
ஆண் பெண் பாகுபாடின்றி இருபாலருமே தங்கள் தலை முடியின் ஆரோக்கியத்திற்காக எத்தனையோ வழி முறைகளைக் கண்டறிந்து அதைப் பின்பற்றியும் வருகின்றனர். தற்போதைய மாம்பழ சீசனில் தாராளமாகக் கிடைக்கக் கூடிய மாங்கொட்டைக் குள்ளிருக்கும் சற்றுக் கடினமான பருப்பிலிருந்து, சுலபமாக வீட்டிலேயே ஒரு எண்ணெயை தயாரிக்கலாம்.
இது மாம்பழ கெர்னெல் (Mango Kernel) எண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. இதில், ஓலிக் (Oleic) மற்றும் ஸ்டீரிக் (Stearic) போன்ற கொழுப்பு அமிலங்கள், ஆன்டிஆக்ஸி டன்ட்கள், வைட்டமின் A, C, E போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
இவை தலையின் சருமப்பகுதி (Scalp)ஆரோக்கியத்திற்கும், தலைமுடி விரைவாக வளரவும் சிறந்த முறையில் உதவி புரியும். அதிக அடர்த்தியுள்ள மற்ற எண்ணெய் வகைகள் போல் இல்லாமல் மா விதை எண்ணெய் மெல்லியதாக, எடை குறைவானதாக இருக்கும். இதன் காரணமாக ஸ்கேல்ப்பிற்குள் இது சுலபமாக உறிஞ்சப்பட்டுவிடும். முடி உடைதல், உலர்ந்து போதல், வளர்ச்சி குன்றுதல் போன்ற அனைத்துப் பிரச்சினை தீரவும் இந்த எண்ணெய் உதவிபுரியும்.
மேலும் மாம்பழ விதை எண்ணெய் ஸ்கேல்ப் அடியில் இருக்கும் கொல்லாஜென் உற்பத்தி அளவை அதிகரிக்கச் செய்யும். இதனால் வேர்ப்பகுதி நுண்ணறைகளின் ஆரோக்கியம் மேம்படும். அந்த இடங்களின் நீர்ச்சத்து பாதுகாக்கப்பட்டு, முடி அதிகளவில் வேகமாக, நுனியில் பிளவு மற்றும் சிக்கல் ஏதுமின்றி வளர வாய்ப்பு உருவாகும். மாம்பழ விதையிலிருந்து எண்ணெய் தயாரிக்கும் முறை:
நன்கு பழுத்த இரண்டு அல்லது மூன்று மாம்பழங்களின் சதையை சாப்பிட்டுவிட்டு கொட்டையை கழுவி, மூன்று நாட்கள் நிழலில் காய வைக்கவும். நீர்ப்பசை ஏதுமின்றி நன்கு உலர்ந்ததும், ஒரு சுத்தியலால் கடினமான மேல் ஓட்டை உடைத்து,
உள்ளிருக்கும் மிருதுவான வெள்ளை நிற கெர்னெல்களைப் பிரித்தெடுக்கவும். பின் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு பவுடராக்கவும். பின் அந்தப் பவுடரை ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு அதன் மீது ஒரு கப் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் அல்லது ஆல்மண்ட்
ஆயிலை ஊற்றவும். கெர்னெல் பவுடர் நன்கு மூழ்கியிருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பின் ஜாடியை இறுக மூடி சூரிய வெப்பம் கிடைக்கும்படியாக ஜன்னல் ஓரத்தில் வைத்துவிடவும். தினமும் ஒருமுறை ஜாடியை குலுக்கிவிட்டு சுமார் பத்து தினங்கள் வைத்திருக்கவும். அதன் பின் மெல்லிய துவாரமுள்ள வடிகட்டி மூலம் தெளிவான எண்ணெயைப் பிரித்தெடுத்து சுத்தமான பாட்டிலில் சேமித்து வைத்து உபயோகிக்கவும்.
உபயோகிக்கும் முறை:
ஒரு டேபிள் ஸ்பூன் மாம்பழ கெர்னெல் எண்ணெயை லேசாக சூடு பண்ணி ஸ்கேல்ப்பில் மசாஜ் பண்ணலாம் (வாரம் 2-3 முறை).
ஆலூவேரா ஜெல் அல்லது யோகர்ட்டுடன் இந்த எண்ணெயை கலந்து முடியின் அடிமுதல் நுனி வரை மாஸ்க்காகப் போட்டு வைத்து, அரை மணிநேரம் கழித்து ஷாம்பு போட்டு கழுவி விடலாம். இதனால் முடி ஈரத்தன்மை பெற்று பள பளக்கும். தினசரி உள்ளங்கையில் ஒரு ஸ்பூன் ஊற்றி, இரண்டு மூன்று சொட்டு ரோஸ் மேரி அல்லது பெப்பர்மிண்ட் ஆயில் சேர்த்து தலை முழுக்க தடவி வர, 4-6 வாரங்களில் நல்ல முன்னேற்றம் தெரியும்.
ஆரம்பத்தில் சிறிது எண்ணெயை உடலில் தடவி ஒவ்வாமை டெஸ்ட் பண்ணிய பின் தொடர்ந்து உபயோகிக்க அறிவுறுத்தப்படுகிறது.