
குளித்த பின்பு கைகளில் கிளிசரின் மற்றும் பன்னீர் கலந்து தடவினால் கைகள் மென்மையாக மாறும்.
பொடுகுத்தொல்லை நீங்க எலுமிச்சைச் சாறு ஒரு பங்கு, இரண்டு பங்கு தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலை கழுவி வந்தால் பொடுகுத்தொல்லை அறவே நீங்கிவிடும்.
உதடுகளில் பாலாடையைத் தடவி வந்தால் வறண்டு போன உதடுகள் மென்மையாகிவிடும்.
தக்காளிப்பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தடவி வர, சருமத்தில் உள்ள எண்ணெய்ப்பசை நீங்கிவிடும்.
தினமும் காலையில் குளிக்க செல்வதற்கு பத்து நிமிடம் முன்பும், இரவில் தூங்கப்போவதற்கு முன்பும் உதட்டில் கடுகு எண்ணெயை தேய்த்து வந்தால் உதடுகள் மிகவும் மென்மையாக மாறிவிடும்.
ஒரு தேக்கரண்டி பார்லி வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வந்தால் சருமம் மிருதுவாகும்.
கற்றாழைச் சாறில் தேங்காய் எண்ணையைக் கலந்து தேய்த்தால் தலைமுடி உதிராது. அடர்த்தியாகும், நன்றாக வளரும்.
வாரத்தில் ஒருமுறை தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய், அல்லது நல்லெண்ணெய் தடவி ஊறவைப்பது, கூந்தலின் வேர்களை வலுப்படுத்தி கூந்தல் வளர உதவும்.
சுத்தமான கடலை எண்ணெய் ஒரு ஸ்பூனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து கண்களின் கீழ் பூசி வந்தால் கருவளையம் மறைந்துவிடும்.
முகம் வறட்சியாக இருந்தால், கொத்துமல்லித் தழையை அரைத்து முகத்தில் பூசி பத்து நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் மென்மையாகும்.
நித்திய மல்லிச்செடி இலைகளை கஸ்தூரி மஞ்சளோடு சேர்த்து அரைத்து பருக்களின் மேல் தடவி, அரைமணி நேரம் கழித்து முகத்தை கழுவி வந்தால் சில நாட்களுக்குள் பருக்கள் மறைந்துவிடும்.
அரைக்கீரை விதையை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி தலையில் தேய்த்து வர முடி கருமையாகவும், செழுமையாகவும் வளரும்.