
ஜொலிப்பான முகத்தோடு புன்னகையும் சேர்த்து மகிழ்ச்சியில் மின்ன எல்லாப் பெண்களுக்கும் ஆசை. ஆனால் வேலை, உழைப்பு என எந்திரமயமாக பறக்கின்றனர். பெண்கள் தன்னைப் பார்த்துகொள்ளவும் பராமரிக்கவும் ஆரஞ்சுப் பழத்தோல் பொடி உதவுகிறது.
தங்கம் போல மின்னும் சருமத்தைப்பெற பழத்தோல்கள் உதவும். வைட்டமின் சி நிறைந்த பழங்களை உணவுடன் எடுத்துக் கொள்ளும்போது, பழத்தோலின் பொடியை மேல் பூச்சாக பயன்படுத்தி ஃபேஸ்பேக்குகள் பல விதமான அற்புதங்களை சருமத்தில் ஒளி தரும். ஆரஞ்சுப் பழத்தோல் பொடியுடன் மேலும் சில பொருட்களை பயன்படுத்தி விதவிதமான ஃபேஸ் பேக்குகள் போடலாம்.
மஞ்சள் + ஆரஞ்சு தோல் பொடி + தேன்
ஒரு டீஸ்பூன் ஆரஞ்சுத்தோல் பொடி, அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பேஸ்ட் போல் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்துக்குக் கூடுதல் பொலிவு கிடைக்கும்.
தயிர் + ஆரஞ்சு தோல் பொடி
வாகனத்தில் வெளியில் சென்று போக்குவரத்து நெரிசலில் நீண்ட நேரம் சிக்க நேரிடும். அப்போது பெண்களின் முகத்தில் தூசு படிந்து பொலிவிழக்கும். ஒருவித சோர்வும் ஏற்படும். அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க இந்த பேஸ் ஃபேக் உதவும்.
ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடி, 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து இதனை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் உலரவிட்டு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். வெளியில் சென்று வந்த பின்னர் சோர்வாக உணரும் நாட்களில் இரவு தூங்கப்போகும் முன் இந்த ஃபேஸ் பேக் போட்டு முகம் கழுவலாம். தூங்கி எழுந்த பின் முகம் பளிச்சிடும்.
முல்தானி மெட்டி + ஆரஞ்சு தோல் பொடி
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு லைட்டான மேக்கப் போட்டு வெளியில் வந்தவுடன் முகத்தில் எண்ணெய் சுரந்து டல் அடிக்கும். இது அவர்களை சோர்வாக காட்டும்.
ஆரஞ்சு தோல் பொடி இவர்களுக்கு வரம் என்றே சொல்லலாம். ஆரஞ்சு தோல் பொடி ஒரு டீஸ்பூன் முல்தானி மெட்டி ஒரு டீஸ்பூன், ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போல கலக்கி முகம், கழுத்து பகுதியில் தடவி உலறவிட்டு 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் சுத்தமாகும். கரும்புள்ளிகள் நீங்கி இளமையாக இருக்க உதவும்.
எண்ணெய் சருமம் உள்ளவர்கள் வாரம் ஒருமுறை இந்த ஃபேஸ் பேக் போட்டால் முகம் பளிச் தோற்றத்தைக் கொடுக்கும்.
சந்தனம் + வால்நட் + ஆரஞ்சு தோல் பொடி
வெளியில் பார்ட்டிக்கு கிளம்ப சில மணி நேரமே உள்ளபோது பளபளப்பான முகம் வேண்டும் என விரும்பும் பெண்களுக்கான பேக் இது. ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடியுடன், ஒரு டீஸ்பூன் அளவுக்கு சந்தன பொடி, ஒரு டீஸ்பூன் வால்நட் பொடி சிறிது எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் போல் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவி வந்தால் முகம் புத்துணர்ச்சி பெறும்.
டீ ட்ரீ ஆயில் + ஆரஞ்சு தோல் பவுடர்
முகத்தில் அதிக அளவு முகப்பரு மற்றும் பருவினால் உண்டாகும் தழும்புகள் உள்ளவர்களுக்கு இந்த பேக் நல்ல பலன் தரும். ஆரஞ்சு தோல் பவுடர் ஒரு டீஸ்பூன், டீ ட்ரீ எசன்ஷியல் ஆயில் ரெண்டு சொட்டு, கற்றாழை ஜெல் ஒரு டீஸ்பூன் சேர்த்து பேஸ்ட் போல் கலக்கவும். இதை முகத்துக்கு பேக் போல் போட்டு அரை மணிநேரம் உலறவிட்டு பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால் முகப் பருக்கள் நீங்கி தழும்புகளையும் சரி செயும்.
ஓட்ஸ் பவுடர் + ஆரஞ்சு தோல் பவுடர் - சர்க்கரை + தேன்
2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடர், 2 டீஸ்பூன் ஆரஞ்சு தோல் பவுடர், அரை டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து முகத்தில் பேக்காகப் போட்டு 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் சருமத்திற்கு ஈரப்பதம் தந்து நல்ல நிறம் கொடுக்கும்.