5 நிமிடங்களில் மெல்லிய கூந்தலையும் அடர்த்தியாக மாற்றும் அற்புத ஹேர் ஹேக்ஸ்!

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு உடனடியாக அழகிய தோற்றத்தைத் தரும் எளிய ஹேர் ஸ்டைல் ரகசியங்கள்!
அடர்த்தியான கூந்தல்
அடர்த்தியான கூந்தல்Gemini image
எஸ்.விஜயலட்சுமி

விஜி ரவி என்கிற பெயரில் இதுவரை 40 சிறுகதைகள், 55 ஒரு பக்க கதைகள் 17 புத்தக விமர்சனங்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகளை கல்கி, மங்கையர் மலர், அவள் விகடன் பெண்கள் மலர, குங்குமம் தோழி போன்ற பிரபல இதழ்களில் எழுதியுள்ளார். மங்கையர் மலர், வைகை இணைய இதழ் அனிச்சம், ஆனந்தசந்திரிகை மின்னிதழ் சங்கப் பலகை முகநூல் குழுமம் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பங்கு பெற்று பல பரிசுகளை பெற்றுள்ளார். தோனி எஃப் எம் ல் வாரம் ஒரு முறை கதை சொல்கிறார். கல்கி இணைய இதழில் தன்னம்பிக்கை, குடும்பம் வாழ்வியல், ஆரோக்கியம் ஆன்மீகம், ஃபேஷன், உளவியல் சம்பந்தமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on

இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வீட்டு வேலைகளைக் கவனித்து அலுவலகத்திற்கும் நேரத்தோடு செல்வது ஒரு சவாலான விஷயம். அதிலும் அடர்த்தி குறைவான தலைமுடி கொண்ட பெண்களுக்குத் தலை அலங்காரம் செய்வது அத்தனை எளிதல்ல. தங்களது கூந்தலை அடர்த்தியாகவும் அழகாகவும் மாற்ற வெறும் ஐந்து நிமிடங்கள் போதும். அதற்கான சில எளிய வழிமுறைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. மாற்றி வகிடு எடுத்தல்:

வழக்கமாக நேர் வகிடெடுக்கும் பழக்கம் இருந்தால் அதை முதலில் மாற்றுங்கள். இந்த முறையில் தலைமுடி மண்டையோட்டோடு ஒட்டிக்கொண்டு மேலும் மெல்லியதாகத் தெரியும். அதற்குப் பதிலாகச் சீப்பின் கூரான முனையைக் கொண்டு ஜிக்-ஜாக் வடிவில் வகிடெடுக்கலாம். அதேபோல தினமும் ஒரே இடத்தில் வகிடெடுக்காமல் சற்று தள்ளியோ அல்லது பக்கவாட்டிலோ வகிடெடுக்க வேண்டும். இதனால் முடியின் வேர்ப்பகுதி சற்று தூக்கினாற் போன்று இருக்கும். தலைமுடி இருமடங்கு அடர்த்தியாக இருப்பது போலத் தெரியும்.

2. பேபி பவுடர்:

வாரத்தின் எல்லா நாட்களிலும் தலைக்குக் குளித்துத் தயாராக முடியாது. அலுவலகத்திற்குப் புறப்படும் அவசரத்தில் தலைமுடி பிசுபிசுப்பாகவும் எண்ணெய்ப் பசையோடும் இருந்தால், முடியின் அடர்த்தி குறைந்து மெல்லியதாகத் தோற்றமளிக்கும்.

இதைச் சரிசெய்ய தலைமுடியின் வேர்ப்பகுதிகளில் சிறிதளவு உலர்ந்த ஷாம்பு தடவி, விரல்களால் லேசாகத் தேய்த்துவிட்டால் போதும். குழந்தைகளுக்குப் போடும் பேபி பவுடரையும் பயன்படுத்தலாம். இது முடியில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி, முடிக்கு நல்ல பொலிவையும் அடர்த்தியான தோற்றத்தையும் தரும்.

அடர்த்தியான கூந்தல்
அடர்த்தியான கூந்தல்Gemini image

3. இரு அடுக்கு போனிடெய்ல்:

முடியைத் தூக்கி ஒற்றைக் குதிரைவாலாகப் போடும்போது முடி அடர்த்தியற்றும் மெலிதாகவும் தெரியலாம். அதற்குப் பதிலாக இரு அடுக்கு போனிடெய்ல் போடலாம். முடியை மேல் பகுதி, கீழ் பகுதி என இரண்டு பாகங்களாகப் பிரித்துக் கொண்டு, கீழ்ப்பகுதியில் இருக்கும் முடியைச் சிறிய ரப்பர் பேண்ட் போட்டு கட்ட வேண்டும். மேல் பகுதியில், கீழ் போனிடெய்ல் மறையுமாறு மேல் முடியை எடுத்து மற்றொரு போனிடெய்ல் கட்ட வேண்டும். இது வழக்கமான முடியை விட இருமடங்கு நீளமாகவும் மிகவும் அடர்த்தியாகவும் தோற்றமளிக்கும்.

இதையும் படியுங்கள்:
காபி தூளை இப்படி யூஸ் பண்ணிப் பாருங்க... உங்க முடி காடு மாதிரி வளரும்!
அடர்த்தியான கூந்தல்

4. கிளா க்ளிப்

வழக்கமான போனிடெய்ல் போட்ட பிறகு, அந்த ரப்பர் பேண்டிற்கு நடுவில் ஒரு சிறிய 'கிளா க்ளிப்' (Claw Clip) மாட்டி, அதன்மேல் முடியை எடுத்துவிட்டு மூடினால் குதிரைவால் தொங்காமல் தூக்கலாகவும் அடர்த்தியாகவும் தெரியும்.

5. தலைமுடியைத் தலைகீழாகச் சீவுதல்:

மிகக் குறைந்த நேரத்தில் அற்புதம் செய்யக்கூடிய ஒரு வழிமுறையாகும். தலையைக் கவிழ்த்துக்கொண்டு எல்லா முடியையும் முன்னோக்கிப் போட வேண்டும். அகலப் பற்கள் இருக்கும் சீப்பைக் கொண்டு பின்புறத்திலிருந்து முன்னோக்கிச் சீவ வேண்டும். பின்னர் தலையை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்து விரல்களால் முடியைச் சரிசெய்ய வேண்டும்.

இது முடியின் வேர்களுக்கு உடனடியாக அடர்த்தியைக் கொடுத்து, தலைமுடியும் அடர்த்தியாகத் தோற்றமளிக்கும். உச்சி முடியின் சிறிய பகுதியை எடுத்து அதன் பின்புறம் சீப்பைக் கொண்டு மேலிருந்து கீழாக லேசாகச் சீவும் முறையைப் (Backcombing) பயன்படுத்தினால் இயற்கையான பஃப் வைத்தது போன்ற தோற்றம் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
அடர்த்தியான கூந்தல் பெற இதை சாப்பிடுங்கள்!
அடர்த்தியான கூந்தல்

6. ஹேர் ஸ்ப்ரே நுட்பம்:

ஒரு பழைய டூத் பிரஷ் அல்லது ஒரு சிறிய சீப்பில் லேசாக ஹேர் ஸ்ப்ரே தெளித்து, அதைவைத்து முன்பக்க முடியை லேசாக பின்னோக்கிச் சீவ வேண்டும். இது பறக்கும் சிறு முடிகளைச் (Baby hair) சீரமைப்பதோடு, முன்பக்கம் முடி பார்க்க அடர்த்தியாகத் தெரிய உதவும்.

7. ஐஷேடோ மேஜிக்:

மண்டையோட்டின் வகிட்டுப் பகுதியில் முடி குறைவாகத் தெரியும் இடங்களில், கூந்தல் நிறத்திற்கு ஏற்ற கருப்பு நிற ஐஷேடோவை பிரஷ்ஷால் லேசாகத் தடவ வேண்டும். தலைமுடிக்கு இடையில் இருக்கும் இடைவெளி மறைந்து, தலைமுடிக்கு அடர்த்தியான மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும்.

இந்த எளிய வழிகள் வேலைக்குச் செல்லும் அவசரத்திலும் உங்களது தோற்றத்தை மெருகேற்ற உதவும்.

அவசரமான காலை நேரத்தில் அதிக நேரம் செலவிடாமல், உங்கள் மெல்லிய கூந்தலை உடனடி பொலிவுடனும் இருமடங்கு அடர்த்தியுடனும் மாற்றிக் காட்டி, நாள் முழுவதும் தன்னம்பிக்கையுடன் அலுவலகத்திற்குச் செல்ல இந்த எளிமையான நுட்பங்கள் உங்களுக்கு முழுமையாக உதவும்.

logo
Kalki Online
kalkionline.com