
கோடையில் உடலில் வெப்பம் அதிகமாகும்போது, கூந்தலில் முடி உதிர்வு அதிகரிக்கும். அனல் காற்று வீசும் போது தலையிலும் சூடு அதிகரித்து, எண்ணெய் பிசுபிசுப்பு மற்றும் வறட்சி ஆகியவை காரணமாக முடிகொட்டுவது அதிகரிக்கும். முடிகொட்டுவதை தடுத்து முடி வளர்ச்சியை அதிகரிப்பதற்காக ஹெல்த்தியான ஹேர் பேக் போட்டு குளித்து வந்தால் முடி உதிர்வதை தடுத்து முடிக்கு பளபளப்பையும் ஏற்படுத்தும்.
அந்த 5 வழி முறைகள்
செம்பருத்திப் பூ.
செம்பருத்தி பூக்களை அல்லது (செம்பருத்தி பூ பொடி) சேகரித்து வெயிலில் உலர்த்தி நன்கு காய்ந்ததும் மிக்சியில் அரைத்து பொடியாக்கி வைக்கவும். தேவைப்படும்போது இதிலிருந்து ரெண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து பேஸ்ட்போல குழைத்து தலையில் தடவி 20 நிமிடங்கள் உலரவிட்டு பின் குளிர்ந்த நீரில் தலையை அலசி இயற்கையாக காயவிட்டால் முடி உதிர்வதை தடுத்து முடிக்கு பளபளப்பு கொடுக்கும்.
தயிர்.
வெயிலால் உச்சந்தலையில் உண்டாகும் எரிச்சலை தடுத்து, உடல் வெப்பத்தை தணிக்க தயிர் உதவும். கூடவே கூந்தல் உதிர்வதையும் தடுக்கும். அதிக வெப்பத்தால் முடி கொட்டுவதை தவிர்க்க தயிருடன் சிறிது கற்றாழை ஜெல் ஒரு டீஸ்பூன் கலந்து கூந்தலில் தடவி அரை மணிநேரம் ஊறவைத்து குளிர்ந்த தண்ணீரில் கூந்தலை அலசினால், கூந்தலை மென்மையாக்கி முடி உதிர்வையும் தடுக்கும்.
முடக்கத்தான் கீரை.
முடக்கத்தான் கீரை உடலில் உள்ள எலும்புகளை பாதுகாப்பது போலவே கூந்தலையும் வலுவாக்குகிறது. வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை நன்றாக மைய அரைத்து தலையில் தேய்த்து 10 நிமிடங்கள் ஊறியதும் குளிர்ந்த தண்ணீரில் கூந்தலை அலசி எடுத்தால் முடி கொட்டுவது நிற்கும். முடி கரு கருவென வளரும். மூன்று மாத காலம் இதனை செய்து பார்த்தால் முடி கொட்டுவது நிற்கும்.
விளக்கெண்ணெய்.
விளக்கெண்ணையில் வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா அதிகம் உள்ளதால் முடி உதிர்வதை குறைக்கும். மாதம் இரண்டு முறை தேங்காய் எண்ணெயோடு விளக்கெண்ணெய் கலந்து சமஅளவு எடுத்து லேசாக சூடாக்கி லேசான சூட்டில் உச்சந்தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து சீயக்காய் பொடிகொண்டு கூந்தலை அலசினால், உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதுடன் கூந்தல் அடர்த்தியாகவும் வளரும்.
சின்ன வெங்காய சாறு.
தலையில் நோய் தொற்று காரணமாக முடி உதிர்வு ஏற்படும். சின்ன வெங்காயச்சாறை தேங்காய் எண்ணெயுடன் சமஅளவு கலந்து தலைக்கு தடவி மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து மைல்ட் ஷாம்பூபயன்படுத்தி கூந்தலை அலசினால் கூந்தல் பொலிவடைந்து, பொடுகு மறைந்து கூந்தல் முடி வளரும்.
முட்டை வெள்ளைக் கரு.
முட்டையின் வெள்ளை கருவுடன் சிறிது எலுமிச்சைசாறு கலந்து கூந்தலுக்கு பேக் போட்டு அரை மணிநேரம் ஊறவைத்த பின் மைல்டான ஷாம்பு கொண்டு கூந்தலை அலசினால், தலையில் உள்ள பாக்ட்ரீயா தொற்றைத் தடுத்து கூந்தலுக்கு தேவையான நீர் சத்தினை வழங்குகிறது. இது கூந்தலில் பொடுகு உண்டாவதை தடுத்து கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
வெளியில் செல்லும்போது கூந்தலுக்கு ஸ்கார்ப் அணிந்து தலை முடியை ரப்பர் பேண்ட் அல்லது கிளிப் போட்டு வெயில் செல்வதால் வெளிக்காற்றில் கூந்தல் அலையாமல் மென்மையாகவும், பறக்காமல் முடி உதிர்வைதை தடுக்கும்.