விட்டமின்கள் நம் உடலில் பல செயல்பாடுகளுக்கு இன்றியமையாதவை. அவற்றில் சில விட்டமின்கள் சருமத்தின் ஆரோக்கியத்தையும், அதன் இளமையையும் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நம் சருமம் நம் அழகிற்கு அடையாளமாகத் திகழும் ஒன்றாகும். ஆனால், பல காரணங்களால் சருமம் பாதிக்கப்பட்டு அதன் இயற்கையான அழகு மங்கிவிடலாம். அவற்றில் முக்கியமான காரணம் விட்டமின் குறைபாடு. இந்தப் பதிவில் சருமத்தின் அழகைக் கெடுக்கும் விட்டமின் குறைபாடுகள் என்னென்ன என்பது பற்றி விரிவாகக் காண்போம்.
வைட்டமின் சி என்பது ஒரு சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றி. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, சருமத்தை இறுக்கமாகவும், நெகழ்வாகவும் வைத்திருக்க உதவுகிறது. வைட்டமின் சி குறைபாடு காரணமாக சருமம் வறண்டு, சுருக்கங்கள் ஏற்பட்டு மந்தமாகத் தெரியும். மேலும், கரும்புள்ளிகள் பருக்கள் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.
வைட்டமின் ஈ சருமத்தை சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது. இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்து அதிகம் மிருதுவாக வைத்திருக்க உதவுகிறது. வைட்டமின் ஈ குறைபாடு காரணமாக சருமம் வறண்டு, அரிப்பு ஏற்பட்டு விரைவில் வயதாகும் தோற்றம் ஏற்படலாம்.
வைட்டமின் ஏ சரும செல்களை புதுப்பித்து சருமத்தை மிருதுவாக வைத்திருக்க உதவும். இது சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்கவைத்து அதை வறண்டு போகாமல் பாதுகாக்கிறது. இதன் குறைபாடு காரணமாக சருமம் வறண்டு, செதில் போல உரிய ஆரம்பிக்கும்.
வைட்டமின் பி குழுவில் பல வைட்டமின்கள் அடங்கும். இவை சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை. வைட்டமின் பி குறைபாடு காரணமாக சருமம் வறண்டு போய் அரிப்பு, முகப்பரு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
வைட்டமின் டி சருமத்தின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சரும நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. இதன் குறைபாடு காரணமாக சருமம் வறண்டு, சொறி, சிரங்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
எனவே, மேற்கூறிய விட்டமின்கள் உங்கள் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கு பழங்கள், காய்கறிகள், தானியங்கள் பருப்புகள் போன்ற சமச்சீர் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். தினசரி சிறிது நேரம் சூரிய ஒளியில் இருங்கள். இது வைட்டமின் டி உற்பத்தியை அதிகரிக்கும். அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். தினசரி சருமத்தைப் பராமரிக்க மாய்ஸ்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்.
வைட்டமின் குறைபாடு சருமத்தின் அழகைக் கெடுத்து பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, சருமத்தை நன்றாகப் பராமரித்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி வந்தால் விட்டமின் குறைபாட்டைத் தடுக்கலாம்.