சப்பாத்தி என்ற உணவு அறிமுகமாகி நூறு வருடங்கள்தானா ஆகிறது? அட போங்கப்பா, சும்மா டுபாக்கூரு….
அது எப்படி என்று யோசித்துக் கொண்டே சப்பாத்தியின் சரித்திரத்தைத் தெரிந்து கொண்டு விடலாம், வாங்க.
ரொட்டி வகையைச் சேர்ந்த பொதுவான இந்திய உணவுதான் சப்பாத்தி. இந்தியாவில் மட்டுமல்ல, தெற்கு ஆசிய நாடுகள், கரீபியன் திவுகள், மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் சப்பாத்தி மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப்படுகிறது.
இந்தியச் சப்பாத்தியை மேலே சொன்ன நாடுகளுக்குக் கொண்டு சென்றவர்கள் வட இந்திய வியாபாரிகள்தான். கோதுமை மாவில் இவ்வாறு தயாரிக்கப்பட்ட சப்பாத்தியின் சுடு மணம் அக்கம் பக்கத்தவரை அப்படியே ஈர்த்தது. பேக்கரியில் பிஸ்கட், ரொட்டி தயாரிக்கும்போது பரவும் அதே மணம்! என்னவென்று எட்டிப் பார்த்தால்… அடுப்பில் இரும்புக் கல் ஏற்றி அதில் வட்டமான சப்பாத்தியைப் போட்டு வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது தெரிந்தது. அவ்வளவுதான், அந்த மணமிக்க உணவு, சுவை மிக்கதாகவும் இருக்கும் என்று நம்பிய சுற்றத்தார் எல்லோரும் வந்து அந்த ரெஸிபியைத் தெரிந்து கொண்டார்கள். அன்றிலிருந்து அவர்களுடைய பிரியமான உணவு வகைகளில் ஒன்றானது சப்பாத்தி.
கோதுமை மாவுடன் நீர், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து வட்டமாக, மெலிதாகத் தட்டி எடுத்து தோசைக்கல்லில் இட்டு, அடுப்பு நெருப்பில் வாட்டி எடுக்கப்படும் சப்பாத்தி, மாலத்தீவுகளில் ரொசி என்று அழைக்கப்படுகிறது.
‘சப்பாத்‘ என்ற ஹிந்தி சொல்லின் பொருள் ‘தட்டை‘ என்பதாகும். இது பிசைந்த மாவை எடுத்து உள்ளங்கைகளுக்குள் உருட்டி, பிறகு சப்பாத்திக் கட்டையால் மெல்ல உருட்டி, தட்டையாக உருவாக்கும் முறை.
16ம் நூற்றாண்டைச் சேர்ந்த அபுல் ஃப்சல் எழுதிய அயினி அக்பரி மற்றும் முகலாய மன்னர் அக்பரின் அமைச்சர் குறிப்புகளிலும் சப்பாத்தி இடம் பெற்றிருக்கிறது.
மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சியில் ஒருவகை கோதுமை தானியத்தைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இது இந்தியாவில் விளையும் கோதுமை தானியங்களில் ஒன்றை ஒத்திருக்கிறது.
தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் கோதுமை, வித்தியாச சூழ்நிலையில் அறிமுகமானது.
அமெரிக்காவில் அபிரிமிதமாக கோதுமை விளைந்தபோது, உள்நாட்டு தேவை போக, ஏழை நாடுகளுக்கு இலவசமாக ஏற்றுமதி செய்தது போக (இதற்கு பி.எ.480 திட்டம் – அமைதிக்கான உணவு என்று பெயர்) மிஞ்சியதை கப்பலில் ஏற்றி அப்படியே கடலில் கொண்டு போய்க் கொட்டினார்கள்.
இந்தியாவிலும், குஜராத்தில் இதேபோல ஏகமாய் விளைந்தது கோதுமை. அன்றைய அரசாங்கம், உபரி கோதுமையை வீணாக்க விரும்பவில்லை. அப்படியே தென்னிந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. கூடவே, நீரிழிவு நோயாளிகளுக்கு அரிசிக்குச் சரியான மாற்று, நோய் சீராகும் என்ற பிரசாரம் வேறே! (ஆனால் அது உண்மையல்ல என்பது பின்னாளைய ஆராய்ச்சி தெரிவித்தது) இதற்குள் கோதுமை குறிப்பாக தமிழ்நாட்டில் பிரபலமாகிவிட்டது.
அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் ஓட்டலில் ஒருவர் சப்பாத்தி-குருமா சாப்பிடுகிறார் என்றால் அவர் அந்தஸ்து மிக்கவர்! எதிரே இரண்டு இட்லி-சாம்பார் சாப்பிடுபவர் அந்த சப்பாத்தியை ஏக்கத்துடன் பார்ப்பார்!
அதுசரி, சப்பாத்திக்கு இப்படி ஒரு பாரம்பரியம் இருக்க அதற்கு நூறு வயது என்று என்ன புருடா?
அது கேரளத்தில்.
1924ம் ஆண்டு மார்ச் 30ம் நாள் முதல் 23 நவம்பர் 1925வரை அங்கே வைக்கம் போராட்டம் நடந்தது. வைக்கம் கோயிலின் சுற்றுப்புறங்களில் நடமாட குறிப்பிட்ட சாதியினரைத் தவிர மற்றவர்களுக்குத் தடை விதித்ததால் உண்டான அகிம்சைப் போராட்டம் அது. ரொம்பவும் சாத்வீகமான போராட்டமாயிற்றா, அதனால் போராளிகளுக்குச் சரியான சாப்பாடு கிடைக்கவில்லை.
அந்த சமயத்தில் அங்கே வசித்து வந்த சீக்கியர்கள் அந்தப் போராட்டத்துக்குத் தம் ஆதரவைத் தெரிவித்ததோடு, போராளிகளுக்கு, தாம் தயாரித்த சப்பாத்தியும் உருளைக் கிழங்கு மசாலாவையும் கொடுத்தார்கள்.
அதுவரை சப்பாத்தியை ருசிக்காத மலையாளிகள் அன்று முதல் அதன் சுவையில் மயங்கினார்கள். அப்படி அவர்களுக்கு அறிமுகமான சப்பாத்திக்குதான் இப்போது நூறு வயது!
ஓகேயா?