
தேங்காய் எண்ணெய் அனைவரது வீட்டிலும் எப்போதும் பயன்பாட்டில் இருக்கும் ஒன்று. தேங்காய் எண்ணெயை தனியாகவோ அல்லது வேறு பொருட்களுடன் சேர்த்தோ, முகத்திற்கு பயன்படுத்தி சருமத்தை எப்படி பாதுகாப்பது என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
1. உலர்ந்த சருமம் கொண்டவர்கள், தேங்காய் எண்ணெயுடன் தயிரும் தேனும் சேர்த்து முகத்தில் தடவினால் முகம் பளபளப்பாக இருக்கும். மூன்றையும் நன்றாக கலந்துக் கொள்வது அவசியம். முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் 15 நிமிடங்கள் ஊர வைத்து பின் சூடான தண்ணீரில் முகம் கழுவ வேண்டும்.
2. பருவநிலை மாறுபடும்போது கண்ணுக்கு கீழ் அரிப்பு ஏற்பட்டு தேய்த்துக் கொண்டே இருப்போம். அந்த சமயங்களில் இரவு தூங்குவதற்கு முன்னர் தேங்காய் எண்ணெயை கண்ணுக்கு கீழ் நன்றாக தேய்த்துவிட்டு உறங்க வேண்டும். கண்களுக்கு கீழ் உள்ள இடம்தான் பொதுவாக முகச்சுருக்கம் தொடங்கும் இடம். ஆகையால் அந்த இடத்தில் தேங்காய் எண்ணெய் தேய்ப்பதால் சுருக்கம் விழாமல் தடுக்க உதவும். மேலும் இது கண் வறட்சி அடையாமல் தடுக்க உதவும்.
3. தேங்காய் எண்ணெய் வைத்து வீட்டில் இயற்கையான லிப் பாம் செய்யலாம். தேங்காய் எண்ணெய், கொக்கோ வெண்ணெய் மற்றும் தேன்மெழுகு மூன்றையும் மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும். வெதுவெதுப்புத்தன்மை குறைந்தவுடன் லவங்கப்பட்டை எண்ணெய் சேர்த்து பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தவும். இது உதடு காயாமல் இருக்க உதவும்.
4. இப்போது அதிகம் பேருக்கு பெரும் தொல்லையாக இருப்பது கரும்புள்ளிகள். இதனை சரிசெய்ய தேங்காய் எண்ணெய்யுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்யவும். இந்த கரும்புள்ளிகள் அதிகம் மூக்கின் மேல்தான் இருக்கும். ஆகையால் அந்த இடத்தில் 5 நிமிடம் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பேக்கிங் சோடாவில் அதிகப்படியான சர்க்கரை இருக்கும். சர்க்கரையும் தேங்காய் எண்ணெயும் சேர்த்து தேய்ப்பதால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அகன்று ஆரோக்கியமான சருமத்திற்கு உதவும்.
5. பெரும்பாலான பேருக்கு கை மற்றும் கால் முட்டிகளில் கருமை படர்ந்து நாளடைவில் கடினமான தோலாக மாறிவிடும். தினமும் குளிக்க போவதற்கு முன்னர் மற்றும் தூங்குவதற்கு முன்னர் கை மற்றும் கால் முட்டிகளில் தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். தினமும் இதனை செய்தால் விரைவில் அந்த கருமை நீங்கி ஆரோக்கியமான தோலாக மாறும். சிறு வயதிலிருந்தே இதனை தேய்க்க ஆரம்பித்தால் கருமை அண்டாமல் இருக்க உதவும்.
தேங்காய் எண்ணெயில் நன்மைகள் இருப்பது போல் தீமைகளும் உண்டு.
1. எண்ணெய்ப் பசை உள்ள முகத்தில் அதிகம் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் முகப்பருக்கள் வர வாய்ப்புள்ளது.
2. வெயில் காலங்களில் தேவையான அளவை விட அதிகமாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் சருமத்தில் வெடிப்புகள் வரலாம்.
3. தலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்தால் எப்படி முடி வளருமோ? அதேபோல் முகத்தில் தேய்த்தாலும் முகத்தில் முடிகள் அதிகம் வளர வாய்ப்புண்டு.
ஆக! சரியான அளவில் அல்லது வேறு பொருட்களோடு சேர்த்து தேங்காய் எண்ணெய்யை முகத்தில் பயன்படுத்தினால் முகச்சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் இருக்க உதவும்.