
பலருக்கும் பொடுகுத் தொல்லை ஒரு தீராத பிரச்னையாக இருக்கிறது. பியூட்டி பார்லருக்கு சென்று பணம் செலவழிக்காமல் வீட்டிலேயே எளிய வழிமுறைகளில் பொடுகுத் தொல்லையை சமாளிக்கலாம்.
பொடுகு தொல்லையினால் ஏற்படும் விளைவுகள்;
பொடுகு தொடர்ச்சியான அரிப்புகளை உச்சந்தலையில் ஏற்படுத்துகிறது. அழுத்தி சொறியும்போது உச்சந்தலையில் கீறல் மற்றும் காயம் ஏற்படும். மேலும் மயிர்க்கால்கள் சேதப்படும். இதனால் கடுமையான முடி உதிர்வு உண்டாகும். பொடுகு உச்சந்தலையில் சிவப்பான மிருதுவான திட்டுகளை ஏற்படுத்தும். இது முகம் மற்றும் புருவங்கள் போன்ற மற்ற பகுதிகளுக்கும் பரவலாம். பொடுகு என்பது அழகுப் பிரச்னை மட்டுமல்ல, உடல் அசௌகரியம் மற்றும் உளவியல் துன்பத்திற்கும் வித்திடுகிறது.
பொடுகுத் தொல்லையை இயற்கையாக குறைக்கும் வழிமுறைகள்
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சைச் சாறு;
இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை லேசாக சூடாக்க வேண்டும். அதில் இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலக்க வேண்டும். இந்தக் கலவையை உச்சந்தலையில் தடவி நன்றாக பத்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு தலையை அலச வேண்டும். தேங்காய் எண்ணெய் உச்சந்தலையை ஈரப்பதம் ஆக்கி பூஞ்சையை நீக்க வழி செய்கிறது. எலுமிச்சைச்சாறு பொடுகை எதிர்த்துப் போராடுகிறது.
தயிர்;
ஒரு கப் புளிக்காத தயிரை உச்சந்தலையிலும் முடியிலும் தடவ வேண்டும். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் லேசாக ஷாம்பு போட்டு அலச வேண்டும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் பொடுகுத் தொல்லையை குறைத்து முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.
கற்றாழை ஜெல்;
நீளமான கற்றாழையை எடுத்து அதை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தோலை நீக்கி உள்ளிருக்கும் ஜெல் பகுதியை நன்றாக உச்சந்தலையில் தடவ வேண்டும். விரல் நுனிகளால் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து அதை அலசி விட்டால் பொடுகுத்தொல்லை நீங்கும்.
பேக்கிங் சோடா;
இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடாவை தண்ணீரில் கரைத்து அதை உச்சந்தலையில் தடவும். ஐந்து நிமிடங்களுக்கு மெதுவாக மசாஜ் செய்யவும். உடனே தலைக்கு குளித்து விடவு.ம் பேக்கிங் சோடா ஒரு மென்மையான எக்ஸ்ஃபோலியன்ட்டாக செயல்படுகிறது இது இறந்த சரும செல்களை நீக்குகிறது. இதனால் படிப்படியாக பொடுகு குறையும்.
வேப்பிலை;
இரண்டு கைப்பிடி அளவு வேப்பிலைகளை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். வேப்பிலையின் எசென்ஸ் நீரில் இறங்கி தண்ணீர் பச்சை நிறமாக மாற வேண்டும். வெதுவெதுப்பான சூட்டில் வேப்பிலைத் தண்ணீரை எடுத்து தலையில் தடவ வேண்டும். பின் அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும்.
ஆலிவ் எண்ணெய்;
ஆலிவ் எண்ணெயை சூடாக்கி உச்சந்தலையில் தடவி லேசாக மசாஜ் செய்து, இரவு முழுவதும் விட்டுவிட வேண்டும். அடுத்த நாள் காலையில் சீவிப் பார்த்தாலே தலையில் உள்ள மஞ்சள் நிற செதில்கள் உதிர்ந்து விடுவதைப் பார்க்கலாம்.
முட்டை;
ஒரு முட்டையை உடைத்து அந்த வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை நன்றாக ஒரு ஸ்பூன் கொண்டு அடித்துக் கொள்ளவும். முட்டைக் கலவையை தலையில் தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் தலையை ஷாம்பு போட்டு நன்கு அலசவும். முட்டையில் உள்ள உயர்ந்த புரத உள்ளடக்கம் பொடுகுகளை நீக்கி புதிய செல்களை ஒருங்கிணைக்கிறது.