

பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் தழும்புகளும், தசைகள் விரிவுகள் காரணமாகவும் தழும்புகள் ஏற்படுகின்றன. எடை அதிகரிப்பு காரணமாக இளம்வயதில் தொடை, கழுத்து, தோள்பட்டை போன்ற பகுதிகளிலும் இந்த தழும்புகள் உருவாகிறது. இதைத் தவிர எடையை குறைப்பதற்கு ஜிம்மில் பயிற்சி செய்யும்போதும் தழும்புகள் உருவாகின்றன. இயற்கை வழியில் இவற்றைப் போக்கி அழகுடன் மிளிர சில குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும்.
தழும்புகளைப் போக்க சில எளிய வழிகள்:
தேங்காய் எண்ணெய், மல்லிகை எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஜெல்லி மூன்றையும் ஒன்றாகக் கலந்து தழும்புகள் உள்ள இடத்தில் மெதுவாக மசாஜ் செய்யவும். இது சருமம் வறண்டு போகாமல் இருக்க உதவும். தினமும் இந்த எண்ணெய்க் கலவையை தழும்புகள் மீது மசாஜ் செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
பாதாம் எண்ணெய்:
தழும்புகளை போக்குவதற்கு பாதாம் எண்ணெயை நேரடியாகத் தடவி மெதுவாக மசாஜ் செய்யலாம். பாதாம் எண்ணெயில் உள்ள விட்டமின் ஈ மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் தழும்புகளை மென்மையாக்கி சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும். நாலைந்து துளிகள் பாதாம் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து தழும்பின் மீது தடவி மெதுவாக மசாஜ் செய்ய நல்ல பலன் கிடைக்கும். பாதாம் எண்ணெயுடன் சர்க்கரையை சம அளவு எடுத்து நன்கு கலந்து தழும்புகள் உள்ள இடங்களில் தேய்க்கவும். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிவர தழும்புகள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கும்.
கோகோ பட்டர்:
கோகோ பவுடர் சருமத்தை ஈரப்பதமாக்குவதுடன், நெகழ்ச்சித் தன்மையை அதிகரித்து, தழும்புகளின் தோற்றத்தை படிப்படியாகக் குறைக்கிறது. தழும்புகள் மீது கோகோ பவுடரை நேரடியாகத் தடவலாம். குளிப்பதற்கு அரைமணி நேரம் முன்பு கோக்கோ பட்டரை வயிற்றுப் பகுதியில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்துவிட தழும்புகள் காணாமல் போய்விடுவதுடன் சருமத்தையும் பொலிவாக்கும்.
கற்றாழை ஜெல்:
தழும்புகளைப் போக்க கற்றாழை ஜெல்லை நேரடியாகத் தடவலாம் அல்லது மஞ்சள் மற்றும் தக்காளிசாறு போன்றவற்றை கலந்தும் பயன்படுத்தலாம். தினமும் குளித்ததும் தழும்புகள் உள்ள பகுதியில் ஈரம் போகத் துடைத்துவிட்டு கற்றாழை ஜெல்லை தடவி வரலாம். இவை சருமத்தை பாதுகாப்பதுடன், சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து வறட்சியை தடுக்கவும் உதவுகிறது.
தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெயை சிறிது சுட வைத்து வெதுவெதுப்பாக தழும்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து விட்டு குளிக்கலாம். தேங்காய் எண்ணெயுடன் சந்தனம் மற்றும் மஞ்சள் கலந்து தழும்புகள் மீது பூசி வர தழும்புகள் மறையும். அதேபோல் குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து தேங்காய் எண்ணையுடன் கலந்து தழும்புகளின் மீது தடவலாம். இவை சருமத்தில் உள்ள தழும்புகள் மற்றும் சுருக்கங்களை குறைப்பதுடன் சரும நிறத்தையும் பொலிவாக்கும்.
கடுகு எண்ணெய்:
தினமும் இரவில் கடுகு எண்ணெயை லேசாக சுட வைத்து தடவி மசாஜ் செய்யலாம். கடுகெண்ணையில் உள்ள விட்டமின் ஈ, ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தழும்புகளின் தோற்றத்தை குறைக்க உதவும். கடுகு எண்ணெயை சூடுபண்ணி அத்துடன் சிறிது மஞ்சள் தூள் கலந்து வயிற்றுப் பகுதியில் லேசாக தடவி மசாஜ் செய்யவும். சிறிது நேரம் கழித்து குளிக்க நாளடைவில் தழும்புகள் காணாமல் போய்விடும்.
விளக்கெண்ணெய்:
பாதிக்கப்பட்ட பகுதியில் விளக்கெண்ணெயை நேரடியாக தடவி மெதுவாக மசாஜ் செய்யலாம். அல்லது ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து தழும்புள்ள இடங்களில் தடவியும் மசாஜ் செய்யலாம். இது தழும்புகளை குறைக்க உதவும். சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து மென்மையாக்கி புத்துணர்ச்சி அளிக்கும். தழும்புகளின் நிறத்தை மங்கச்செய்யவும் உதவும். அடிவயிறு, தோள்பட்டை, தழும்புகள் உள்ள இடங்களில் விளக்கெண்ணெயுடன் சிறிது தேங்காய் எண்ணெய், குங்குமப்பூ எண்ணெய் போன்ற பிற எண்ணைகளையும் சேர்த்துத் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். நல்ல பலனைப் பெற தொடர்ந்து பயன்படுத்தவும்.