

தேங்காய் பால் சருமம் மற்றும் கேசத்திற்கு மிகவும் சிறந்தது. இது இயற்கையான ஈரப்பதம் வைட்டமின் சி, ஈ நிறைந்துள்ளது.
வெயிலினால் ஏற்படும் சரும எரிச்சல்களுக்கு தேங்காய்ப்பால் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தேங்காய்ப்பாலில் உள்ள கொழுப்பு மற்றும் எண்ணெய் சத்துக்கள் சருமத்தில் ஏற்படும் அரிப்பைக் குறைத்து ஈரப்பதத்தை தருகிறது. பாதிக்கப்பட்ட இடத்தில் தேங்காய் பாலை தடவி வந்தால் சருமத்தில் ஏற்படும் வலி, வீக்கத்தைக் குறைக்கும்.
சருமம் பளபளப்பாக
சுத்தமான தேங்காய் எண்ணெயை தேவையான அளவில் எடுத்து உடலில் தேய்த்து மசாஜ் செய்து அரைமணி நேரம் ஊறவைத்து பின் தேங்காய்ப் பாலுடன் கடலைமாவு அல்லது பயத்தமாவு கலந்து உடலில் தேய்த்துக் குளித்துவர சருமம் பளபளப்பாகும். வாரம் இருமுறை இதுபோல குளித்து வந்தால் சருமத்தை இளைமையாக வைக்கலாம்.
தழும்புகள் கரும்புள்ளி மறைய
சிலருக்கு முகப் பருக்கள் மறைந்த பின்னும் முகத்தில் தழும்பு காணப்படும். இதற்கு தேங்காய் வழுக்கையுடன் கஸ்தூரி மஞ்சள் மற்றும் வேப்பிலை சேர்த்து அரைத்து முகம் மற்றும் உடலில் பூசி கால் மணிநேரம் ஊறவிட்டு குளித்து வந்தால் உடல் வெப்பம் குறைந்து அவற்றில் உள்ள தழும்புகள், கரும்புள்ளிகளும் மறையும்.
கூந்தல் வளர்ச்சிக்கு, பளபளப்பிற்கும்
கெட்டியான தேங்காய் பால் அரை கப் எடுத்து தலையில் தடவி ஊறவிடவும். அரை மணிநேரம் கழித்து கூந்தலை அலசினால் முடியின் வளர்ச்சி தூண்டப்பட்டு, கூந்தல் பளபளப்பாகவும், ஆரோக்கியமாக இருக்கும்.
கூந்தல் ஈரப்பதம் கிடைக்க
சிலருக்கு கூந்தல் வறண்டு காணப்படும். கூந்தல் நுனிகளும் உடையும். இதன் விளைவாக முடி உதிர்வும் அதிகரிக்கும். இதற்கு தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து அரைமணி நேரம் ஊறவைத்து பின் தலைக்கு சீயக்காயுடன் இளநீர் சேர்த்து தலைக்கு குளித்தால் கூந்தலுக்கு நல்ல ஈரப்பதம் கிடைக்கும்.
முகம் பொலிவு பெற
தேங்காய்ப் பால் 2 டீஸ்பூன் எடுத்து 2 குங்குமப்பூவைச் சேர்த்து கலந்து முகம், கழுத்துப் பகுதியில் தடவி விரல்களால் கழுத்திலிருந்து மேல் நோக்கி முகத்துக்கும் மசாஜ் செய்து பின் கழுவி வர முகம் பொலிவாகவும், பிரகாசமாக இருக்கும். வாரம் 3 முறை செய்து வரலாம்.
கரும்புள்ளி, கருந்திட்டுகள் மறைய
வெளியில் அதிக அளவில் டூ வீலரின் பயணிக்கும் பெண்கள் சன்டேனால் அவதிப்படுகின்றனர். இவர்களுக்கு தேங்காய் பால் மிகவும் உதவுகிறது. கடலை மாவு, பயத்தமாவு, கஸ்தூரி மஞ்சள், மூன்றும் தலா அரை டீஸ்பூன் எடுத்து அதில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து அதில் தேங்காய்ப் பால் ஊற்றிப் பசை போல கரைத்து முகத்திலும், கழுத்திலும் இந்த பேக் போட்டு அரை மணி நேரங்கழித்து கழுவி வந்தால் இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள் கருந்திட்டுகள் வராமல் தடுக்கலாம்.
கண் எரிச்சல், சோர்வு குறைய
அதிக நேரம் மொபைல் பார்ப்பது மற்றும் கணினியில் வேலை செய்வது போன்ற காரணங்களால் சிலருக்கு கண் எரிச்சல் , சோர்வு ஏற்படும் இதற்கு தேங்காய் பாலில் மெல்லிய காட்டன் துணியை நனைத்து கண்களை மூடி இதை வைத்து பத்து நிமிடங்கள் ஓய்வெடுக்கலாம். இதனால் கண் எரிச்சல், கண் சோர்வை தடுக்கலாம்.
கண் கருவளையம் நீங்க
தூக்கம் கெடுவதால் கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படும். இது பெண்களின் அழகுக்கு சவாலாக உள்ளது. தேங்காய் பாலுடன் வெள்ளரியைச் சேர்த்து கண்களை சுற்றி பேக் போடலாம். இது கண்களுக்கு குளிர்ச்சி அளித்து கருவளையத்தை போக்கும்.
வறண்ட சருமம் உள்ள பெண்கள் தேங்காய் பால் குடிப்பது, சமையலில் தேங்காய்ப்பாலை சேர்ப்பது அவர்களின் சருமம் ஈரப்பதம் நிறைந்து பளபளப்பாக்க உதவும்.