
சற்று வயதாகும் பொழுது சரும சுருக்கம் ஏற்படுவது இயல்பு. அந்த சுருக்கத்தை எளிமையான முறையில் அதிகமாகாமல் கட்டுப்படுத்தலாம். சற்று பொறுமையுடன் சில விஷயங்களை தொடர்ந்து செய்யும்போது, நல்ல பலனும் கிடைக்கும். இதனால் முகத்திற்கு ஒரு புத்துணர்வு கிடைக்கும். வெளியில் செல்லும்போது பொலிவுடன் செல்லலாம். அதற்கு நாம் பொறுமையுடன் செய்ய வேண்டியது என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
1. முட்டைக்கோஸ் சாறு ஒரு தேக்கரண்டி, தேன் ஒரு தேக்கரண்டி, ஈஸ்ட் ஒரு தேக்கரண்டி ஆகிய மூன்றையும் நன்றாக கலந்து முகத்தில் தேய்த்து 10 ,15 நிமிடங்கள் கழித்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
2. ஆலிவ் எண்ணெய் ஒரு தேக்கரண்டி, எலுமிச்சை சாறு 4 துளிகள், நன்றாக அடித்த முட்டை ஒன்று மூன்றையும் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து மிதமான வெந்நீரில் முகத்தை கழுவினால் முகச் சுருக்கங்கள் மறைந்து வரும். அதிலும் வறண்ட சருமத்தில் அதிகமாக சுருக்கங்கள் விழுந்து இருந்தால் அதை இந்த பேக் நன்கு கட்டுப்படுத்தும்.
3. ஸ்ட்ராபெரி பழத்தை நன்றாக மசாஜ் செய்து வந்தால் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும். சுருக்கம் நீங்கும்.
4. சோற்றுக்கற்றாழை கூழ் ஒரு தேக்கரண்டி ,தேன் ஒரு தேக்கரண்டி இரண்டையும் சேர்த்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் பூசி பத்து நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் முகச் சுருக்கங்கள் குறையும்.
5. அரைத்த தக்காளி ஒரு தேக்கரண்டி அதனுடன் தேன் ஒரு தேக்கரண்டி கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து மிதமான வெந்நீரில் கழுவ வேண்டும். இந்த பேக் சருமத்திற்கு இறுக்கத்தை கொடுத்து சுருக்கத்தை தளர்த்தி புத்துணர்ச்சி கொடுப்பதோடு கவர்ச்சியையும் தரும்.
6. மையாக அரைத்த ரெண்டு தேக்கரண்டி தேங்காய் விழுதுடன் எலுமிச்சை சாறு அரை தேக்கரண்டி கலந்து முகத்தில் பூசி பத்து நிமிடங்கள் கழித்து கழுவினால் முகத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும். இதுபோல் எளிமையான பேக்கு வகைகளை பயன்படுத்தி வறண்டு சுருக்கமான சருமத்தை பொலிவுடன் வைத்துக் கொள்ளலாம்.