
எல்லோருக்குமே தலையில் வெள்ளைமுடி வந்துவிட்டால் கவலை தொற்றிக் கொள்ளும். அதை மறைப்பதற்கு பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுவதுண்டு. முதுமையில் ஏற்படும் நரையை முற்றிலும் ஆக தடுக்க முடியாது. ஆனால் இளநரையைத் தடுத்து விடலாம். அப்படி வருமுன் காக்கும் அழகு குறிப்புகள் இதோ:
உணவு:
எல்லா நோய்க்கும் சரி ஆரோக்கியமான உணவு சாப்பிடும்போதுதான் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக இருக்க முடியும். உடல் ஆரோக்கியமாக இருக்கும் பொழுதுதான் அழகு மேம்படும். அதற்கு நல்ல முறையில் உணவு எடுத்துக்கொள்வது அவசியம். வால்நட், பீட்ரூட், கேரட், நெல்லிக்காய் இந்த நான்கையும் தவறாமல் உட்கொள்ள வேண்டும். இவற்றுக்கு மெலனின் சுரப்பை அதிகப்படுத்தும் தன்மை உள்ளது. இவற்றை அன்றாடம் உட்கொண்டு வருவதன் மூலம் நரைமுடி வருவதை தடுக்கலாம். நரை முடி ஒன்று இரண்டு வந்தால் அதிகமாகாமல் கட்டுப்படுத்தலாம்.
தூக்கம்:
உடலின் வளர்சிதை மாற்றத்தில் மெலனின் குறைப்பு சுரப்பு குறைவதன் காரணமாக முடி நரைக்கிறது. மெலனின் சுரப்பி செயல்படும் நேரம் இரவு 11 முதல் 12 மணிவரை மட்டுமே. அந்த நேரத்தில் நாம் உறங்குவதே சுரப்பி சீராக செயல்படுவதற்கு ஏற்புடையதாக இருக்கும். ஆதலால் ஆழ்ந்த உறக்கத்தை அந்த நேரத்தில் கொண்டிருந்தால் இளநரை வருவதை தடுக்கலாம்.
பித்த நரை:
சிலருக்கு பித்தத்தினால் கூட தலையில் நரை தோன்றும். அப்படிப்பட்டவர்கள் காலையில் டீ காபி அருந்துவதை நிறுத்திவிட்டு ஒரு தேக்கரண்டி இஞ்சிச் சாற்றில் இரண்டு துளி தேன் சேர்த்து பருகி வந்தால் பித்தநரை வந்த சுவடே தெரியாமல் பறந்துவிடும்.
கீரை:
தினசரி பல வகையான கீரை உணவுகளை சாப்பிட வேண்டும். கரிசலாங்கண்ணி கீரை நம் கண்ணுக்குள் குளுமை தந்து கூந்தலுக்கு இளமை தரக்கூடிய கீரை. இதில் சாறு எடுத்து அதை அப்படியே தேங்காய் எண்ணெயில் கலந்து காய வைத்து தேய்த்தால் பசுமை மாறா இந்த கீரையின் மூலம் கருமை மாறா கூந்தலை பெறலாம். கருவேப்பிலை, முருங்கைக் கீரை போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்து வந்தால் இளநரையை நிறைவாய் தடுக்கலாம்.
மூங்கில் அழகு:
மூங்கில் இலைகளை தேங்காய் எண்ணெயில் இரண்டு வாரம் வரை ஊறவைத்து அந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வந்தால் நரை இல்லாத முடி நிச்சயம் கிடைக்கும். நரை மாறி முடி அழகு பெறும்.
பொடி:
வெந்தயம், சீரகம், வால் மிளகு இவற்றை பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வந்தால் இளநரையின் பாதிப்பு போய்விடும்.
எண்ணெய் கலவை:
நெல்லிக்காய் சாற்றோடு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றை சேர்த்து காய்ச்சி தினம் தலைமுடியின் வேர்க்கால்களில் தடவினால் இளநரை வராமல் தடுக்கலாம். இளநரை ஒன்றிரண்டு இருந்தால் அதன் மீது தடவினாலும் நரை மாறும்.
மருதாணி இலை, நெல்லிக்காய்சாறு, டீ டிகாஷன், முட்டையின் வெள்ளை கரு இவற்றை தேய்த்து இரண்டு மணிநேரம் கழித்து தலையை அலச நரை வருவதை தடுக்கலாம்.