சமீப காலங்களில் பிரபலங்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் ஒரு பெயர் தான் மட்சா (Matcha). இது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, பளபளப்பான சருமத்தைப் பெற உதவும் சிறந்த தீர்வாகவும் உள்ளது. கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் முதல் கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹலின் மனைவி தனஸ்ரீ வர்மா வரை இந்த Matcha டீ மற்றும் ஸ்மூத்திகளை விரும்பி குடிப்பதாக கேள்விப்பட்டிருப்போம். அவர்களின் ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்திற்கு இதுவும் முக்கிய காரணமாக இருக்கக்கூடும்.
சரி.. இந்த Matcha என்றால் என்ன?
மட்சா என்பது ஜப்பானில் இருந்து வரும், பச்சை தேயிலைகளை பொடியாக்கி உருவாக்கப்படும் ஒரு தேயிலைத் தூள் ஆகும். வழக்கமாக சாதாரண டீயை காய்ச்சிய பின் தேயிலையை நீக்கிவிடுவோம். ஆனால், மட்சாவில் தேயிலை முழுவதையும் உட்கொள்ள முடியும். அதனால், அதன் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக உடலுக்குக் கிடைத்துவிடும். இதுதான் இந்த தேயிலையில் உள்ள தனிச் சிறப்பு.
மட்சா டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, EGCG (epigallocatechin gallate) என்ற ஒரு சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் இதில் உள்ளது. இது உடல் நலத்தை பாதுகாப்பதுடன், சருமத்தையும் மேம்படுத்துகிறது. இதனால்தான் Matcha, பிரபலங்களின் முதல் தேர்வாக உள்ளது.
இதன் பயன்கள்:
சரும முதுமையைத் தள்ளிப் போடும்: மட்சாவில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், முன்கூட்டியே சருமம் சுருங்குவதைத் தடுக்கின்றன. இது சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.
சருமத்தை உள்ளிருந்து ஹைட்ரேட் செய்யும்: சருமத்தின் ஈரப்பதம் குறையும்போதுதான் வறண்டு, மந்தமாக காட்சியளிக்கும். மட்சா, சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது.
நச்சுக்களை நீக்கும்: மட்சாவில் அதிக அளவு குளோரோபில் உள்ளது. இது சருமத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை சுத்தமாக்குகிறது. இதனால் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் வருவதைத் தடுக்கலாம்.
கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும்: சருமத்தின் இறுக்கம், மென்மை மற்றும் நெகிழ்ச்சித்தன்மைக்கு கொலாஜன் அவசியம். மட்சா டீ குடிப்பதன் மூலம், உடலில் கொலாஜன் உற்பத்தி அதிகரித்து, சருமம் உறுதியாகவும், மென்மையாகவும் மாறும்.
பருக்களை எதிர்க்கும்: மட்சாவில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், பருக்கள் மற்றும் சிவந்த தழும்புகளை குறைக்க உதவுகிறது. அடிக்கடி பருக்கள் வருபவர்களுக்கு இது ஒரு சிறந்த இயற்கை தீர்வாக இருக்கும்.
எப்படி பயன்படுத்துவது?
ஸ்மூத்தி:
மட்சா பொடி, பால் (தேங்காய் பால், பாதாம் பால் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்), வாழைப்பழம் மற்றும் உங்களுக்கு பிடித்த இனிப்பு போன்றவற்றைச் சேர்த்து மிருதுவாகும் வரை அரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால், மேலும் பால் அல்லது நீர் சேர்த்துக்கொள்ளலாம். ஸ்மூத்தியை ஒரு கிளாஸில் ஊற்றி, உங்களுக்கு பிடித்த toppings (வாழைப்பழத் துண்டுகள், சியா விதைகள், நட்ஸ்) கொண்டு அலங்கரித்து, அருந்தலாம். மட்சா பொடியை பயன்படுத்தி டீ செய்தும் அருந்தலாம்.
மட்சா ஃபேஸ்பேக்:
ஒரு பாத்திரத்தில், ஒரு டீஸ்பூன் மட்சா பொடியுடன் சிறிது தண்ணீர் அல்லது தயிர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின் இந்தக் கலவையை முகத்தில் தடவி, 10-15 நிமிடங்கள் ஊற விடவேண்டும். பின்னர், வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதை வாரம் இருமுறை செய்து வரலாம்.