
இனி சோர்வான, பொலிவிழந்த சருமத்திற்கு குட்பை சொல்லுங்கள். உங்கள் வீட்டு சமையலறை மற்றும் தோட்டத்தில் கிடைக்கும் எளிய பொருட்களைக் கொண்டு பளபளப்பான, ஆரோக்கியமான சருமத்தை பெற முடியும். உங்கள் சரும அழகை இயற்கையாகவே மேம்படுத்தும் 15 வழிமுறைகளை இந்தப் பதிவில் காணலாம்.
* தூளாக்கிய ஆரஞ்சு தோல், ஒரு ஸ்பூன் ஓட்மீல், சிறிது பன்னீர் கலந்து முகத்தில் தேய்த்து பத்து நிமிடங்கள் ஊற வைத்துக் கழுவ முகத்தில் உள்ள பழைய இறந்த செல்கள் நீங்கி பளிச்சென்று ஆகும்.
* வீட்டில் உள்ள காய்கறி பழத்தோல்களை சேர்த்து அரைத்து அத்துடன் சிறிது மூல்தானி மட்டி, சிறிது மஞ்சள் தூள், சில துளி எலுமிச்சை சாறு மற்றும் சிறிது பால் கலந்து முகத்தில் பூசி இருபது நிமிடம் கழித்துக் கழுவ முகம் கண்ணாடி போன்று ஜொலிக்கும்.
* மூக்கின் நுனியிலும் மூக்கின் ஓரங்களிலும் இருக்கும் சொரசொரப்பு நீங்க பாலில் அரிசிமாவு கலந்து அதை ஸ்க்ரப் போல் தேய்க்க அவை மறையும்.
* முதுகுப் பகுதி வெயில் பட்டு மற்ற பகுதிகளை விட கருத்துப் போயிருக்கும். இதைப் போக்க எலுமிச்சைச் தோலால் அந்தப் பகுதியை தேய்த்து ஊற வைத்துக் கழுவ நாளடைவில் கருமை மறையத் தொடங்கும்.
* அழகுப் பொருட்களின் ராணி தேன். சருமத்தை பளிச்சிட செய்யும் இதை ஃபேஸ் பேக்கில் கலந்து பயன்படுத்தலாம். எண்ணெய் சருமம் உள்ளவர்கள் மட்டும் தவிர்த்து விடவும்.
* முகத்தில் அழுக்கை நீக்கி சருமம் பளபளப்பாக்க கடலை மாவு மற்றும் பச்சை பயறு மாவு இவைகளை ஸ்க்ரப்பாக பயன்படுத்தலாம். இவை முகத்தின் தசைகளை இறுக்கமாக்கும்.
* வெங்காயம் சிறந்த கிருமிநாசினி ஆகும். வெங்காயத்தை மசித்து நாலைந்து சொட்டு தேன் சேர்த்து முகத்தில் தேய்த்துக் கழுவ முகச் சுருக்கம் நீங்கும்.
* பால் திரிந்து விட்டதா. தூக்கி கொட்டாதீர்கள் தெளிந்த நீரை வடிகட்டி திப்பிகளை உடல் முழுவதும் தேய்த்து ஊற வைத்துக் குளிக்க வறட்சியைப் போக்கும் இயற்கையான மாய்ஸ்சரைசர் ஆகும்.
* கழுத்துப் பகுதியில் உள்ள கருமையைப் போக்க இரவில் கடுகு எண்ணையைத் தேய்க்கவும். காலையில் இளஞ்சூடான வெந்நீரில் பஞ்சை வைத்து அழுத்தித் துடைக்கவும்.
* சுடு நீரில் வேப்பிலை போட்டு அதை ஆவி பிடிக்க முகம் மிருதுவாக மாறும்.
* முருங்கை இலைச் சாறுடன் தேன் கலந்து முகத்தில் தடவ கரும் புள்ளிகள் மறையும்.
* சருமத்தில் தோன்றும் கருமை மறைய பார்லியை பொடியாக்கி அதனுடன் எலுமிச்சை மற்றும் பால் கலந்து முகம் கை கால் கழுத்துப் பகுதிகளில் தடவவும். உலர்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவ, கருமை மறையும். .
* சருமத்திற்கு தேவையான ஊட்டங்கள் முட்டை கோஸில் உள்ளன. முட்டை கோஸை அரிந்து சர்க்கரைப் பாகுடன் சேர்த்து லேசாக கொதிக்க வைத்து இறக்குங்கள். ஆறிய பிறகு சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து மேலே இருக்கும் நீரை வடித்து ஃப்ரிட்ஜில் பத்திரப்படுத்தி முகத்தை கழுவி வர முகத்திற்குப் பொலிவு கிடைக்கும்.
* ஆப்ரிகாட் பழங்களை மசித்து முகத்தில் பூசிக் கழுவ இளமையான முகம் பெறலாம்.
* உங்களுக்கு இயற்கையான மாய்ஸ்சரைசர் வேண்டுமா? கற்பூரத்தை எடுத்து தேங்காய் எண்ணையில் குழைத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவிக் குளித்துப் பாருங்கள் புத்துணர்வு பெறுவீர்கள்.