
ஒரு பெண்ணின் உதடு சிவந்திருந்தால் அதை பார்ப்பவர்கள் செர்ரி பழம் போன்ற உதடு என்று பெருமைப்படுத்தி பேசுவார்கள். சிலர் கோவைப்பழம் என்று குறிப்பிடுவார்கள். இலக்கியங்களில் செம்பவள போன்ற உதடு அமைய பெற்றவர்களை செம்பவள வாயாலே என்று உதட்டை சிறப்பிக்காத கவிஞர்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு சிறப்பு பெற்றது பெண்களின் உதடு. அவைகள் கூறும் இலட்சணக் குறிப்புகளை இப்பதிவில் காண்போம்!
சிலரின் கீழ் உதடு சிறிது விலகி தாமரை இதழைப் போலவோ, சிவந்த ஆலம்பழத்தை போலவோ ஒளிவீசும் வகையில் அமையப்பெற்ற பெண்கள் பலராலும் போற்றப்படும் உத்தம குணங்களை உடைய உத்தமிகளாக திகழ்வார்களாம். தர்மம் செய்வதில் ஆர்வம் உடையவர்கள் இவர்களே!
குடும்பத்தில் எல்லோரிடத்தும் மிகுந்த பாசம் உடையவர்களாகவும், கணவனை மதித்து கணவனின் சொற்களுக்கு அடங்கி நடப்பவர்களாகவும் இருப்பார்களாம். எங்கு சென்றாலும் செல்வாக்கும், முகராசியும் உடையவர்களாகவும், ஆத்ம சுத்தமும், சரீர சுத்தமும், தெய்வ பக்தியும் கொண்டவர்களாகவும், திகழ்வார்கள் என்றும், இவர்கள் குடும்பத்தின் குலவிளக்காக பிரகாசிப்பதோடு சமுதாயத்திலும் புகழ்பெற்று விளங்குவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிர்பாராத புதையல், தனம் கிடைக்கும் யோகமும் உண்டாகும் என்கிறது உதடுகள் பற்றிய இலட்சண சாஸ்திரம்.
சிலரின் உதடுகள் சிவந்து செம்பவளத்தைப் போலவும் கோவை பழத்தைப் போலவும் இருக்கும். இந்த உதடுகள் விரிந்து மலரும் பொழுது சிவந்த பூக்கள் பேசுவதுபோல் இருக்கும். அப்பேற்பட்ட பெண்கள் பயபக்தி உடையவர்களாகவும், இறக்கமும் தயாளமான குணமும் உடையவர்கள் ஆகவும், தர்மம் செய்ய தயங்காதவர் களாகவும் தெய்வ அனுகூலத்தால் கடினமான காரியங்களையும் எளிதாக நிறைவேற்றக்கூடிய பாக்கியத்தை உடையவர்களாகவும் இருப்பார்கள் என்றும், இவர்களால் கணவனுக்கும், புத்திரர்களுக்கும் ராஜயோக பாக்கியங்கள் அமையும் என்று லட்சண குறிப்பு கூறுகிறது.
சில பெண்களின் உதடுகளைப் பார்த்தால் சிவந்தும், மிருதுவாகவும், பளபளப்பாகவும், எப்பொழுதும் லிப்ஸ்டிக் போட்டதை போன்றும் இருக்கும். இப்படிப்பட்ட உதடுகளை உடைய பெண்கள் சிறந்த சிந்தனையாளர்களாகவும், நல்ல ஆலோசனை செய்து முடிவுகளை சொல்வதில் வல்லவர்களாகவும், இருப்பார்களாம்.
கற்பனையும் கவிதை ஏற்கும் ஆற்றலும் இவர்களுக்கு இயல்பாகவே வரும் என்கின்றனர். கலைதுறையிலும் சிறந்து விளங்குவார்கள். நற்குணமும் நல்ல நடத்தையை உடைய இவர்கள் கலைத்துறைகளில் கிடைக்கும் பணம், பெருமை, புகழ் இவற்றைவிட குடும்ப கவுரவத்தையே பெருமதிப்பாக கருதுவார்கள். கணவனுக்கு இனியவளாகவும், பிள்ளைகளுக்கு பெருமை தரும் அன்பு தாயாகவும் இருப்பதிலேயே இவர்கள் மிகவும் கவனம் செலுத்துவார்கள் என்கிறது லட்சண சாஸ்திரம். மானத்தில் கவரிமான் போன்ற பண்புடையவர்கள் இவர்கள்தானோ!
சில பெண்களைப் பார்த்தால் பெரியவர்கள் சொல்லும் சொல்லுக்கு எதிர்த்து பேசாமல் அப்படியே ஏற்று நடக்கும் இயல்பு உடையவராகவும், எவ்வளவு செல்வம் இருந்தாலும் அதை வெளியில் காண்பித்துக் கொள்ளாதவர்களாகவும் இருப்பார்கள். அவர்களைப் பற்றிய உதட்டு குறிப்பு சொல்லும் கணக்கு என்னவென்றால் மிருதுவான சிவந்த உதடுகளை உடைய பெண்கள் அடக்கமுடைய பெண்கள் ஆகவும், கணவனின் அன்புக்கும், சொல்லுக்கும் கட்டுப்பட்டவராகவும் இருப்பார்களாம்.
இவர்களுக்கு இயல்பாகவே சிக்கனமாக செலவு செய்யும் குணமும், குடும்ப கவுரவத்தை பெரிதாக மதிக்கும் மனப்பான்மை உடையவர்களாகவும் இருப்பார்கள். ஆடை அணிகளையும், அலங்காரங்களையும் ஆடம்பரத்திற்காக அணிய மாட்டார்கள். தம்மை பிரமாதமாக அழகுப்படுத்திக்கொள்ள ஆசைப்பட மாட்டார்கள். என்றாலும் இவர்கள் இயற்கையிலேயே அழகாகவே இருப்பார்கள். இவர்கள் கணவனின் மனம் அறிந்து நடந்து கொள்வதில் பெருமை அடைவார்கள் என்கிறது சிவந்த உதடுகளை உடைய இலட்சண குறிப்பு.
காது கேளாத சிலர் நம் உதட்டசைவை வைத்தே என்ன பேசுகிறோம் என்பதை புரிந்துகொண்டு பதில் கூறுவார்கள். செய்யும் செயலை செவ்வனே செய்து முடிப்பார்கள். இவர்களின் நுண்ணிய அறிவுத்திறன் போற்றப்பட வேண்டியது. எந்த மொழியையும் அழகாக உச்சரித்து பேசுவதற்கு உதவி புரிவது உதடுகளே!
பெண்கள் உடுத்தும் புடவைக்கு அழகு சேர்ப்பது அதன் 'பார்டர்போல்' நம் வாய்க்கு திறவுகோலாக அமைந்திருப்பது உதடுகள்தான். ஆதலால் உதடுகள் சுருக்கமாகாமலும், வெடிக்காமலும் எப்பொழுதும் எண்ணெய் பசையுடன் உள்ளதாக, ஆரோக்கியம் நிறைந்ததாக பேணி பாதுகாக்க வேண்டியது நம் கடமை. அங்கிருந்துதான் வாய் வழி சுகாதாரம் பாதுகாக்கப்படும் என்பதை உணர்வோம். அதன் வழி நடப்போம்! அப்பொழுது உதடுகள் நாம் நினைத்தபடி அழகு பெறும்.