
இன்றும் கிராமப்புறங்களில் சந்தைகளில் மாடுகள், குதிரைகள் முதலியவற்றை விலை கொடுத்து வாங்கும் போதும், விற்கும் போதும் சுழிகளை கவனமாகப் பார்த்து வாங்குபவர்கள் உண்டு. இவற்றில் அவற்றுக்குரிய பலன்களை, அனுபவஸ்தர்கள் அவர்களின் அனுபவத்தின் மூலம் கண்டறிந்தவற்றை கூறுவது கிட்டத்தட்ட உண்மையாகவே நிகழ்ந்து வரும் நிகழ்வு. அதுபோல் நம் உடம்பில் ஒவ்வொரு இடத்திலும் உள்ள சுழிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. அதை சொல்லும் குறிப்புகள் இதோ:
சிலரின் புருவங்களில் சுழிகள் நன்றாக தெரியக் கூடியனாகவும், பிரதட்சணமாகவும், வழவழப்பாகவும், சிலந்திப்பூச்சியின் பின்னலை போன்றும் அமைந்திருப்பது உண்டு. அப்படி அமைய பெற்றவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
மயிர்ச்சுழி, நெற்றியில் உண்டாகும் சுழி, தோற் சுழி என்ற இந்த மூன்று சுழிகளும் உடலின் வலப்பக்கத்தில் வழவழப்பாகவும் தெளிவாகத் தெரியும் வகையிலும் விளங்குமாயின் சிறப்புடையதாகப் போற்றப்படுகிறது.
இன்றும் பிறந்த குழந்தைக்கு தலையில் எப்படி சுழி இருக்கிறது என்பதை கவனிப்பவர்கள் உண்டு. தலையில் வல இடப் பக்கங்களில் பிரதட்சணமாக சுழி இருந்தால் அத்தகையவர் அரசாட்சி நடத்தும் அளவுக்கு ராஜயோகம் உடையவராய் திகழவார் என்றும் வலப்பக்கமாக சுழித்திருப்பதாக தலையில் பின் புறத்தில் காணப்பட்டால் மிகவும் மேலான அதிர்ஷ்ட வாழ்க்கை வந்து அமையும் என்றும் சுழி பற்றிய லட்சணக்குறிப்பு கூறுகிறது.
உள்ளங்கையின் அமைப்பில் பிரதட்சணமாக தெரியக்கூடிய சுழி அமைந்திருந்தால் அத்தகையோருக்கு செல்வ வளமும், இன்பச் செறிவும், தூய வாழ்க்கையும், திருமணம் ஆகியவையும் சிறப்பாக அமையும் வாய்ப்பு காத்திருக்கிறது என்று கூறுகிறது லட்சண குறிப்பு.
விரலின் ஐந்து விரல்களில் எந்த விரலிலாவது ஒரு விரலின் நுனியில் தெளிவாகவும், பிரதட்சணமாகவும் அமைந்து தெரியக்கூடியதான வகையில் சுழி இருந்தால், அவர்களின் வாழ்க்கையில் மற்றவர்கள் மதிக்கும் சிறப்புக்கு உரிய பேறுகள் உண்டாகும் என்று இந்தச் சுழிகள் பற்றிய குறிப்பு கூறுகின்றது.
சாதாரணமாக அதிகமாக ஊர் சுற்றிக்கொண்டிருப் பவர்களை பார்த்தால் உன் உள்ளங்காலில் சுழிச்சிருக்கோ, அதான் இப்படி ஊர் சுற்றுகிறாயோ? என்று கேட்பவர்கள் உண்டு. இப்படி உள்ளங்காலில் பிரதட்சிணமாகவும் வெளியே தெளிவாகத் தெரியக் கூடியனவாகவும் சுழி அமையப்பெற்றவர்கள் திரை கடல் ஓடியும் திரவியம் தேடக்கூடிய வணிகராக விளங்குவார்கள் என்கிறது சுழிகள் பற்றிய அழகியல் குறிப்பு.
இப்படி அங்க லட்சணங்களில் உடல் சுழிகளுக்கும், ரோமச் சுழிகளுக்கும் உள்ள அம்சங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவது உண்டு.
மேலும் தலை, நெற்றி, புருவம் போன்ற இடங்களில் எங்கு சுழி இருந்தாலும் சட்டென்று அனைவரின் கண்களுக்கும் அது தெரிந்துவிடும். அப்பொழுதே அந்த சுழியைப் பார்த்து ஜாதகம் கூறுபவர்கள் இன்றும் கிராமப்புறங்களில் உண்டு. நமக்கு இருக்கும் சுழி நம்மை மேன்மைப் படுத்துவதாக அமையட்டும்.