முடி வளர்ச்சிக்கு பயனளிக்கும் பல விதைகளில் ஒன்றுதான் பூசணி விதை. அவற்றின் நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் முறை ஆகியவற்றைப் பார்ப்போம்.
முடி உதிர்வு பிரச்னையால் இன்று பலரும் அவதிப்படுகிறார்கள். அதற்காக வீட்டில் உள்ள இயற்கைப் பொருட்களை வைத்தும், பார்லர் சென்றும் பல சிகிச்சைகளை எடுத்துக்கொள்கிறார்கள். வீட்டு குறிப்புகள் பலவற்றை நாம் பின்பற்றுவோம். சிலருக்கு மட்டுமே சில குறிப்புகள் பலனை தரும். ஆனால், சிலருக்கு வேறு விதமான குறிப்புகள் பலன் தரலாம்.
எது நமக்கு பலன் தரும் என்பதை நாம் பயன்படுத்திப் பார்த்த பிறகு முடிவெடுப்பது சிறந்தது. அதற்கு நாம் பல வீட்டுக் குறிப்புகளை தெரிந்துக்கொள்ள வேண்டும்.
அந்தவகையில் பூசணி விதை எண்ணெயின் பலன்கள் பற்றியும் அதனை எப்படி பயன்படுத்துவது என்பதைப் பற்றியும் தெரிந்துக்கொள்ளலாம்.
பூசணி விதையில் உடல் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கிறது. இந்த எண்ணெயில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் முடி வலுவாகவும் அடர்த்தியாகவும் வளர்வதற்கு ஏதுவாக உள்ளது.
பெண்களுக்கு ஏற்படும் முடி உதிர்வு மற்றும் பொடுகு ஆகியவற்றிற்கு முக்கிய காரணம் வறட்சி தான். நீர்ச்சத்து உடலில் குறையும்போது கூந்தலிலும் நீர்ச்சத்து குறைந்து கூந்தலில் ஈரப்பதம் தக்கவைக்கப்படாமல் இருக்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து உச்சந்தலையிலும் கூந்தலிலும் நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ள உதவுவதுதான் பூசணி விதை. பூசணியில் உள்ள லினோலிக் என்ற அமிலம் கூந்தலில் பளபளப்பு தன்மையை தக்க வைக்க உதவுகிறது. ஆலிவ் எண்ணெயில் நிறைந்துள்ள அதே தன்மை இந்த எண்ணெயிலும் உள்ளது. மற்ற அனைத்தையும் விட பூசணி விதைகளில் கூந்தலை மென்மையாக்க கூடிய பண்புகள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
எப்படி பயன்படுத்துவது?
முடி உதிர்வு பிரச்னைகள் இருப்பவர்கள் சாதாரணமாகவே உணவில் எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். எப்போதும் நீங்கள் உணவில் பயன்படுத்தும் எண்ணெய்க்கு பதிலாக பூசணி விதை எண்ணெயை பயன்படுத்தலாம். மேலும் நேரடியாகவும் தலைக்கும் கூந்தலுக்கு இந்த எண்ணெயை பயன்படுத்தலாம். இது கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. நமது கூந்தலில் அழுக்குகள் தூசிகள் படியாமல் இருப்பதற்கும், அழுக்குகள் மற்றும் தூசிகளால் பாதிப்புகள் ஏற்படாமல் இருப்பதற்கும் நீங்கள் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம்.
அதேபோல் முடி பிளவுகளுக்கும் இந்த பூசணி விதை எண்ணெயை பயன்படுத்தலாம். குறிப்பாக லினோலிக் மற்றும் பால்மிடிக் போன்ற அமிலங்கள் கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. எனவே தினசரி இந்த எண்ணெயை எடுத்துக்கொள்ளுங்கள்.