
சிலருக்கு கால்களில் உள்ள ரேகை வித்தியாசமாக இருக்கும். இரண்டு கைகளும் இல்லாதவர்களுக்கு உள்ளங்காலில் உள்ள ரேகைகளை பார்த்தே ஜாதகம் கூறுபவர்கள் இருக்கிறார்கள். அப்படி உள்ளங்கால் ரேகைகள் சொல்லும் அழகு குறிப்புகள் என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
உள்ளங்கால்களில் சங்கு போன்ற ரேகைகள் காணப்படும் மங்கையானவள் மிகவும் பாக்கியசாலி ஆகவும், அழியாத செல்வ வளம் உடையவளாகவும், சொந்த வீடு, வாகனம், தோட்டம், முதலிய சொத்துகளுக்கு உரியவளாகவும் இருப்பாளாம். சிறப்புக்குரிய ஆடை ஆபரண வசதிகள் வாய்க்குமாம். பயிர் தொழில் செய்யும் கணவனை அடைந்தால் தானிய விருத்தி அடையும் யோகத்தையும் உடையவளாக இவள் விளங்குவாள் என்கிறது உள்ளங்கால் பற்றிய ஜாதக கணிப்பு.
உள்ளங்காலில் உள்ள ரேகைகள் தெளிவாகவும், மேல் நோக்கிச் செல்லும் படியாகவும் அமையப் பெற்றவர்கள் அன்புமிக்க நல்லதொரு கணவனை அடைவார்களாம். உள்ளங் கால்களில் மச்சம், சங்கு, கொடி முதலியவற்றை போன்ற ரேகைகளை உடையவர்கள் செல்வ வளம் மிக்க கணவனை அடைவார்கள் என்கிறது இலட்சண சாஸ்திரம்.
உள்ளங்களில் குறிப்பாக இடக்காலில் பத்ம ரேகை என்னும் தாமரை மலரை போன்ற ரேகை அமைய பெற்றவர்களுக்கு குறைவற்ற செல்வத்துடன் திருமகளின் திருபார்வையின் கடாட்சத்தினால் சகல ஐஸ்வர்யங்களும் விருத்தி அடையுமாம். இத்தகைய மங்கையர்க்கு இயற்கையிலேயே உத்தம நற்குணங்களும், உயர்ந்த பண்புகளும், பரோபகாரம் செய்யும் சுவாபமும் அமைந்திருக்கும் என்கிறது சாஸ்திரம்.
மென்மையான உள்ளங்கால்களை உடைய மங்கையர் சகல விதமான சுகங்களையும் அனுபவிப்பார்கள். அவர்களின் பிறவி யோகத்தால் அவர்களுடைய வயது நிரம்பிய தாய் தந்தையர், கணவர், புத்திரர்கள் ஆகியவர்கள் நற்பயன்களை அடைவார்கள். இவர்கள் எப்போதுமே நற்காரியங்களை செய்வதிலேயே கவனம் செலுத்துவார்கள். ஆத்மாவை தூய்மைப்படுத்தும் தெய்வீக விஷயங்களில் அக்கறை செலுத்துவார்கள் என்கிறது லட்சண குறிப்பு.
மங்கையரின் உள்ளங்கால்கள் தாமரை இதழ்களை போன்று சிறந்த நிறம் உடையதாக அமைந்திருந்தால் அத்தகைய மங்கையர்கள் சற்குண சம்பத்துகள் உடையவர்களகவும், சங்கீத சாகித்ய வித்வாசகம் பொருந்தியவர்களாகவும், இனிய குரலுடன் மகாராணி போன்ற சுகபோக சௌபாக்கியங்களை உடையவர்களாகவும் விளங்குவார்கள். புண்ணிய காரியங்களை செய்வதிலும், தான தர்மங்களை செய்வதிலும் சிறந்து விளங்குவார்கள் என்கிறது சாஸ்திரம்.
உள்ளங்கால்கள் சிவந்த நிறம் உடையன ஆகவும், தசை வளமிக்கனவாகவும், மென்மையானதாகவும், மழமழப்பாகவும், நன்றாகப் படியக்கூடியனவாகவும், எப்போதும் வெதுவெதுப்பானவை ஆகவும் அமையப்பெற்ற பெண்கள் பெரும் பேறுகளைப் பெற்றுத் திகழ்வார்கள் என்கிறது இலட்சண குறிப்பு.
உள்ளங்கால்கள் வெண்மையாகவும், தங்கத்தை போன்ற நிறம் உடையன ஆகவும் அமைந்திருக்கும் மங்கையர்கள் மகா பாக்கியசாலிகளாகவும், கணவனுக்கு ஏற்ற நல்லதொரு மனைவியராகவும், அன்னதானம் செய்பவர்களாகவும், பெரியோர்களைப் பத்தியுடனும், மரியாதையுடனும் ஆதரிக்கும் நற்குண முடையவர்களாகவும் விளங்குவார்களாம்.
புண்ணிய நதிகளில் நீராடி புண்ணிய திருத் தலங்களுக்கும், திருக்கோவில்களுக்கும் சென்று தெய்வ தரிசனம் செய்வதில் ஆர்வமுடையவர்களாகவும் திகழ்வார்கள். சாந்த சுபாவமும், தெய்வ பக்தியும் மிக்க இவர்கள் கணவரின் பணிவிடைகளை அன்புடனும், பொறுப்புணர்வுடனும் செய்யும் நற்குண நற்பண்புகளை கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்கின்றது உள்ளங்கால்கள் பற்றிய இலட்சண குறிப்பு.
சாதாரணமாக பெண்கள் நடக்கும்பொழுது வீட்டில் உள்ளவர்கள் உள்ளங்கால் நிலத்தில் பதியும்படியாக நடக்கவேண்டும். அதிர நடக்கக்கூடாது என்று கூறுவார்கள். அதற்குப் பின்னால் இத்தனை விஷயங்கள் இருக்கின்றன என்பதை இதன் மூலம் உணர முடிகிறது. பொதுவாக கைரேகைகளை பார்ப்பதுபோல், கால்களில் உள்ள ரேகைகளை அதிகமானவர்கள் கவனிப்பது இல்லை. அதில் உள்ள விஷயங்களை புரிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பு.