முகச்சருமத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், அழகாகவும் மாற்றவும் உதவும் ஒரு முக்கிய பொருள் விளக்கெண்ணெய். வாருங்கள்! இதனை எப்படி பயன்படுத்துவது? என்னென்ன பலன்கள் கிட்டும் என்று பார்ப்போம்.
பெண்கள் தங்கள் முகச்சருமத்தைப் பராமரிக்க பார்லர் செல்வார்கள். ஆனால், முக்கால்வாசி பேர் வீட்டிலேயே இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி முகச்சருமத்தை பராமரிப்பார்கள். அந்தவகையில் விளக்கெண்ணெயை முகத்திற்கு பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்துப் பார்ப்போம்.
ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெயில் அதாவது 4.5 கிராம் அளவு விளக்கெண்ணெயில் 40 கிலோ கலோரிகள், 4.5 கிராம் மொத்த கொழுப்பு, 2.2 கிராம் நிறைவுற்ற கொழுப்பு, வைட்டமின் ஈ, ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள், ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
விளக்கெண்ணெயை முகத்தில் பயன்படுத்துவதால், சருமம் சுத்தமாகவும் ஈரேற்றமாகவும் வைத்திருக்க உதவும். விளக்கெண்ணெய்யில் உள்ள ட்ரை கிளிசரைடுகள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஈர்த்து, சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும். மேலும், அவற்றில் உள்ள கொழுப்பு அமிலமான ரிசினோலிக் அமிலம் சருமத்தை மென்மையாக்கவும், மிருதுவாக்கவும் உதவும்.
பயன்படுத்தும் முறை:
சில துளிகள் விளக்கெண்ணெயை எடுத்து முகத்தில் மசாஜ் செய்யலாம். ஒரு இரவு முழுவதும் கூட விளக்கெண்ணெயை முகத்தில் தங்க விடலாம். காலையில் எழுந்தவுடன் சுத்தமான நீரில் முகத்தை கழுவினால் போதும். இல்லையெனில் ஒரு மணி நேரமாவது முகத்தில் வைத்துவிட்டு பின் வெந்நீரில் முகத்தை கழுவலாம்.
அதேபோல், எலுமிச்சை சாறுடன் விளக்கெண்ணெயை கலந்து முகத்தில் தடவி வரலாம். சிறிது நேரம் முகத்தில் விட்டு காய்ந்தவுடன் முகத்தை கழுவலாம். எலுமிச்சை சாற்றில் உள்ள வைட்டமின் சி முகத்தில் உள்ள நாள்பட்ட கரும்புள்ளிகள் மற்றும் பிக்மெண்டேஷனைக் குறைக்கவும், விளக்கெண்ணெய் சருமத்தை பொலிவாக்கவும் உதவும்.
விளக்கெண்ணெயுடன் கற்றாழை ஜெல்லை கலந்து முகத்தில் தடவி பின் சுத்தமான நீரில் கழுவலாம். இது சருமத்தை நீரேற்றத்துடன் மாற்றும்.
விளக்கெண்ணெயுடன் மஞ்சள் தூளை சேர்த்து பேஸ்ட் ஆக்கி முகத்தில் தடவலாம். அரை ஸ்பூன் விளக்கெண்ணை உடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் ஆக்கிக் கொள்ளவும். கலந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து நன்றாக காய்ந்ததும், முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும்.
சருமத்தை பாதுகாக்கவும், சருமத்தில் இருக்கும் காயங்களை நீக்கவும் விளக்கெண்ணெய் மிகவும் பயன்தரும் என்பது குறிப்பிடத்தக்கது.