
இன்றைய நவீன வாழ்க்கை முறையின் காரணமாக டீன் ஏஜிலேயே சிலருக்கு நரை முடி வருகிறது. வயதான காலத்தில் நரை முடி என்பது இயல்பானது. ஆனால் இளம் வயதில் ஏற்படும் நரைமுடி கவலையை உண்டாக்கும். இளநரை வராமல் தடுக்க நல்ல உணவு பழக்கமும், போதுமான உறக்கமும், மன அழுத்தம் இன்றி வாழ்வதும் உதவும்.
1) முடி பராமரிப்பு:
முடியை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். எண்ணெய் காணாது இருக்கும் வறண்ட தலை பொடுகையும், இளநரையையும் ஏற்படுத்தும்.
கெமிக்கல் கலந்த ஷாம்பூக்களை பயன்படுத்தாமல் இயற்கை ஷாம்பூக்கள் மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்தலாம். செம்பருத்தி இலை, வெந்தயம், சோப்புக்காய் போன்றவை இயற்கையாகவே சிறந்த கண்டிஷனர்களாக செயல்படும்.
2) மருதாணி இலை + கடுகு எண்ணெய்:
மருதாணி இலைகளை காம்பு நீக்கி சுத்தம் செய்து வைத்துக்கொண்டு வாணலியில் கடுகு எண்ணெய்விட்டு சூடு பண்ணி அதில் இந்த மருதாணி இலைகளைப்போட்டு அடுப்பை அணைத்து விடவும். ஆறியதும் ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்தி தினமும் இந்த எண்ணையை பயன்படுத்தி வர நரைமுடி போய் கருமை உண்டாகும்.
3) நெல்லிக்காய் பொடி:
தேங்காய் எண்ணெயை சுடவைத்து அதில் நெல்லிக்காய் பொடியைக் கலந்து தலையில் தேய்த்து மென்மையாக மசாஜ் செய்து அரை மணிநேரம் கழித்து குளித்துவிட இளநரையை போக்கும்.
4) செம்பருத்தி இலை:
10 செம்பருத்தி இலைகளை எடுத்து கழுவி மிக்ஸியில் சிறிது நீர் விட்டு அரைத்து வடிகட்டி தலையில் தேய்த்து மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து குளித்து வர முடி கொட்டுவது குறைவதுடன் இளநரையையும் போக்கும். உடல் உஷ்ணத்தை தணிக்கும். சிறந்த ஷாம்பூ + கண்டிஷனராக செயல்படும்.
5) வெந்தயம் + தயிர்:
ஒரு ஸ்பூன் வெந்தயத்துடன் சிறிது தயிர் கலந்து இரவே ஊற வைத்து விடவும். காலையில் மிக்ஸியில் அரைத்து தலையில் தேய்த்து பத்து நிமிடங்கள் கழித்து முடியை அலச இளநரை, உடல் சூட்டால் முடி கொட்டுதல் போன்ற பிரச்னைகள் நீங்கி முடி வெல்வெட்டு போல் சில்கியாக இருக்கும்.
6) சோப்புக்காய்:
இதனை நான்கு எடுத்து தட்டி வெதுவெதுப்பான நீரில் போட்டு ஊற விட்டு அரை மணிநேரம் கழித்து கையால் நன்கு கசக்க நுரைத்து வரும். இதனை தலையில் தேய்த்து குளிக்க நல்ல பலன் கிடைக்கும்.
7) உணவுப் பழக்கம்:
நெல்லிக்காய், முளைகட்டிய பயறு, பச்சைக் கீரைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.
நெல்லிக்காய் ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம். நெல்லிக்காய் லேகியம் கடைகளில் கிடைக்கிறது. அதை வாங்கி சாப்பிடலாம்.
கறிவேப்பிலையை பொடியாகவோ துவையலாகவோ அல்லது கறிவேப்பிலையை பொடித்து மோரில் போட்டு உப்பு கலந்து பருகவோ நல்ல பலன் கிடைக்கும்.
விட்டமின் பி 12, இரும்புச்சத்து, தாமிரம் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதும் பலன் அளிக்கும்.
8) மன அழுத்தத்தை போக்க:
யோகா, தியானம் போன்ற மனஅழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் பயிற்சிகள் செய்வதற்கு நேரம் ஒதுக்கி செய்துவர மன அழுத்தத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம். இளநரை பற்றிய கவலை, மன அழுத்தத்தை உண்டு பண்ணும்.
9) உறக்கம்:
தினமும் ஏழு எட்டு மணி நேரம் தூங்குவது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு இன்றிமையாதது.
10) இயற்கை முறைகள்:
இஞ்சியை தோல் நீக்கி துருவி தேன் கலந்து சாப்பிட நரைமுடி வராமல் தடுக்கலாம்.
கரிசாலை கற்பம் என்ற சித்த மருத்துவ மாத்திரைகள் இளநரைக்கு உதவும். மருத்துவரை கலந்தாலோசித்து எடுத்துக்கொள்ளலாம்.
இளநரை பிரச்னைக்கு மருத்துவரை கலந்து ஆலோசனை பெறுவதும், சிகிச்சை எடுத்துக்கொள்வதும் அவசியம்.