
பொதுவாக பெண்கள் அழகாக, விதவிதமான அளவுகளில் கைப்பைகள் பயன்படுத்துவார்கள். டோட் பை என்பது பெண்கள் பயன்படுத்தும் ஹேண்ட் பேக் போல் அல்லாமல் சற்றே பெரியதாக இருக்கும். இது பொருள்களை போட்டு எடுத்துச் செல்லப் பயன்படும் ஒரு பை, குறிப்பாக மளிகை சாமான்கள், காய்கறிகள், அல்லது புத்தகங்கள் போன்ற பொருட்களை எடுத்துச் செல்ல உதவும்.
டோட் என்ற வார்த்தைக்கு பொருள்களை எடுத்துச் செல்வது அல்லது சுமந்து செல்வது என்று பொருள். டோட் பையின் பயன்கள் அதிகம். விசாலமான உட்புறம் உறுதியான கட்டுமானம் போன்ற காரணங்களால் கனமான பொருட்களை எடுத்துச் செல்ல வசதியாக இருக்கின்றன.
மாணவர்கள், அலுவலகம் செல்வோர், தொழில் வல்லுநர்கள், தமது புத்தகங்கள், கோப்புகள், குறிப்பேடுகள், மடிக்கணிணிகள் போன்றவற்றை இதில் போட்டு எடுத்துச் செல்கிறார்கள். இது ஒரு சிறந்த பயண நண்பனாகும். அலுவலகம் செல்வோர் தமது சிற்றுண்டி, தண்ணீர் பாட்டில், மதிய உணவு போன்றவற்றை வைத்து எடுத்து செல்கிறார்கள். விமான பயணங்களுக்கும் இந்தப் பை ஏற்றது.
டோட் பேக்கும் மற்ற கைப்பைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?
பொதுவாக ஹேண்ட் பேக்கில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட ஜிப்புகள் வைத்திருப்பார்கள். ஆனால் டோட் பையில் பூட்டிக்கொள்ள வசதியாக ஜிப் இருக்காது. அதில் ஒரே அளவிலான இரண்டு கைப்பிடிகள் உண்டு.
இவை மற்ற கைப்பைகளை விட மிகப்பெரியதாக இருக்கும். பெண்கள் தமது சிறிய கைப்பைகளில் வீட்டுச் சாவி, செல்போன், பர்ஸ், கர்சீப், மேக்கப் ஐட்டங்கள் என்று சிறிய அளவிலான பொருட்களை வைத்திருப்பார்கள். அவை எளிதான, லேசான பொருட்களை மட்டுமே தாங்கும் வகையில் இருக்கும். கனமான அல்லது அதிகமான பொருட்களை வைத்தால் கனம் தாங்காமல் கைப்பை சேதமாகிவிடும்.
ஆனால் டோட் பைகளின் முதன்மையான நோக்கம் இது பலவகையிலும் பயன்படக்கூடியது என்பதாகும். ஷாப்பிங் செல்வதற்கும் பயணத்திற்கும் பொருட்கள் வாங்குவதற்கும் மிகவும் ஏற்றவை. கனமான புத்தகங்கள், மடிக்கணினிகள், அத்தியாவசிய பொருள்கள், உடற்பயிற்சிக்கு தேவையான ஆடைகள் போன்ற எடுத்துச்செல்ல வசதியாக இருக்கிறது
இவை பெரும்பாலும் எளிமையானயான வடிவமைப்பைக் கொண்டவை. பொதுவாக செவ்வக அல்லது சதுர வடிவில் இருக்கும். இன்னும் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளிலும் கிடைக்கின்றன.
பெண்கள் உபயோகப்படுத்தும் சாதாரண ஹேண்ட் பேக்குகளில் பலவித அறைகள் இருக்கும். அவற்றில் பணம், சாவி, ஒப்பனைப் பொருள்கள் போன்றவற்றை தனித்தனியாக வைத்துக் கொள்ளும் வகையில் இருக்கும். ஆனால் டோட் பைகளின் உட்புறம் விலாசமாக இருந்தாலும் அவற்றில் உட்புறத்தில் எந்த பாக்கெட்டுகளோ அறைகளோ இல்லாமல் இருக்கும்.
டோட் பைகளை விமானப் பயணத்தின் போது செல்போன் சார்ஜர்கள், இயர் போன்கள், இரண்டு மூன்று செல்போன்கள், சாக்லேட்டுகள், போன்றவற்றை வைத்து எடுத்து செல்லலாம். இரண்டு நாள் பயணத்துக்கு ஏற்ற துணி வகைகளை வைத்து விமானத்தில் ஹேண்ட் லக்கேஜாக எடுத்துச் செல்லலாம்.
பெண்களின் கைப்பைகள் தோல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களில் செய்யப்படுகின்றன. ஆனால் டோட் பைகள் அதிக சுமைகளைக் கொண்டு செல்ல பயன்படுவதால் கேன்வாஸ், பருத்தி, நைலான் போன்ற நீடித்து உழைக்கும் பொருள்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.
லெதர் ஹேண்ட்பேக்குகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. ஆனால் டோட் பேக்குகளின் விலை குறைவுதான். எல்லோரும் வாங்கக்கூடிய வகையில் பட்ஜெட் ஃபிரெண்ட்லியாக இருக்கின்றன. உயர்தர டோட் பைகளின் விலை சற்றே கூடுதலாக இருக்கும்.