சருமத்தின் அழகு சாதன பொருட்களில் மிகவும் முக்கியமான ஒன்றுதான் கோகோ பட்டர். ஆனால், சிலர் இந்த கோகோ பட்டரை பயன்படுத்தக் கூடாது. யாரெல்லாம் பயன்படுத்தக் கூடாது என்று பார்ப்போம்.
வெயில் காலங்களில் சிறந்த மாய்ஸ்ச்சரைஸராக செயல்படும் ஒன்றுதான் கோகோ பட்டர். இது சருமத்தின் வறட்சியைப் போக்கி ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும். கோகோ பட்டரில் இயற்கையாகவே பைட்டோ கெமிக்கல்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. இவை வயதான அறிகுறிகள் தோன்றுவதை மெதுவாக்கும்.
அத்துடன் சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களிடம் இருந்து சருமத்தைக் காக்கவும் உதவும். இதில் வைட்டமின் ஈ மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இதனால், இது பேஸ் க்ரீம்கள், லோஷன்கள், லிப் பாம் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
அந்தவகையில் யாரெல்லாம் கோகோ பட்டரை பயன்படுத்தக் கூடாது என்று பார்ப்போம்.
எந்த வகை சருமம் உள்ளவர்களாக இருந்தாலும், முகப்பருக்கள் இருந்தால், அவர்கள் கோகோ பட்டரைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், அதில் உள்ள காமெடோஜெனிக் தன்மை காரணமாக அவை சருமத் துளைகளை அடைத்து விடும். இதனால், முகப்பருக்கள் அதிகரிக்கலாம். மேலும் முகப்பருக்கள் உள்ளவர்கள் பயன்படுத்தினால், அரிதான நேரங்களில் அரிப்பு, எரிச்சல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
அதேபோல் சென்ஸிட்டிவ் சருமம் உள்ளவர்கள் கோகோ பட்டரை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், இதில் உள்ள காமெடோஜெனிக் தன்மை சில நேரங்களில் உணர்திறன் வாய்ந்த சருமத்தில் அலர்ஜியை உண்டாக்கும்.
யாரெல்லாம் பயன்படுத்தலாம்? எப்படி பயன்படுத்தலாம்?
வறண்ட சருமம் உள்ளவர்கள் கோகோ பட்டர் பயன்படுத்தி தயாரித்த பொருட்களை பயன்படுத்தலாம். இதனால் சருமத்தை ஈரப்பதத்துடனும், நெகிழ்ச்சித்தன்மையுடனும் வைத்துக் கொள்ள முடியும்.
எப்படி பயன்படுத்துவது?
கோகோ பட்டர் சேர்த்த கிரீம்கள், லிப் பாம்கள், சன்ஸ்கிரீன் போன்றவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். இயற்கையாகவே கிடைக்கும் கோகோ பட்டரில் சிறிது சர்க்கரை சேர்த்து அதனை பாடி ஸ்கிரப்பாக பயன்படுத்தலாம்.
இந்த பட்டரை உருக்கி லிப் பாமாக பயன்படுத்தலாம்.
இரவில் வைட்டமின் சி உள்ள சீரம்களை பயன்படுத்துபவர்கள், அதை பயன்படுத்தும் முன்னர் கோகோ பட்டரை மாய்ஸ்சரைசராக பயன்படுத்தலாம்.