
தவறான உணவுப் பழக்கம், வைட்டமின் பற்றாக்குறை, மன அழுத்தம், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற பல காரணங்களால் இன்று இளம் வயதில் இருப்பவர்களுக்குக் கூட நரை அதிகம் தென்படுகிறது. அதனால் முடிக்கு டை பயன்படுத்துவது இன்றைய காலகட்டத்தில் மிகவும் சர்வ சாதாரணமாகிவிட்டது. இதில் முடி நரைப்பதை தடுக்க முடியவில்லை என்றாலும் ஹேர் டை கொண்டு மறைக்க முடிகிறது. நம் மக்களுக்கு மார்க்கெட்டில் கிடைக்கும் ஹேர் டைகளில் எது சிறந்தது என்பதில் குழப்பமும் ஏற்படுகிறது. காரணம் அதிக விளம்பரங்கள் எல்லாவிதமான ஹேர் டைகளுக்கும் கிடைக்கின்றன.
தற்போது மார்க்கெட்டில் கிடைக்கும் சில ஹேர் டைகளில் அமோனியா, பெராக்ஸைட் மற்றும் ரெஸ்கார்சினால் போன்ற பலவிதமான ஆபத்துகளை விளைவிக்கும் ரசாயனங்கள் கலக்கப்பட்டு இருக்கலாம். இவற்றைப் பயன்படுத்தும் பொழுது சருமத்தில் எரிச்சல், தோலில் கருந்திட்டுகள் போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படும்.
சுவாசக் கோளாறுகள் போன்ற உடல்நல பாதிப்புகளும் ஏற்படலாம். இந்த பாதிப்புகள் சிலருக்கு உடனே தெரியாவிட்டாலும் பல ஆண்டுகள் கழித்து வரக்கூடும். ஹார்மோன் சமச்சீரின்மை, அலர்ஜி என பல ஆபத்துகள் நிறைந்த ஹேர் டையை உபயோகிப்பதற்கு முன் மிகவும் கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஹேர் டை பிரச்னையை தவிர்க்க சில குறிப்புகள்:
எந்த ஒரு ஹேர் டையையும் பயன்படுத்துவதற்கு முன்பு சிறிய அளவில் நம் தோலில் தடவி ஒவ்வாமை உள்ளதா என்பதை சரி பார்ப்பது அவசியம்.
ஹேர் டை போட்டதும் முதல் நாளே அலர்ஜி, அரிப்பு போன்றவை தென்பட்டால் அதை உபயோகிப்பதை உடனடியாக நிறுத்திவிடுவது நல்லது.
பெண்கள் கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் ஊட்டும் காலத்திலும் டை அடிப்பதை தவிர்த்துவிடுவது நல்லது.
மார்க்கெட்டில் கெமிக்கல் கலப்பில்லாத இயற்கையான ஹேர் டைகளும் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி உபயோகிக்கலாம்.
தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லாத, மூலிகைச் சாறுகள் கொண்ட இயற்கை ஹேர் டைகளை பயன்படுத்துவது பாதுகாப்பான வழியாகும்.
அமோனியா ஃப்ரீ, பிபிடி ஃப்ரீ என குறிப்பிடப்பட்டிருக்கும் டையை தேர்ந்தெடுத்து வாங்கலாம்.
ஹேர் டை பயன்படுத்தும்போது கவனமாக இருக்கவேண்டும். பரிந்துரைக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் வைத்திருக்க வேண்டாம். அதேபோல் உச்சந்தலையில், கண்களில் அல்லது முகத்தில்படுவது போன்ற தவறுகளை தவிர்க்கலாம்.
ஹேர் டையின் தொடர் பயன்பாட்டை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் முடி வறண்டதாகவும் உடையக்கூடியதாகவும் மாறலாம்.
குறிப்பிட்ட டையை உபயோகிக்கும் பொழுது அரிப்பு ஏற்பட்டால் அதை உபயோகிப்பதை நிறுத்துவதுடன் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று கூந்தலுக்கு ஏற்ற டையை வாங்கி பயன்படுத்தலாம்.
சிவந்து போகுதல், அரிப்பு, வீக்கம் அல்லது உச்சந்தலையில் கொப்புளங்கள் போன்ற ஹேர் டையில் ஒவ்வாமையின் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம்.