

பிரமிடு என்ற வார்த்தையைக் கேட்டதும், எகிப்தின் பிரம்மாண்டமான கிசா பிரமிடுகள்தான் மனதில் தோன்றும். ஆனால், உலகின் மிகப்பெரிய பிரமிடு தளம் எகிப்தில் இல்லை. ஆம், கிசா பிரமிடுகளை விட இரண்டு மடங்கு பெரிய, அதிசயமான ஒரு பிரமிடு தளம் மத்திய அமெரிக்கா பகுதியில் அமைந்துள்ளது.
மத்திய அமெரிக்காவில் உள்ள மெக்சிகோவின் சோலுலா (Cholula) நகருக்கு அருகில், நாம் அறியாத ஒரு பிரமிடு உள்ளது. இதன் பெயர் 'கிரேட் பிரமிட் ஆஃப் சோலுலா' (Great Pyramid of Cholula). இது ஒரு முழுமையான பிரமிடு நகரம்.
எகிப்து பிரமிடுகள் தான் உலகின் மிகப்பெரியவை என்று பலர் நம்புகிறோம். இது ஒருவகையில் உண்மைதான். ஆனால், அதன் உயரத்தைப் பொறுத்தவரை. கிசா பிரமிடு 139 மீட்டர் உயரம் கொண்டது. ஆனால், சோலுலா பிரமிடுவின் சிறப்பு அதன் கன அளவு மற்றும் பரப்பளவு.
கிசா பிரமிடு சுமார் 2.5 மில்லியன் கன மீட்டர். சோலுலா பிரமிடு சுமார் 4.5 மில்லியன் கன மீட்டர்.
இதன் அடிப்பரப்பு கிட்டத்தட்ட 450x450 மீட்டர்கள். அதாவது, 45 ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்து பரந்துள்ளது.
இந்த பிரமிடு மலை போன்று காட்சியளிப்பதால், ஸ்பானியர்கள் 1519-ஆம் ஆண்டு இங்கு வந்தபோது, இதை ஒரு இயற்கையான மலை என்று தவறாக நினைத்து, அதன் உச்சியில் ஒரு தேவாலயத்தை கட்டினார்கள். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான், இது ஒரு மனிதனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான பிரமிடு என்று தெரிய வந்தது.
இந்த பிரமிடு ஒரே நேரத்தில் கட்டப்பட்டது அல்ல. பல நூற்றாண்டுகளாக, பல ஆட்சியாளர்களால், பல கட்டங்களாக கட்டப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது. ஒவ்வொரு புதிய ஆட்சியாளரும், ஏற்கனவே இருந்த பிரமிடு மீது புதிய கட்டுமானங்களை எழுப்பி, அதை இன்னும் பெரிதாக்கினர். இது ஒரு அடுக்கு மாளிகை போல, வெவ்வேறு காலப்பகுதிகளின் கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் கட்டுமானப் பணிகள் சுமார் கி.மு. 300-ஆம் ஆண்டு தொடங்கி, கி.பி. 9-ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து நடந்துள்ளது. இந்த பிரமிடுவை கட்டியவர்கள் டால்டெக்ஸ் மற்றும் சோலுலா மக்கள் என்று நம்பப்படுகிறது. இது ஒருவகையான 'அடோப்' செங்கற்களால், அதாவது களிமண் மற்றும் வைக்கோல் கலவையால் கட்டப்பட்டுள்ளது. இது இயற்கையாகவே புல் மற்றும் மண்ணால் மூடப்பட்டு ஒரு மலையைப் போல மாறியதற்கு இதுவும் ஒரு காரணம்.
20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இதன் உள்ளே ஆய்வு செய்யத் தொடங்கினர். அவர்கள் சுரங்கப்பாதைகளைத் தோண்டி, உள்ளே சென்றபோது, இது ஒரு மலையல்ல, ஒரு பிரம்மாண்டமான பிரமிடு என்பதை அறிந்து வியந்து போயினர். இந்த பிரமிடுக்குள் கிட்டத்தட்ட 8 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பிரமிடுவின் பல்வேறு அடுக்குகளையும், அதன் கட்டுமான முறைகளையும் வெளிப்படுத்துகின்றன.
ஒரு காலத்தில், சோலுலா மத்திய அமெரிக்காவின் மிக முக்கியமான வணிக மற்றும் மத மையங்களில் ஒன்றாக இருந்தது. இந்த பிரமிடு, வான தெய்வமான 'குவெட்சால்கோட்டில்' வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது. இது அப்போதைய மக்களின் ஆன்மீக நம்பிக்கையின் மையமாகத் திகழ்ந்தது என்றும் கருதப்படுகிறது.
இன்று, சோலுலா பிரமிடு மெக்சிகோவின் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். பார்வையாளர்கள் அதன் சுரங்கப்பாதைகளில் நடந்து சென்று, பிரமிடுவின் வெவ்வேறு அடுக்குகளைக் காணலாம். பிரமிடுவின் உச்சியில் உள்ள தேவாலயம், பிரமிடுவின் மீது கட்டப்பட்டதால், இது ஒரு தனித்துவமான வரலாற்று சிறப்புடன் திகழ்கிறது.
உலக வரலாற்றில் பல மர்மங்களும், அதிசயங்களும் மறைந்துள்ளன. எகிப்தின் பிரமிடுகள் எப்படி உலகின் அதிசயமாகக் கருதப்படுகிறதோ, அதேபோல மெக்சிகோவின் சோலுலா பிரமிடும் அதன் பிரம்மாண்டமான அளவு, தனித்துவமான கட்டுமானம் மற்றும் மறைக்கப்பட்ட வரலாறு காரணமாக ஒரு தனி இடத்தைப் பெறுகிறது.