
இன்றைய நாட்களில் மனஅழுத்தம் மற்றும் வேலைப்பளு காரணமாக, பலருக்கும் தலைமுடி உதிர்வு மற்றும் இளநரை போன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இதனால், தலைமுடி பராமரிக்க அதிக செலவுகள் செய்வதற்குப் பதிலாக, சில எளிய இயற்கை முறைகள் மூலம் தீர்வுகளை பெறலாம். இதற்கான ஒரு சிறந்த வழி செம்பருத்தி பூ பயன்பாடாகும்.
செம்பருத்தி பூவின் பயன்கள் (Benefits of hibiscus flower)
செம்பருத்தி பூ, பூஜைக்குப் பயன்படும் புஷ்பமாக இருப்பதால், பல வீடுகளில் இந்த செடி காணப்படும். இந்த பூவினை பூஜைக்கு மட்டுமன்றி, சரும பராமரிப்பு, முடி உதிர்வு தடுக்கும், மற்றும் கருமையான முடி வளர்ச்சி போன்ற பல பயன்களுக்காகவும் பயன்படுத்தலாம்.
தலைமுடி உதிர்வை தடுக்க – செம்பருத்தி
தேவையான பொருட்கள்:
சிவப்பு ஒற்றை செம்பருத்தி இதழ்கள் – 25 பூக்கள்
கறிவேப்பிலை – 5 கொத்து
வேப்பிலை – 1 கைப்பிடி
மருதாணி – 1 கைப்பிடி
வெந்தயம் – 1 கைப்பிடி
காய்ந்த எலுமிச்சை பழ தோல் – 10 நம்பர்
தயாரிக்கும் முறை:
செம்பருத்திப் பூ, வேப்பிலை, கறிவேப்பிலை, மருதாணி இலைகளை சுத்தம் செய்து உலர்த்தி, மிக்ஸியில் பொடி செய்யவும்.
வெந்தயத்தை நன்றாக வெயிலில் காயவைத்து, பவுடராக்கவும்.
காய்ந்த எலுமிச்சை தோலைப் பொடித்து, பவுடராக்கவும்.
இந்தப் பவுடர்களை கலந்து ஒரு பாட்டிலில் சேமிக்கவும்.
தேவையான அளவு எடுத்து, அதனுடன் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து பேஸ்ட் போலக்கலந்து, தலையில் தடவி ஊறிய பிறகு குளிக்கவும்.
பலன்கள்:
உடல் குளிர்ச்சி, பொடுகுத் தொல்லை நீங்கும்.
முடி உதிர்வைத் தடுக்கிறது
இளநரைத் தடுக்கும்
முடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரும்
INSTANT HEAD PACK PASTE
தேவையானவை:
செம்பருத்தி இலை, பூக்கள்
ஊறவைத்த வெந்தயம்
தயிர்
முட்டையின் வெள்ளைக் கரு
முறை:
இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து, அரைமணி நேரம் தலையில் ஊறவைக்கவும். பிறகு குளிக்கவும்.
பலன்கள்:
முடி பட்டு போல் மிருதுவாக இருக்கும்.
செம்பருத்தி மசாஜ் ஆயில்
தேவையான பொருட்கள்:
செம்பருத்திப் பூக்கள் – 50 (இதழ்கள் மட்டும் பிரித்து எடுத்து கொள்ளுங்கள்)
செம்பருத்தி இலை – 50
கறிவேப்பிலை 2 கொத்து
வேப்பிலை – 1 கைப்பிடி
மருதாணி – 1 கைப்பிடி
வெந்தயம் – 1 கைப்பிடி
பெரிய நெல்லிக்காய் – 25 (நறுக்கியது)
முறை:
மேற்சொன்ன அனைத்து பொருள்களையும் தண்ணீர் இல்லாமல் விழுதாக அரைக்கவும். சிறு வடைகளாக தட்டி, வெயிலில் உலர்த்தி எடுக்கவும்.
ஆயில் தயாரிக்கும் முறை:
தேவையான எண்ணெய்கள்:
நல்லெண்ணெய் – 500 ml
தேங்காய் எண்ணெய் – 500 ml
விளக்கெண்ணெய் – 100 ml
அடுப்பில் இரும்பு வாணலியில் விளக்கெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பிறகு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு சூடாக்கவும். அதில் காயவைத்து எடுத்த வடைகளை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
வாணலியை மூடி மூன்று நாட்கள் வடைகளை ஊறவைத்த பிறகு, எண்ணெயை வடிகட்டி பாட்டிலில் சேமிக்கவும். (வடிகட்டிய பின் ஒரு முறை எண்ணெயை சூடாக்கி பின் ஆறவிட்டு சேமிக்க வேண்டும்)
இதனால் நீண்ட காலம் வைத்து உபயோகிக்கலாம்.
முகப்பொலிவிற்கு – செம்பருத்தி FACE PACK
தேவையானவை:
செம்பருத்திப் பூ
செம்பருத்தி இலை
தேன்
எலுமிச்சை சாறு
பயத்த மாவு
முறை:
பூ, இலை அரைத்து, தேன், எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
முகத்தில் பேக் போடவும்.
பிறகு பயத்த மாவால் தேய்த்து கழுவவும்.
பலன்கள்:
முக கருமை நீங்கும்
சருமம் பொலிவுடன் மினுமினுக்கும்.