
அடர்த்தியான, பளபளப்பான, நீண்ட கூந்தலைப் பெறுவது என்பது நம்மில் பலரின் கனவாக இருக்கிறது. இதற்காக விலை உயர்ந்த ஷாம்பூ, கண்டிஷனர், ஹேர் மாஸ்க் எனப் பலவற்றையும் பயன்படுத்துகிறோம். ஆனால், இவ்வளவு பராமரிப்பிற்குப் பிறகும் முடி உதிர்தல் நிற்கவில்லையே என்று கவலைப்படுபவரா நீங்கள்?
பிரச்சனை நீங்கள் பயன்படுத்தும் பொருட்களில் அல்ல; தலைக்குக் குளித்த பிறகு, உங்கள் கூந்தலை நீங்கள் கையாளும் விதத்தில் இருக்கலாம். ஈரமான கூந்தல் என்பது ஒரு மெல்லிய பட்டுத் துணியைப் போல மிகவும் பலவீனமாக இருக்கும். அந்த நேரத்தில் செய்யப்படும் சிறு தவறுகளே, முடி உதிர்வுக்கு முக்கியக் காரணமாக அமைகின்றன.
தவறு 1: டவலைக் கொண்டு கடுமையாகத் தேய்ப்பது:
தலைக்குக் குளித்து முடித்தவுடன், நம்மில் பலர் செய்யும் முதல் தவறு, ஒரு சாதாரண டவலை எடுத்து, கூந்தலை இறுக்கமாகச் சுற்றி, தலையில் ஒரு கொண்டை போலக் கட்டிக்கொள்வதுதான். இன்னும் சிலர், முடியை வேகமாக உலர்த்துகிறேன் என்று டவலால் கடுமையாகத் தேய்ப்பார்கள். இந்த இரண்டு செயல்களுமே கூந்தலின் வேர்க்கால்களைப் பலவீனப்படுத்தும்.
சரியான முறை: ஒரு மென்மையான மைக்ரோஃபைபர் டவல் அல்லது பழைய காட்டன் டி-ஷர்ட்டைப் பயன்படுத்தி, கூந்தலில் உள்ள ஈரத்தை மெதுவாக ஒத்தி எடுங்கள். முடியை ஒருபோதும் கசக்கவோ, தேய்க்கவோ கூடாது.
தவறு 2: ஈரமான முடிக்கு சீப்புதான் முதல் எதிரி:
அவசரத்தில் தலைமுடியை உலர்த்துவதற்கு முன்பே, சிக்கை எடுப்பதற்காக ஈரமான கூந்தலிலேயே சீப்பை வைத்து வாரத் தொடங்குவது, முடிக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். ஈரமான நிலையில், தலைமுடி அதிக நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பதால், எளிதில் நீண்டு, அதன் பலத்தை இழந்துவிடும். இந்த நேரத்தில் சீப்பைப் பயன்படுத்தும்போது, முடி அதன் இயல்பை விட அதிகமாக நீட்டப்பட்டு, வேரிலிருந்து எளிதாக அறுந்துவிடும். இதுவே முடி உதிர்வு அதிகரிக்க முக்கியக் காரணமாகும்.
சரியான முறை: கூந்தல் சுமார் 80% உலர்ந்த பிறகு, முதலில் உங்கள் விரல்களால் பெரிய சிக்கல்களைப் பிரிக்கவும். அதன்பிறகு, ஒரு பெரிய பல் கொண்ட மரச் சீப்பைப் பயன்படுத்தி, முடியின் நுனியிலிருந்து தொடங்கி, படிப்படியாக வேர்களை நோக்கிச் சிக்கை எடுக்கவும்.
தவறு 3: ஈரத்தை கூந்தலுக்குள் சிறை வைப்பது:
சிலர், தலைமுடி முழுவதுமாக உலராத நிலையில், அப்படியே பின்னிக்கொள்வார்கள் அல்லது ஒரு கொண்டை போட்டுவிடுவார்கள். இது வெளிப்புற முடிகள் காய்ந்தது போன்ற தோற்றத்தைக் கொடுத்தாலும், உட்புற முடிகளும், உச்சந்தலையும் ஈரமாகவே இருக்கும். இந்த ஈரப்பதம், பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் வளர ஒரு சாதகமான சூழலை உருவாக்கி, பொடுகு, உச்சந்தலையில் அரிப்பு மற்றும் தொற்று போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
சரியான முறை: தலைமுடி இயற்கையான காற்றில் முழுமையாக உலரும் வரை, அதைத் தாராளமாக விட்டுவிடுவது அவசியம்.
தலைமுடி லேசான ஈரப்பதத்துடன் இருக்கும்போது, சில துளிகள் ஹேர் சீரத்தை எடுத்து, உள்ளங்கைகளில் தேய்த்து, முடியின் நீளத்திலும், நுனியிலும் தடவ வேண்டும். சீரம், கூந்தலுக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாகச் செயல்பட்டு, வறட்சியைக் குறைக்கும். குறிப்பாக, மழைக்காலத்தில் ஏற்படும் பிசுபிசுப்பு மற்றும் வறட்சியைத் தடுத்து, கூந்தலைப் பளபளப்பாகவும், மென்மையாகவும் வைத்திருக்க இது உதவும்.