
அழகு (Beauty) குறித்த விழிப்புணர்வு தற்போது பெண்களிடையே பெருமளவு பெருகி வருவது பாராட்டுக்குரியது. ஏனெனில் அழகு என்பது காண்பவர் கண்களுக்கு மட்டுமல்ல நம்முடைய மனதிற்கும் தன்னம்பிக்கை அளிக்கக் கூடியது என்ற கருத்தை உளவியலாளர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.
நமது அழகை மேம்படுத்திகாட்ட உதவும் உபகரணங்கள் தற்போது ஏராளமாக கிடைக்கிறது. அப்படி சமீபத்தில் பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருவதுதான் ஜேட் ரோலர் (Jade rollers) எனப்படும் சரும பொலிவிற்கான சாதனம். மாய்ஸ்ரைசர் தடவிய சருமத்தில் உருளைகளால் மசாஜ் செய்யும் இம்முறை சருமத்தை பொலிவுற வைக்கிறது. இதைப்பற்றி இங்கு காண்போம்.
ஜேட் ரோலர் என்பது ஒரு சிறிய, கைப்பிடியுடன் கூடிய ஸ்டோன் ரோலர் ஆகும், இவை சருமப் பராமரிப்புக்கு உதவும் அற்புதமான கருவிகளாக ஏராளமான நன்மைகளை வழங்குகின்றன, அவற்றில் சில…
சருமத்தில் உள்ள நிணநீர் முனைகளைத் தூண்டி உடலில் இருந்து கழிவுகளை அகற்றி நச்சுகளை நீக்க உதவுகிறது. நிணநீர் வடிகால்களை ஊக்குவிப்பதன் மூலமும் சுழற்சியை மேம்படுத்துவதன் மூலமும் குறிப்பாக கண்களைச் சுற்றியும் உள்ள முக வீக்கத்தைக் குறைக்கிறது.
இளமையைத் தக்கவைக்கும் கொலாஜன் உற்பத்தியைத்தூண்டி சருமத்தை உறுதிப்படுத்துகிறது, மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களைக் குறைக்கிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால் சருமத்திற்கு ஆரோக்கியமான பளபளப்பைக் கொடுக்கிறது மற்றும் அதிக பொலிவான நிறத்தை ஊக்குவிக்கிறது.
சருமத்தை குளிர்ச்சியாக மாற்றி புத்துணர்ச்சியூட்டுகிறது. பயன்படுத்தும் சருமப்பொருட்களை சருமத்தில் ஆழமாக ஊடுருவி, அவற்றின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது.
மனஅமைதியான மற்றும் தியான அனுபவத்தை வழங்கி மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
ஜேட் ரோலர்கள் பல வகைகளில் பல விலைகளில் கிடைக்கிறது. அவரவர் பட்ஜெட் மற்றும் சருமத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். உங்களுக்காக சில பிரபலமான வகைகள் இங்கு.
இரட்டை முனை உருளைகள் (Dual-Ended Rollers) எனப்படும் இவைகள் அகலமான பகுதிகளுக்கு பெரிய உருளைகளையும், கண்களுக்குக் கீழே உள்ள மென்மையான இடங்களுக்கு சிறிய உருளைகளையும் கொண்டுள்ளது.
ஆழமான தசை அடுக்குகளுக்கு ஒரு ஸ்க்ராப்பிங் கருவியாக குவா ஷா கருவிகள் (Gua Sha Tools) பயன்படுத்தலாம். இதே நிணநீர் வடிகால் மற்றும் தளர்வான சருமத்தை தூண்டுகிறது.
ஐஸ் ரோலர்கள் (Ice Rollers) எனும் வகை கூடுதல் குளிரூட்டும் தன்மையைத் தருகிறது. வீக்கத்தைக் குறைப்பதற்கும் சருமத்தை அமைதிப்படுத்தி புத்துணர்வு பெறவும் ஏற்றது.
பொதுவாக எந்த ஒரு அழகு கருவிகளை தேர்ந்தெடுக்கும்போது மிக கவனமாக இருக்கவேண்டும். ஜேட் ரோலருக்கும் அப்படியே என்பதால் தேர்ந்தெடுப்பதில் உங்களுக்கான காரணங்களை முதன்மை படுத்துங்கள்.
உதாரணமாக பரந்த பகுதிகளுக்கு பெரிய உருளைகள் மற்றும் துல்லியத்திற்கு சிறிய உருளைகள் என உங்கள் தேவைகளுக்கு ஏற்ற ஒரு உருளையைத் தேர்ந்தெடுக்கவும், எளிதாக கையாளவும் மற்றும் துல்லியமான பயன்பாட்டிற்கும் ஏற்ற வசதியான பிடியைக் கொண்டிருப்பதை உறுதிசெய்து வாங்கவும். நீடித்து நிலைக்கவும் மற்றும் புத்துணர்வு பண்புகளுக்கும் விலை சற்று கூடுதல் எனினும் உண்மையான ஜேட் கற்களைத் தேர்வுசெய்தால் விளைவுகள் நன்மை தரும்.
பொதுவான நெஃப்ரைட், விலை கூடுதலான ஜேட் (ஜேடைட்), சாயம் பூசப்பட்ட ஜேட் ரோலர்கள், பாலிமர் பூசப்பட்ட ரோலர்கள் என சந்தையில் பல வகைகள் வந்துள்ளது. விலை மலிவு என வாங்கும் தரமற்ற ரோலர்கள் எந்தவித நன்மையும் தராது. விரைவில் பயனற்று மூலையில் கிடக்கும். அதை விடுத்து வாங்கும்போதே தரமானத்தேடி ரோலரை தேர்வு செய்வது நல்லது.