
அரிசி மாவு சமையலுக்கு மட்டுமல்ல, அழகுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக சரும பராமரிப்பில் அரிசி மாவு பெருமளவில் உதவுகிறது. ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்தை தருகிறது. அரிசி மாவின் பயன்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
அழகை அள்ளித் தரும் அரிசி மாவின் பயன்கள்;
மென்மை + சுத்திகரிப்பு;
அரிசிமாவு ஒரு இயற்கையான எக்ஸ்ஃபோலியன்ட்டாக செயல்படுகிறது, அதாவது இறந்த சரும செல்களை திறம்பட நீக்கி மென்மையான சரும அமைப்பை தருகிறது. இது தோலில் உள்ள துளைகளை அடைக்க உதவுகிறது. மேலும் முகம், கை, கால்களில் உள்ள கறைகள் மற்றும் கரும்புள்ளிகளின் தோற்றத்தைக்’ குறைக்கும். அரிசி மாவைத் தொடர்ந்து பயன்படுத்துவது ஒட்டுமொத்த சரும அமைப்பை மேம்படுத்தி மென்மையாக வும், சுத்திகரிக்கப்பட்டதாகவும் மாற்றும்.
எண்ணெய் பசை உறிஞ்சப்படுதல்;
அரிசி மாவின் சற்றே கொரகொரப்பான அமைப்பு முகத்தில் மற்றும் கழுத்துப்பகுதியில் உள்ள உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை உறிஞ்ச அனுமதிக்கிறது. எண்ணெய் வழியும் சருமம் கொண்டவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அரிசிமாவை பயன்படுத்தி முகத்தில் ஃபேஸ் மாஸ்க் போல போட்டுக்கொண்டு சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவிவிட்டால் முகம் பளபளப்பாகக் காட்சியளிக்கும்.
முகப்பருத் தொல்லை, இனி இல்லை;
அரிசி மாவு முகத்தில் உள்ள எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்துவதால் முகத்தில் தோன்றும் முகப்பருக்களையும் தடுக்க உதவுகிறது. எனவே முகப்பருத் தொல்லை உள்ளவர்கள் அரிசி மாவை அடிக்கடி பயன்படுத்தலாம். இதனால் முகப்பரு தொல்லையில் இருந்து விடுபட்டு அவர்களுக்கு தெளிவான சருமம் கிடைக்கும்.
கரும்புள்ளிகளுக்கு டாட்டா:
அரிசிமாவில் உள்ள இயற்கையான நொதிகள் கரும்புள்ளிகள் மற்றும் நிறமிகளை ஒளிரச்செய்கின்றன. இதனால் முகத்திற்கு பிரகாசமான நிறம் கிடைக்கும். இதை வழக்கமாக பயன்படுத்தினால் சீரான சரும நிறத்திற்கு வழிவகுக்கும். கழுத்துப் பகுதியில் இருக்கும் கருமையும் குறைக்கும்.
கருவளையங்களுக்கு பை பை;
இது கருவளையங்களைக் குறைக்கிறது. மேலும் கண்களைச் சுற்றி சிறந்த ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. இதனால் ருவளையங்கள் மறைந்து கண்கள் பளிச்சென அழகாகக் காட்சியளிக்கும்.
குளிர்ச்சி;
அரிசி மாவில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. அவை எரிச்சல் ஊட்டும் சருமத்தை மாற்றி குளிர்ச்சியாக வைக்கிறது. குறிப்பாக உணர்திறன் வாய்ந்த சென்சிட்டிவ் சரும வகைகளுக்கு இது மிகவும் ஏற்றது.
இளமைத் தோற்றம்;
விட்டமின் ஈ போன்ற ஆக்சிஜனேற்றிகள் நிறைந்த அரிசி மாவு சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் சுற்றுச்சூழல் அழுத்தங்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இது வயதாவதையும் தடுக்கிறது. இளமைத் தோற்றத்தை தக்க வைக்கிறது. அரிசி மாவில் காணப்படும் சேர்மங்கள் அல்ட்ரா வயலட் கதிர்களை எதிர்த்துப்போராடுகிறது.
ஒரு வாரத்திற்கு ஒன்று முதல் மூன்று முறை அரிசி மாவு ஃபேஸ் பேக் பயன்படுத்தலாம். அதிக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் ஒருநாள் விட்டு ஒரு நாள் அரிசி மாவு ஃபேஸ் பேக் போட்டுக் கொள்ளலாம். முகத்தை இறுகிப் பிடிக்கும் முன் அலம்பி விடவேண்டும். தோராயமாக பத்து நிமிடம் போதும்.