
அன்றாட அவசியமான செயல்களில் ஒன்று குளியல் . ஆண்களும் பெண்களும் வாரத்தில் இருமுறை தலைக்கு எண்ணெய் வைத்து கட்டாயம் குளிக்கவேண்டும். நாளடைவில் நாம் மறந்துபோன செயல்களில் இதுவும் ஒன்று. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தலைக்கு குளிப்பதில் கட்டாயம் தவிர்க்க வேண்டியவைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1.முரட்டுத்தனமாக தேய்ப்பது
தலைக்கு ஷாம்பு தேய்த்து குளிக்கும்போது மென்மையாக தேய்க்க வேண்டும். சீக்கிரம் குளிக்க வேண்டும் என்கிற அவசரத்தில் தலைமுடி மற்றும் உரோமக்கால்களில் கடினமாக தேய்க்கும்போது முடியில் வெவ்வேறு திசையில் நகர்வு ஏற்படுவதால் முடி சேதமடைந்து முடி உதிர்வுக்கு வழிவகுக்கிறது. அதே போல் தலையை துவட்டும் போதும் மென்மையான துண்டை உபயோகித்து லேசாக ஒற்றி எடுக்க வேண்டும்.
2.அதிக முறை ஷாம்பு பயன்படுத்துவது
தலையில் அதிக அளவில் அழுக்கு சேர்ந்திருப்பதாக நினைத்து கொண்டு ஒன்றிற்கும் மேற்பட்ட முறை ஷாம்பு உபயோகித்து தலை முடியை அலசுவதால் , தலையின் மேற்பரப்பில் இருக்கும் நன்மை செய்யும் பாக்ட்டீரியக்களை அழித்து, முடி பாதிப்படைந்து வறட்சியையும் ஏற்படுத்தும் என்பதால் அதிக முறை ஷாம்பு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
3.கண்டிஷனர் பயன்படுத்தாமல் இருப்பது
இந்தியாவில் தோராயமாக 60% மக்கள் ஷாம்பு பயன்படுத்திய பின் ஹேர் கண்டிஷனர் பயன்படுத்துவதில்லை என்கிறது ஆய்வு முடிவுகள். தலைக்குகுளிக்கும்போது ஷாம்பு பயன்படுத்துவதுபோல், ஷாம்புவிற்கு பின் கண்டிஷனரும் பயன்படுத்தவேண்டும் இதனால் கூந்தலில் ஏற்படும் வறட்சிகுறைந்து முடி உதிர்வும் குறைகிறது.
4.சூடான நீர் / ஹேர் ட்ரையர்
சூடான நீரில் குளிப்பதை ஒரு சிலர் பழக்கமாக வைத்திருப்பார்கள். அதே பழக்கத்தில் தலைக்கும் சுடுதண்ணீரை பயன்படுத்துவதால் இது மயிர்க்கால்களில் உள்ள பி.ஹெச் அளவை பாதிக்கலாம். இதனால் தலையில் பொடுகு, மற்றும் அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும் .
முடிந்தவரை குளிக்கும் தண்ணீர் அறை வெப்பநிலையில் இருப்பது நல்லது. அல்லது மிதமான வெப்பநிலையில் இருக்கும் தண்ணீரை பயன்படுத்துவதோடு, தலைக்கு ஹேர் ட்ரையர் பயன்படுத்துபவர்கள் முடிந்தவரை வெப்பநிலையை அதிகப்படியாக இல்லாமல் அளவாக வைத்து கொள்வது முடி உதிர்வை தடுக்கும்.
5.ஈரமான தலை முடியில் சீப்பை பயன்படுத்துவது
தலைமுடி ஈரமாக இருக்கும்போது மென்மையாகவும் எளிதில் உடையும் தன்மை கொண்டதாகவும் இருக்கும். நாம் அப்போது சீப்பை பயன்படுத்துவது அதிகப்படியான முடி உதிர்வை ஏற்படுத்தும்.
அவசரத்தில் கட்டாயம் சீப்பை உபயோகித்துதான் ஆகவேண்டும் என்றால் முடிந்தவரை பெரிய பல் கொண்ட சீப்பை பயன்படுத்துங்கள். முடியின் நுனிப்பகுதியில் துவங்கி மேற்பகுதிவரை மிக மென்மையாக பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.
மேற்கூறிய 5 விஷயங்களை ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்கும்போது தவிர்த்தோம் என்றாலே தலைமுடி எந்த பிரச்னையிலும் சிக்காது.