
தற்போது வெயில் காலம் என்பதால் இளம்பெண்களின் சருமம் பாதிக்கப்படுவது நிச்சயம். கல்லூரி மற்றும் அலுவலகங்கள் செல்லும் இளம் பெண்கள் வாரம் ஒரு முறையாவது தங்கள் அழகை பேணுவது குறித்து சிந்திக்க வேண்டும்.
அதற்காக அழகு நிலையங்களை நாடுவதைக் காட்டிலும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சுயமாக அவரவர் சருமத்திற்கும், அழகுக்கும் எது பொருத்தமானது என்பதை தேர்ந்தெடுத்து அதை முயற்சித்து பார்ப்பதே நலம் தரும். மேலும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நாம் அழகு செய்யும்போது அதில் நிச்சயம் பக்க விளைவுகள் இல்லாமல் இருக்கும் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.
இளம் பெண்களுக்கான சில இயற்கை முறை குறிப்புகள் இங்கே…
சரும பிரச்னைகளா?
அதிகமாக வெயிலில் அலைவது சருமத்துக்கு ஏற்காத ஒப்பனைப் பொருட்களை பயன்படுத்துவது சமச்சீர் உணவு இல்லாதது போன்ற பல காரணங்கள் மென்மையான தோலில் சுருக்கத்தை உண்டாக்கும். இந்த தோல் சுருக்கம் நீங்க தினமும் கடலை மாவுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து பேஸ்ட் ஆக செய்து முகம் மற்றும் கை கால்களில் தடவி ஊற விட்டு குளித்து வரலாம்.
அதேபோல் வறட்சியான சருமத்திற்கு வெண்ணெயைத் தேய்த்து அரைமணி நேரம் ஊறவைத்து பின் குளித்து வந்தால் சருமம் சுருக்கத்துடன் வறட்சியும் நீங்கும். வாரத்திற்கு இரண்டு மூன்று வெண்ணையை உணவுகளில் சேர்த்துக்கொண்டாலும் தோலின் சுருக்கம் நீங்கி ஒரு நல்ல சருமத்தை மீட்டெடுக்கலாம்.
சருமத்தில் இயற்கையான எண்ணெய் பசையைவிட சற்று அதிகமாக சுரக்கும் நிலை சிலருக்கு இருக்கம். அதீத கவலை, அலைச்சல் போன்றவைகள் சருமத்தை மேலும் மாசுபடுத்திக் காட்டும். இதற்கு வீட்டிலேயே இருக்கும் உறைய வைத்த தயிர் சிறந்த நிவாரணம். கெட்டித்தயிரை எடுத்து இரவு நேரத்தில் முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவுங்கள். எண்ணெய் பசை நீங்குவதோடு முகத்தில் இருக்கும் மாசையும் அகற்றும் சக்தி தயிருக்கு உண்டு.
அழகைக் கெடுக்கும் மங்கு, மருக்களா?
கழுத்து, முகம் போன்ற பகுதிகளில் சிறு சிறு கட்டிகள் போன்ற மருக்கள் சிலரின் அழகையே கெடுக்கும். அவற்றை முடிவைத்து கட்டி இழுப்பது அல்லது லேசர் மூலம் எடுப்பது என்று முரட்டு வைத்தியம் செய்வது ஆபத்தானது. அத்தி மரம் பாலை மருக்களின் மேல் தொடர்ந்து தடவினால் தானாகவே மருக்கள் உதிர்ந்து விழுந்து விடும் என்கிறது இயற்கை குறிப்பு.
அதேபோல் மங்கு எனப்படும் பாதிப்பை அகற்ற கைப்பிடி பன்னீர் ரோஜாவை பாலுடன் சேர்த்து அரைத்து தடவி ஊறவைத்து கழுவி வர மங்கின் நிறம் மாறும் வாய்ப்பு உண்டு.
ஆழ்ந்த தூக்கம் இல்லையா?
அழகைத்தரும் விஷயங்களில் ஆழ்ந்த தூக்கம் மற்றும் அதனால் கிடைக்கும் ஓய்வும் அவசியம் தேவை. ஆனால் தற்போது டென்ஷன் மற்றும் அலைபேசி தூக்கத்தை கபளீகரம் செய்து விடுகிறது. இதற்கு சரியான வழி கசகசாதான். சிறிது கசகசாவை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து அத்துடன் தேங்காய்ச்சில் ஒன்றை அரைத்து அப்படியே சாப்பிடுங்கள். தூக்கம் கண்களைத் தழுவும்.
தலையில் வைத்துக் காய்ந்த மல்லிகைப்பூவை தலையணை மேல் வைத்து அதை கவர் செய்து படுங்கள். துளசியையும் இப்படி செய்யலாம். காரணம் இவைகளுக்கு மன அழுத்தம் போக்கும் சக்தி உண்டு.