
பெண்ணிடம் சௌந்தர்யத்தையும், ஆணிடம் ஐஸ்வர்யத்தையும் பார்க்கவேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். பார்த்தவுடன் விழிகளில் விழுந்து இதயம் நுழைவது ஒரு பெண்ணின் முகம்தான். பிறகுதான் மற்ற அங்க அடையாளங்களை கவனிக்க ஆரம்பிப்பார்கள். இப்படிப்பட்ட முக அமைப்பு எப்படி எல்லாம் இருந்தால் சௌந்தர்யமாகும் என்பதை இப்பதிவில் காண்போம்!
சிலரின் முகம் சிறியதாக இருப்பதை கவனித்திருப்போம். அதுபோல் முகம் சிறியதாகவும் அழகாகவும் இருந்தால் புத்திர, பௌத்திர அபிவிருத்தியும், லக்ஷ்மி கடாட்சமும் விருத்தி அடையும். இவர்கள் சத்வ குணம் உடையவர்களாகவும், சதாசாரம் உடையவர்களாகவும் விளங்குவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
பூரண சந்திரனைப் போன்ற குளுமையும் பிரகாசமும் கொண்ட முகத்தை உடைய பெண்கள் எப்போதும் சுகமாக வாழ்வார்கள். அவர்கள் எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். அவர்கள் நற்குணம் உடையவர் களாகவும், மகாபாக்கியசாலிகளாகவும் திகழ்வார்கள் என்று முகம் பற்றிய இலட்சண சாஸ்திரம் எடுத்துரைக்கின்றது.
சிலரின் முகத்தை பார்த்தால் அதில் ஒரு தனி கவர்ச்சி தெரியும். அப்படிப்பட்ட உருண்டை வடிவ முகமுடைய பெண்கள் கல்வி அறிவு மிக்கவர்களாகவும், நல்ல நினைவாற்றலை உடையவர்களாகவும், கலைத்துறையில் ஈடுபாடும் முன்னேற்றமும் உண்டாகும்படி இருப்பார்கள். சாகசம் நிறைந்த இவர்களின் பேச்சிலும் செயலிலும் ஒரு தனிக் கவர்ச்சி அமைந்து இருக்கும். ஆதலால் இவர்கள் எதைச் சொன்னாலும் தட்டாமல் செய்பவர்கள் பலர் இருப்பதை காணலாம்.
நீண்ட முகம் உடையவர்கள் தர்மவர்த்தினிகளாக இருப்பார்கள் என்கிறது ஜோதிட அமைப்பு.
எல்லாவற்றுக்கும் மேலாக பெண்களின் முகம் தாமரை மலரை போன்று மலர்ச்சியுடன், பளபளப்பாகவும் இருந்தால் சகல சம்பத்துக்களும் விருத்தியடையும். இவர்கள் கணவனாலும் புத்திரர்களாலும் சிறப்புக்குறிய சுகபோகங்களையும், சௌகரியங்களையும் அடைந்து, மகிழ்ச்சியாகவும், தீர்க்காயுளுடனும் இருப்பார்கள் என்கிறது சௌந்தர்ய குறிப்பு.
முகத்தில் சுழி அமையப்பெற்ற பெண்கள் இயற்கையாகவே இனிமையாக பேசும் இயல்புடையவர் களாகத் திகழ்வார்கள். இவர்கள் முக ராசியும், அதிர்ஷ்டமும் உடையவர்களாக இருப்பதுடன் எத்தகைய இயலாத காரியமும் இவர்கள் முயன்றால் எளிதாக நிறைவேறிவிடும். எல்லாவற்றிற்கும் நல்ல சுழி இருக்கவேண்டும் என்பது இதற்குத்தான் போலும்.
அழுத்தமான தசை பிடிப்புடன் புன்முறுவல் பூத்த முக அமைப்பை பெற்ற பெண்கள் இயற்கையிலேயே அதிர்ஷ்டசாலிகளாக இருப்பதுடன் கணவன் மனைவி உறவுகள் அன்புடனும் பாசத்துடனும் விளங்குமாம் .இவர்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, உடையவர்களாகவும் குடும்பத்தை சிறப்பாக மற்றவர்கள் பாராட்டும் வகையில் நடத்திச் செல்லும் நல்ல பெண்மணிகளாகவும் திகழ்ந்து நற் புத்திரர்களால் மேன்மையும், மகிழ்ச்சியும் ,பெருமையும் அடைவார்கள் என்கிறது பெண்களின் முக அமைப்பைப் பற்றி கூறும் லட்சண சாஸ்திரம்.
'அடுத்தது காட்டும் பளிங்கு போல்' உள்ளத்தில் இருப்பதை அப்படியே படம் பிடித்து காட்டுவது நம் முகம்தான். அந்த முகத்தை வசீகரமாகவும், அமைதியாகவும், கவர்ச்சியாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது நம் கையில்தான் இருக்கிறது.
முகத்தில் பரு, தேமல் ,கரும்புள்ளிகள் போன்றவைகள் அண்டாமல் பார்த்து ஃதேவையான அளவு அழகு பொருட்களை பயன்படுத்தி முகத்தை பராமரித்தால் முகம் அழகு பெறும். அந்த அழகே தனி கவர்ச்சியை ஏற்படுத்தும். ஆதலால் முக ஆரோக்கியத்தை மேம்படுத்தி அதன் அழகை பொலிவுறச் செய்வோமாக!