது.
வர்த்தகர்களுக்கு, குறிப்பாக ஆப்பிள் விவசாயிகள் மற்றும் கைவினைஞர்களுக்கு, முக்கிய பொருட்களை சந்தைகளுக்கு விரைவாக கொண்டு செல்ல இப்பாலம் உதவும், இதனால் பயண நேரம் ஒரு நாளாகக் குறையும்.
காஷ்மீர் மக்களுக்கு ஆண்டு முழுவதும் சுகாதாரப் பராமரிப்பு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் சிறந்த முறையில் கிடைப்பதை இந்த பாலம் உறுதி செய்கிறது.
காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு நேரடி ரயில் இணைப்பு என்ற கனவு 1970களிலேயே தோன்றியது. பல தசாப்த கால தாமதத்திற்குப் பிறகு, இப்போது அது இறுதியாக நிறைவேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.