எந்த ஆடை உங்கள் உடலுக்கு பொருந்தும்? கண்ணாடி முன் நின்று 5 வடிவங்களை அடையாளம் காணுங்கள்!

தோள்பட்டை, இடை, இடுப்பு அளவுகளை ஒப்பிட்டுப் பார்த்து, உங்கள் வடிவத்துக்கு ஏற்ப உடைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
ஆடைகள்
ஆடைகள் Gemini image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

உடல் அமைப்பைப் பொறுத்து சரியான ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது நம் தோற்றத்தை மேலும் கம்பீரமாகவும், தன்னம்பிக்கையுடனும் காட்ட உதவும். இது நம் தோற்றத்தை சமநிலைப்படுத்தவும், வசதியாக உணரவும் உதவும். ஒவ்வொரு உடலமைப்புக்கும் ஒவ்வொரு விதமான ஆடைகள் பொருத்தமாக இருப்பதுடன் நம்மை மேலும் அழகுடன் காட்ட உதவும்.

1. மணற்கடிகாரம் அமைப்பு (Hourglass):

ஒடுங்கிய இடுப்புப் பகுதியைக் கொண்டு உடல் அமைப்பு வளைவாக இருப்பதைக் குறிக்கும். தோள்பட்டை மற்றும் இடுப்பு சமமாகவும், இடைப்பகுதி ஒடுங்கியும் இருக்கும் அமைப்பு இது. இதற்கு ஏற்ற ஆடைகள் என்று பார்த்தால் உடலின் இயற்கையான வளைவுகளைப் பின்தொடரும் ஆடைகள் (Fitted/Bodycon dresses, wrap dresses, fitted tops) இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.

அதாவது இடைப்பகுதியை எடுப்பாகக் காட்டும் பெல்ட் வைத்த உடைகள், பாடி-கான் உடைகள் மற்றும் நேரான குர்திகள்(straight Kurti) மிகச் சிறப்பாக பொருந்தும். உடலோடு ஒட்டி வரும் ஷிஃபான், ஜார்ஜெட் மற்றும் மெல்லிய பட்டுப் புடவைகள் இயற்கையான உடல் வளைவுகளை அழகாகக் காட்டும். மிகவும் தளர்வான (Baggy/Oversized) ஆடைகள் உடல் வடிவத்தை மறைத்து விடும்.

2. தலைகீழ் முக்கோணம் (Inverted Triangle):

தோள்கள் மற்றும் மார்பளவு இடுப்பை விட அகலமாக இருக்கும் அமைப்பு. இதற்கு இடுப்பு மற்றும் கீழ் உடலுக்கு அகலம் சேர்க்கும் வகையில் ஃபிளார் (Flared) ஸ்கர்ட்கள், ஏ-லைன் (A-line) ஆடைகள், பாவாடைகள் மற்றும் அகலமான கால் பகுதி கொண்ட பேண்ட்கள் (Wide-leg pants) மற்றும் ஷராரா வகை உடைகள் பொருத்தமாக இருக்கும். ஆண்களுக்கு ஸ்லிம்-ஃபிட் சட்டைகள் மற்றும் ஸ்ட்ரெயிட்-ஃபிட் பேன்டுகள் கம்பீரமான தோற்றத்தைத் தரும்.

தோள்பட்டையை மேலும் அகலமாகக் காட்டும் பஃப் ஸ்லீவ்ஸ் அல்லது அகலமான காலர்கள் போன்ற கூடுதல் பருமனைத் தரும் வடிவமைப்புகளைத் தவிர்க்கவும்.

ஆடைகள்
ஆடைகள்Gemini image

3. நேரான/செவ்வகம் (Rectangle) அமைப்பு:

தோள்கள், இடை மற்றும் இடுப்பு ஏறக்குறைய ஒரே அகலத்தில் இருக்கும் அமைப்பு. இதற்கு இடுப்புக்கு வடிவம் தரும் பெல்ட் வைத்த ஆடைகள், லேயரிங் (சட்டைக்கு மேல் ஜாக்கெட் அல்லது ஷிரக் அணிவது) மற்றும் ரஃபிள்ஸ்/ஃபிளேர் கொண்ட ஆடைகள் மற்றும் இடுப்பில் பெல்ட் அணியும் முறைகள் தோற்றத்திற்கு வளைவுகளைச் சேர்ப்பதுடன் அழகாக பொருந்தவும் செய்யும்.

இதையும் படியுங்கள்:
மேக்கப் இல்லாமலேயே கண்கள் ஜொலிக்கணுமா? இந்த முறையை இன்றே ட்ரை பண்ணுங்க!
ஆடைகள்

4. வட்டமான/ஓவல் (Oval / Apple) அமைப்பு:

உடலின் நடுப்பகுதியான வயிற்றுப் பகுதி சற்று பருமனாகவும், கால்கள் மற்றும் கைகள் சீராகவும் இருக்கும் அமைப்பு. இதற்கு மார்புக்குக் கீழே விரிவடையும் எம்பயர் வெயிஸ்ட் (Empire waist) ஆடைகள், மிடி, நீள ஆடைகள், வி-நெக் அல்லது ஸ்கூப் நெக் டாப்ஸ், செங்குத்துக் கோடுகள் கொண்ட குர்திகள் ஆகியவை உடலை உயரமாகவும் சீராகவும் காட்டும்.

உடலோடு ஒட்டாமல் மென்மையாக விழும் ரேயான், கிரேப் மற்றும் மல்மல் காட்டன் துணிகள் இவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். இவர்கள் வயிற்றுப் பகுதியில் இறுக்கமாகப் பிடிக்கும் பெல்ட்டுகள் மற்றும் அதிக தடிமனான துணிகளைத் தவிர்த்து விடுவது நல்லது.

5. பேரிக்காய் வடிவம் (Pear):

தோள்பட்டை குறுகலாகவும், இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகள் சற்று அகலமாகவும் இருக்கும் அமைப்பு.

இதற்கு மேல் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் போட் நெக், ஆஃப் ஷோல்டர் அல்லது காலர் வைத்த டாப்ஸ்களை அணியலாம். கீழ்ப்பகுதிக்கு ஏ-லைன் ஸ்கர்ட், அனார்கலி மற்றும் பலாஸோ(Palazzo) பேன்ட்கள் பொருத்தமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ஜரிகை மத்தாப்பூ வேண்டாம்! இந்த தீபாவளிக்கு 'க்வயட் லக்ஸுரி' ட்ரெண்ட்!
ஆடைகள்

மேல் ஆடைக்கு பளிச்சென்ற நிறங்களையும், கீழ் ஆடைக்கு அடர்ந்த நிறங்களையும் தேர்ந்தெடுப்பது உடலைச் சமநிலையில் காட்டும். இடுப்புப் பகுதியில் அதிக வேலைப்பாடுகள் உள்ள ஆடைகள் மற்றும் மிகவும் இறுக்கமான பேன்ட்களைத் தவிர்த்து விடவும்.

பொதுவான ஆடைத் தேர்வு குறிப்புகள்:

1. அடர்ந்த நிறங்கள் ஒல்லியான தோற்றத்தைத் தர உதவும். கோடைக்காலத்திற்கு மல்மல் போன்ற மென்மையான பருத்தி ஆடைகள் வசதியாக இருக்கும்.

2. ஒரே நிறத்தில் மேல் மற்றும் கீழ் ஆடைகளை அணிவதும், செங்குத்துக் கோடுகள் கொண்ட ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதும் உயரத்தைக் கூடுதலாகக் காட்டும்.

3. உடல் அமைப்பு எதுவாக இருந்தாலும், தோள்பட்டை தையல் சரியாகப் பொருந்துவதும், மிகவும் இறுக்கமாகவோ அல்லது மிகத்தளர்வாகவோ இல்லாமல் இருப்பதுமே ஆடைக்கு முழு அழகைத் தரும்.

4. கண்ணாடி முன் நின்று கொண்டு தோள்கள், மார்பளவு, இடை மற்றும் இடுப்பு ஆகியவற்றின் அகலத்தை ஒப்பிட்டுப் பார்த்து நம் உடல் வகையை எளிதாக அறிந்து கொள்ளலாம்.

உங்கள் உடலின் உண்மையான அளவுகளுக்கும் வளைவுகளுக்கும் ஏற்ப ஆடைகளைத் தேர்ந்தெடுக்கும்போது, கூடுதல் வசதியும் இயல்பான தன்னம்பிக்கையும் கிடைக்கும்; தேவையற்ற தையல் பிழைகளையும் தவிர்க்கலாம்.