
வெறும் மேல் பூச்சு மட்டும் அழகு தராது. உள்ளிருந்து வரும் அழகே நிரந்தரமானது. வெளித்தோற்றத்தை அழகாக மாற்றுவதால் மட்டும் ஒருவர் அழகாகி விட முடியாது. உள்ளிருந்து வரும் அழகே உண்மையானது மற்றும் நிரந்தரமானதும் கூட. விதவிதமான வாசனை திரவியங்கள், முகத்திற்கு மேல் பூச்சுகள், லிப்ஸ்டிக்குகள் போன்றவை ஒரு தற்காலிக தீர்வை மட்டுமே கொடுக்கும்.
தோற்றம் அழகாக இருக்கவேண்டும் என்பதற்காக நாம் ஒவ்வொருவருமே பாடுபடுகின்றோம். என்னதான் மேக்கப் போட்டு மறைக்க முயன்றாலும் நம் உடலை ஆரோக்கியமாக பராமரிக்கவில்லை என்றால் ஆரோக்கிய குறைபாடு தெரியும். ஒருவரை பார்த்த மாத்திரத்தில் அழகாக தெரிவது அவரின் முகமும், தோற்றமும்தான். எண்ணெய் வடியும் தலையும், களை இழந்த முகமும் ஆரோக்கிய குறைபாட்டை எடுத்துச்சொல்லும்.
நிஜமான அழகு:
நிஜமான அழகு என்பது அறுசுவையும் நிரம்பிய நல்ல உணவை எடுத்துக் கொள்வதும், உடலுக்கும் மனதிற்கும் தேவையான பயிற்சி எடுத்துக் கொள்வதுமாகும். அத்துடன் போதுமான அளவுக்கு தூக்கம், மலர்ந்த புன்முறுவல் பூத்த முகம் போன்றவையே உண்மையான அழகுக்கான வழியாகும். மனநிறைவை கொடுக்கும் அர்த்தம் பொதிந்த வாழ்வு நம்மை உண்மையான அழகாக காட்டும். முகத்திற்கு மேக்கப் போடுவதுபோல் வெறும் மேல்பூச்சு மட்டும் ஒருவரை அழகாகக் காட்டாது.
முக பராமரிப்பு:
a) தினம் இரண்டு மூன்று முறை முகத்தை கழுவி துடைத்துவிட முகம் பளிச்சென்று இருக்கும். நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை சிறிது எடுத்து முகம், கழுத்து பகுதியில் தடவி மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழித்து பயத்த மாவினால் முகத்தை கழுவி விட பருவோ, சரும பாதிப்போ, அலர்ஜியோ எதுவும் கிட்டே நெருங்காது.
b) வெயிலில் வெளியில் சென்று வந்தவுடன் இரண்டு துண்டு வெள்ளரிக்காயினை முகம் கைகளில் தேய்த்து கழுவ எந்தவித ரசாயன கலப்பும் இன்றி உடலுக்கு எந்த பாதிப்பும் இன்றி பளிச்சென்று இருக்கும்.
c) சிலருக்கு குப்புறப்படுத்து தூங்கும் பழக்கம் இருக்கும். இது ஆரோக்கியத்தினை பாதிப்பதுடன் முகத்தில் அதிக சுருக்கங்களை ஏற்படுத்தும்.
d) உயரமான மற்றும் கடுமையான தலையணைகள் முக அழகை பாதிக்கும். மென்மையான, அதிகம் உயரமற்ற தலையணைகள் முகத்திற்கு பலம்.
தலைமுடி பராமரிப்பு:
a) பொடுகு பிரச்னை பெரும் பிரச்னையாக உள்ளது. இது முகத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். நம் தன்னம்பிக்கையை குறைக்கும். இதற்கு சரும நிபுணர் ஒருவரை கலந்தாலோசித்து சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். அல்லது வீட்டு வைத்தியம் செய்வது கூட நல்ல பலன் தரும். எலுமிச்சைசாறு 2 ஸ்பூன் எடுத்து அத்துடன் தயிர் கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறவைத்து தலையை அலச பொடுகு பிரச்னை தீரும்.
b) வகை வகையான ஷாம்புக்களை உபயோகிக்காமல் இயற்கையான முறையில் சீயக்காய் கொண்டு தலையை அலசலாம். செம்பருத்தி இலைகளை அரைத்து தலையில் தேய்த்து ஷாம்புபோல் அலசி விடலாம். வெந்தயம் ஒரு ஸ்பூன் எடுத்து மோரில் ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். மூலிகைப் பொடியை குழைத்து தலையில் மாஸ்க் போல் போட்டு அலச முடி வலுப்பெறும்.
c) உலர்ந்த நெல்லிக்காய், எலுமிச்சை தோல், வெந்தயம், அரிசிக் குருணை ஆகியவற்றை மிஷினில் அரைத்து வந்து உபயோகிக்க ஆரோக்கியமான கூந்தலைப் பெறலாம்.
உடல் வறட்சி:
உடல் வறட்சியை போக்க தேவையான அளவு தண்ணீர் குடிப்பதே போதும். உடலை நீரேற்றமாக வைத்துக் கொண்டால் முகம் பொலிவாக இருப்பதுடன், தோலும் வறட்சி அடையாமல் மிருதுவாக இருக்கும். அதிக அளவில் நீர்மோர், எலுமிச்சம் பழச்சாறு உப்பு அல்லது நாட்டு சர்க்கரை கலந்து எடுத்துக் கொள்வது போன்றவை சருமத்தை மிருதுவாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.