
கைவிரல்கள் எப்போதும் சொரசரப்பாக இருப்பது நிறைய பெண்மணிக்கு இருக்கும் வருத்தம். காரணம் சமைக்கும் போது அடிக்கடி தண்ணீரில் கை வைப்பது. பாத்திரம் தேய்க்கும் லிக்விட் ஒத்துக்கொள்ளாதது. துணி துவைக்கும் பொழுது அந்த சோப்பு சேர்ந்து வராதது போன்ற காரணங்களால் கைகள் சொரசொரப்பாகி விடுவது உண்மை.
அதை இரவில் படுக்கும்பொழுது எப்படித்தான் சோப்பு எல்லாம் போட்டு கை கழுவி எண்ணெயோ, க்ரீமோ தேய்த்துக்கொண்டு படுத்தாலும் ஓரளவுதான் அதில் பலன் கிடைக்கும். முழுவதுமாக மாறிவிடாது.
இதனால் பட்டுப்புடவைகள் மற்றும் எந்த புடவையை உடுத்தினாலும் அதை மடிப்பு வைத்து கட்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். காரணம் கையில் உள்ள சொரசொரப்பு புடவையில் உள்ள நூலில் மாட்டிக் கொண்டு அதை அழகாக கட்டுவதற்குள் பெரும்பாடாகிப்போகும்.
சரி, க்ரீமையோ ஏதாவது தைலங்களையோ கையில் தடவிக்கொண்டு கட்டலாம் என்றாலும் அது புடவையில் ஒட்டிக் கொள்ளுமோ என்று அச்சம் வரும். இப்படி நிறைய சிரமங்களை பல்வேறு நாட்கள் பலரும் அனுபவிப்பது உண்டு.
கைவிரல்கள் மிருதுவாக இருந்தால்தான் குழந்தை களையும் தூக்கிக் கொஞ்ச முடியும். இல்லையேல் நம் சொரசொரப்பு அவர்களின் பட்டு மேனி தாங்காமல் அழுவார்கள். அதை எளிமையாக தீர்க்கும் வழி இதோ:
இரண்டு ஸ்பூன் மசித்த பப்பாளிப்பழம், இரண்டு ஸ்பூன் அன்னாசி பழச்சாறு, ஒரு முட்டையின் மஞ்சள் கரு, ஒரு டீஸ்பூன் வினிகர், ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் இவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். பப்பாளி பழக்கூழை அன்னாசி பழச்சாறுடன் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். முட்டையின் மஞ்சள் கருவை வினிகர் மற்றும் ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து அடித்துக்கொள்ள வேண்டும்.
இதனை பப்பாளி கூழுடன் கலந்து கைவிரல்களை அதில் 20 நிமிட நேரம் ஊறவிடவும். இடையே நகக்கண்களை மசாஜ் செய்ய வேண்டும். இதனால் நகம் மற்றும் கைவிரல்கள் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மிளிரும்.
முட்டி பளபளப்பாக…
முட்டி பகுதிகளை கவனிக்காமல் விட்டுவிட்டால் அந்த இடங்கள் நன்றாக கறுத்து அவற்றில் ஒரு வெடிப்பு வரும். தோல் மிகவும் அழுத்தமாக மாறி வெடிப்பிலிருந்து ரத்தம் வரும். வலியும் அதிகமாக இருக்கும். பிறகு மற்றவர் களுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கூட கை அந்த இடத்தை தொட்டு தடவி கொடுக்க ஆரம்பிக்கும். அது பல்வேறு சமயங்களில் தர்ம சங்கடத்தை உண்டாக்கும். அதைப்போக்க எளிய வழி இதோ:
பால் கால் கப், எலுமிச்சை 2, சர்க்கரை 2 டீஸ்பூன் இவை தான் அதற்குத் தேவையானது.
பாலை ஒரு பஞ்சில் தொட்டுக்கொண்டு கை ,கால் முட்டி பகுதிகளை மசாஜ் செய்யவேண்டும். பிறகு பாதியாக வெட்டிய எலுமிச்சம் பழத்தின் ஒரு பாதியை சர்க்கரையில் நனைத்து முட்டி பகுதிகளில் அழுத்தி தேய்க்கவேண்டும். சிறிது நேரம் கழித்து அந்த இடங்களை தண்ணீரால் கழுவி வந்தால் சருமம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும். இதை அவ்வப்பொழுது செய்து வர வேண்டும்.
மிகவும் வெடிப்பாக இருக்கும் காலங்களில் அடிக்கடி லெமனை கொண்டு தேய்த்தால் எரிச்சல் எடுக்கும். அதனால் ஒரு நாள் விட்டு ஒருநாள் செய்தால் பழகிவிடும். முட்டிகளும் அழகு பெறும்.