
இன்றைய நவீன காலகட்டத்தில் ஜீன்ஸ் உடைகளை அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டன. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ஜீன்ஸை விரும்பி அணிகின்றனர். இது பலருக்கும் சௌவுகரியமாக இருந்தாலும், அடிக்கடி ஜீன்ஸ் பேண்ட்டை அணிவதால் ஆபத்துகளும் உள்ளன என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். ஜீன்ஸில் அப்படி என்ன தான் ஆபத்துகள் இருக்கின்றன என்பதை உங்களுக்கு விளக்குகிறது இந்தப் பதிவு.
1873 ஆம் ஆண்டில் லெவி ஸ்ட்ராஸ் மற்றும் ஜேக்கப் டேவிஸ் ஆகிய இருவரால் ஜீன்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது. ஜீன்ஸ் பேண்ட்டை அடிக்கடி அணிபவர்களைக் கேட்டால், இந்த உடை தான் சௌகரியமாக உள்ளது எனக் கூறுகின்றனர். ஆனால் இதே ஜீன்ஸ் தான் சில அசௌகரியங்களை ஏற்படுத்துவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பெரும்பாலும் ஜீன்ஸ் பேண்ட்டுகள் இறுக்கமாகவே உள்ளன. இறுக்கமான ஜீன்சை தொடர்ந்து பயன்படுத்துவதால், அது தசையை இறுக்கமாகப் பிடித்து கொள்கிறது. இதனால் ‘மெரால்ஜியா பாரஸ்தெட்டிகா (Meralgia Paresthetica)’ எனும் பாதிப்பு ஏற்படும். ஜீன்ஸ் அணிபவர்களுக்கு செரிமான சக்தி குறையும் என சில ஆய்வு முடிவுகளும் சொல்கின்றன. இந்த உடையின் இறுக்கம், இரத்த ஓட்டத்தையும் பாதிக்கும். மழைக்காலத்தில் மட்டுமின்றி, கோடையிலும் பாக்டீரியா தொற்றை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். அதோடு இதனால் சிறுநீரகத் தொற்றும் ஏற்படும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கால்களை மடக்கி அமரும் போது, கால்களை செயலிழக்கச் செய்து விடும் அபாயமும் உள்ளது. ஆகையால் ஜீன்ஸ் அணிந்த பிறகு தரையில் அமர்வதைத் தவிர்த்து விடுங்கள். இன்றைய நவநாகரீக உலகில் பெண்களும் தங்கள் அழகைக் கூட்டுவதற்கு ஜீன்ஸ் பேண்ட்டை அணிகின்றனர். அதற்கேற்ப பெண் வாடிக்கையாளர்களை ஈர்க்க புதுப்புது மாடல்களில், ஜீன்ஸ் பேண்ட்டுகள் அவ்வப்போது வெளிவருகின்றன.
கல்லூரிக்குச் செல்லும் பெண்கள் பலரும் வாரம் முழுக்க ஜீன்ஸை அணிகின்றனர். இது ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், அவ்வப்போது தளர்வான ஆடைகளையும் அணிய வேண்டும். வெப்பம் மிகுந்த இடங்களில் வேலை செய்பவர்கள் மற்றும் அடிக்கடி வெயிலில் வெளியே செல்பவர்கள் ஜீன்ஸ் பேண்ட் அணிவதைக் குறைத்துக் கொள்வது நல்லது.
ஜீன்ஸ் பேண்ட் அணிந்து, பெல்ட்டையும் போட்டு விட்டால் இடுப்புப் பகுதி இன்னமும் இறுக்கமாகி விடும். இதனால் பெண்களுக்கு அடிவயிற்றில் இருந்து தொடை வழியாக செல்லும் மெல்லிய நரம்பு பாதிப்புக்கள்ளாகும். இடுப்புப் பகுதி தொடர்ச்சியாக இறுக்கப்பட்டால், அதன் விளைவாக முதுகெலும்பும் பாதிப்படையும். மேலும் சருமத்தில் வெளிக் காற்று படாமல், வியர்வைத் துளிகள் அங்கேயே தேங்கி, கிருமித் தொற்று உருவாகவும் அதிக வாய்ப்புள்ளது. ஆண்கள் தொடர்ந்து ஜீன்ஸ் பேண்ட்டை அணிவதால், அவர்களின் இனப்பெருக்க சக்தி குறையும் என சுவீடன் நாட்டில் நடந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
இத்தனை ஆபத்துகள் இருக்கும் ஜீன்ஸ் பேண்ட்டுகளை இனியும் அடிக்கடி அணிவீர்களா! எதையும் அளவோடு பயன்படுத்தினால் நன்மை தான். அளவை மீறும் போது தான் ஆபத்துகள் விளைகின்றன. ஆகையால் ஜீன்ஸ் பேண்ட்டை அடிக்கடி அணிவதைத் தவிர்த்து, அளவோடு இருங்கள்.