
கோடைகாலத்தில் வெப்பத் தாக்கத்திலிருந்து நம்மை காத்துக் கொள்ள நாம் தினமும் பழங்களும், பானங்களும் சாப்பிடவேண்டும். இதோ அதற்கான குறிப்புகள்...
1. நீர் மோரில் உப்பு, வெள்ளரிப் பிஞ்சு சேர்த்து மிக்ஸியில் அரைத்து அருந்தினால் கோடைக்கு ஏற்ற 'குளு குளு' பானம் குடித்த உடன் இதம் உண்டாகும்.
2. நீராகாரத்தில் வெங்காயம் அல்லது கேரட் ஒன்றை நறுக்கிப் போட்டு நார்த்தங்காய் வற்றலுடன் இரண்டு டம்ளர் பருகினால் ஏசியில் இருப்பது போல் உடம்பு இருக்கும்.
3. எலுமிச்சை ஜூஸ் பரிமாறும் போது அதில் சோம்பு பவுடர் சேர்த்துப் பரிமாறிப் பாருங்கள். வித்தியாசமான வாசனை கொண்ட இது வெயில் காலத்தில் உடம்புக்கு குளிர்ச்சிதரும்.
4. நீர் மோரில், தக்காளி பழச்சாறு கலந்து, தேவைக்கேற்ப உப்பு, பெருங்காயத் தூள், கொத்துமல்லி தழை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, வெயில் நேரத்தில் பருகினால் களைப்பும், சோர்வும் பறந்து விடும்.
5. வைட்டமின் 'சி' அதிகமுள்ள உணவு பொருட்களை சம்மரில் கட்டாயம் சாப்பிட வேண்டும். சளி பிடித்துக் கொள்ளும், சைனஸ் உள்ளது என்பதற்காக சாப்பிடாமல் இருக்க வேண்டாம். ஏனெனில், இந்த சீசனில் நீங்கள் சாப்பிடும் உணவுகளே பின்னர் குளிர் காலத்தில் உங்களுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.
6. இந்த சமயத்தில் எந்தவொரு இனிப்பு பதார்த்தத்துக்கும், பானத்துக்கும் தேன், நாட்டு சர்க்கரை, கருப்பட்டி உள்ளிட்டவற்றை இனிப்புக்காக பயன் படுத்தவும். ஏனெனில் இதில் உள்ள 'சுக்ரோஸ்' நமது உடலில் உள்ள இன்சுலின் அளவைக் கூட்டுவதுடன், வெயிலால் ஏற்படும் சோர்வை எதிர்த்து செயல்பட தேவையான எனர்ஜியையும் தரும்.
7. நாம் வெயிலில் வெளியே செல்லும் போது, நம்முடைய சருமம் மிகவும் உலர்ந்தும், மங்கியும் காணப்படும்.அப்படியான நேரங்களில் நாம் எந்த ஜூஸ் குடித்தாலும் அதில் இரண்டு, மூன்று சொட்டு வெங்காயச் சாறையும் கலந்து குடிப்பது மிகவும் நல்லது. காரணம் வெங்காயத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் நம் உடலின் எனர்ஜியை அதிகரிக்கும். உடலின் உள்உறுப்புகளுக்கு ரத்தம் மூலம் ஆக்ஸிஜனை எடுத்து செல்லும் பணியை ஊக்குவித்து, நம் உடலை வெப்பத்திலிருந்து காக்கும்.
8. வெயிலில் வெளியே செல்லும் போது கைவசம் கற்கண்டு வைத்துக் கொள்ளுங்கள். தாகத்திற்கு இது மிகச் சிறந்தது.
9. இந்த சமயத்தில் காலையில் தோய வைத்த புதுத்தயிர் ஒரு கிண்ணத்தில் எடுத்து, பிஞ்சு வெள்ளரிக்காய்களை மெல்லிய வில்லைகளாக நறுக்கித் தயிரில் போட்டுக்கொண்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். உப்பு, காரம் சேர்ப்பதை தவிர்த்து விடுங்கள்.
10. ஃபுரூட் சாலட்டில் சர்க்கரைக்கு பதில் நாட்டு சர்க்கரை, வெல்லம் சேர்த்துக் கொண்டால் சுவைநன்றாக இருப்பதுடன் அதிக அளவில் இரும்புச் சத்தும் கிடைக்கும்.
11. தயிர் புளித்து விட்டால் ஒரு கப் தயிரில் ஐந்து ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் வெண்ணைய், சிட்டிகை உப்பு மூன்று ஐஸ் துண்டுகள் சேர்த்து, மிக்ஸியில் அடித்துப் பருக வெயிலுக்கு இதமான லஸ்ஸி தயார்.
12. கோடை காலங்களில் இரவில் ஒரு கப் மோரில், சிறிது வெந்தயத்தை ஊற வைத்து, மறுநாள் அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடல் சூடு குறையும்.