சருமம் ஆரோக்கியமாகவும் மென்மையாகவும் இருக்க நாம் பல முயற்சிகளை செய்கிறோம். அந்தவகையில் சருமத்தில் அரசி நீர் (Rice water) பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகளை இப்பதிவில் பார்ப்போம்.
என்னத்தான் நாம் பார்லர் சென்று, ஸ்கின் கேர் செய்து வந்தாலும், வீட்டில் இருக்கும் சில பொருட்களை சருமத்தில் பயன்படுத்துவது அவசியம். இது நம் சருமத்தை தொடர்ந்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். அப்படி எளிமையாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சருமத்தை பாதுகாக்க உதவும் ஒன்று தான் அரிசி நீர்.
அரிசி இல்லாத வீடு இருக்கவே முடியாது. ஆகையால் அனைவருமே இந்த ட்ரிக்கை முயற்சிக்கலாம்.
அரிசியைக் கழுவிய அல்லது சமைத்த பிறகு கிடைக்கும் இந்த நீரில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இது சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை அளிப்பதுடன், சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்தையும் குறைக்கிறது. மேலும், இது முகப்பரு, சரும எரிச்சல் மற்றும் சிவப்பைக் குறைத்து, சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது. அரிசி நீரை டோனராகவும், ஃபேஸ் மாஸ்காகவும் பயன்படுத்தலாம்.
அரிசி நீரின் நன்மைகள் (Rice water Benefits):
அரிசி நீரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி, பளபளப்பாக மாற்ற உதவுகின்றன.
இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்தை குறைத்து, இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
அரிசி நீர் முகப்பரு மற்றும் அதன் தழும்புகளைக் குறைக்கவும் உதவுகிறது.
இது சருமத்தை ஈரப்பதமாக வைத்து, மென்மையாகவும், மிருதுவாகவும் உணர வைக்கிறது.
அரிசி நீர் அரிப்பு, சிவத்தல் மற்றும் சரும எரிச்சலைக் குறைக்க உதவுகிறது.
தயாரிக்கும் முறை:
ஒரு கப் அரிசியை எடுத்து நன்றாக கழுவிக்கொள்ளவும். பின் அதில் 1 முதல் 2 கப் தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்களிலிருந்து 1 மணி நேரம் வரை ஊற வைக்கவும். இறுதியாக இந்த தண்ணீரை வடிகட்டி எடுக்க வேண்டும்.
இந்த நீரை ஒரு பாத்திரத்தில் 24 முதல் 48 மணி நேரம் வரை அறை வெப்பநிலையில் வைத்திருக்கவும். புளித்த பிறகு, அதில் ஒரு கப் சுத்தமான தண்ணீர் சேர்த்து, பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறைகள்:
டோனர்: சுத்தமான பருத்தியை அரிசி நீரில் நனைத்து, முகத்தில் டோனராக பயன்படுத்தலாம்.
முகத்தை கழுவுதல்: அரிசி நீரைக் கொண்டு முகத்தை கழுவலாம்.
ஃபேஸ் மாஸ்க்: ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அரிசி நீரை ஊற்றி, அதை முகத்தில் ஸ்ப்ரே செய்யலாம்.
இதன் பக்க விளைவுகள்:
பெரும்பாலானோருக்கு அரிசி நீர் பாதுகாப்பானது. ஆனால், அரிதாக சிலருக்கு இது சருமத்தில் வறட்சி, எரிச்சல் அல்லது அரிப்பை ஏற்படுத்தலாம். முதல் முறையாக பயன்படுத்துபவர்கள், ஒரு சிறிய பகுதியில் பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது. மேலும், அரிசி நீரை சுத்தமான முறையில் தயாரிக்கவில்லை என்றால், அது பாக்டீரியா வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடும்.