
இன்றைய காலகட்டத்தில் ஆண் பெண் என பாலின பாகுபாடின்றி சருமம் மற்றும் முடியால் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். சருமம், முடி என தனித்தனியாக பராமரிக்க போதிய நேரமின்மையால் அவதிப் படுகின்றனர். அந்த வகையில் சருமம், முடி இரண்டிற்கும் போதிய ஊட்டச்சத்தளிக்கும் 5 உணவுகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
வைட்டமின் ஈ உணவுகள்:
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் வைட்டமின் ஈ சத்து இருந்தால் சருமத்தையும், முடியையும் எளிதாக பராமரிக்கலாம் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது. வெளி பூச்சுக்கு பயன்படும், கிரீம்கள், ஆயில்கள் அந்த நேரத்திற்கான தீர்வாக அமைவதோடு நிரந்தரத் தீர்வை கொடுப்பதில்லை. ஆகவே வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை அதிகளவில் சாப்பிடுவதால் சருமம் முடி இரண்டையும் எளிதில் பராமரிக்கலாம்.
1.வள்ளிக்கிழங்கு
நம் வீட்டில் மாலை நேர சிற்றுண்டியாக இருக்கும் வள்ளிக்கிழங்கில் வைட்டமின் ஈ சத்து நிரம்பி வழிகிறது. இதனை வேகவைத்து சாப்பிடுவது சுவையாக இருப்பதோடு தோல் மற்றும் முடி பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஈ சத்துகள், கேசத்தை பளபளப்பாக்கி, தோலையும் மென்மையாக்குகிறது.
2.சூர்யகாந்தி விதைகள்:
28 கிராம் சூரியகாந்தி விதைகளில், சுமார் 7 மில்லிகிராம் வைட்டமின் ஈ சத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது, நமக்குள் ஏற்படும் செல் சிதைவை தடுத்து நிறுத்தி, சருமம் சீக்கிரமாக வயதாவதை தடுக்க உதவுவதோடு கூந்தல் பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது
3.அவகேடோ:
பட்டர் ஃப்ரூட் என்று அழைக்கப்படும் அவகேடோவில் உடலுக்கு நன்மை அளிக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைவாக இருப்பதால், இதை சாப்பிடுவதால் மென்மையான தோல் உருவாகி, ஈரப்பதத்தையும் தக்க வைத்துக்கொள்ள உதவுவதோடு, சரும சுருக்கங்களையும் நீக்குகிறது. சரும பாதிப்புகளுக்கு காரணமாக இருக்கும் சுற்றுச்சூழலை பேலன்ஸ் செய்யவும் அவகேடோ பழங்கள் உதவுகின்றன.
4.பாதாம்
உடல் எடையை குறைக்க அல்லது உயர்த்த விரும்புபவர்களின் விருப்பமான உணவு பட்டியலில் முதல் பெயராக இருக்கும் பாதாமில், வைட்டமின் ஈ சத்துகள் நிறைந்து காணப்படுவதால் சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்வதோடு வெயிலால் ஏற்படும் சரும பாதிப்புகளையும் தடுக்கிறது. மேலும் முடி இழப்பிற்கு காரணமாக இருக்கும் அம்சங்களை கட்டுப்படுத்த பாதாமை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
5.கீரை
வயதான தோற்றத்தை தடுக்க உதவுவதிலும் சரும சுருக்கங்களை போக்குவதிலும் கீரை முக்கிய பங்கு வகிக்கிறது. கீரையில் இருக்கும் வைட்டமின் ஈ சத்துக்கள் சரும செல்கள் சேதாரம் அடைவதை பாதுகாப்பதோடு, இயற்கையாகவே சருமத்திற்கும் முடிக்கும் பொலிவினைக் கொடுக்கின்றன.
மேற்கூறிய ஐந்து உணவுப் பொருட்களிலும் வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்து உள்ளதால் இவை சருமத்தையும் கூந்தலையும் ஆரோக்கியமாக வைப்பதில் பெரும் பங்காற்றுகின்றன.