
கவரிமான் பரம்பரைப்போல முடியில் ஒரு பிரச்னை என்றால் நம்மில் பலருக்கு தூக்கம் போய்விடும். முடி மதிப்பில்லாத வார்த்தைக்காக பயன்படுத்தப்பட்டாலும் அதற்கு மக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் மிகவும் அதிகம். முடி உதிர்தல், நரை முடி போன்றவை இளம் வயதினரை மனதளவில் அதிகம் பாதிப்படையவும் செய்கிறது.
நரைமுடியை மறைக்க இயற்கையான முறையில் ஒரு தீர்வு கோகோ பவுடர் மூலம் கிடைக்கிறது. வழக்கமான ஹேர் டையில் கிடைக்கும் நீண்ட நாள் நிறம் நீடிக்கும் திறன் இயற்கையான முறையில் கிடைக்காவிட்டாலும் கூட, இதில் பக்க விளைவுகள் எதுவும் கிடையாது. மேலும் ஹேர் டையினால் ஏற்படும் முடி உதிர்தல் பிரச்னையும் இதில் கிடையாது.
கோகோ பவுடர் என்றாலே அதை பாலில் கலந்து குடிக்கவோ, சாக்லேட் செய்யவோதான் தேவைப்படும் என்று நினைத்திருப்போம். ஆனால், கோக்கோ பவுடர் வெள்ளை முடிகளுக்கு ஒரு தீர்வாக இருக்கும் என்பது பரவலாக அறியப்படாத ஒரு விஷயமாக இருக்கிறது. நரைமுடி இன்றைய சுற்றுச்சூழல் காரணங்களால், பலருக்கும் இளம் வயதிலேயே தோன்றிவிடுகிறது.
இது மட்டுமல்லாமல் நிலத்தடி நீரின் மாசுபாடு காரணமாகவும், அதில் அதிகளவு ரசாயனம் கலந்து இருக்கும் காரணத்தினாலும் கூட தலைமுடிகள் வெளிர தொடங்கலாம்.
ஒரு சிலருக்கு குடும்ப மரபணு காரணமாக இளமையிலேயே நரைமுடி வெளிப்படலாம். இது மட்டுமல்லாமல் மனஅழுத்தமும், புகை பிடிக்கும் பழக்கமும், மதுபான பழக்கமும் நரைமுடிக்கு ஒரு காரணமாக இருக்கின்றது. நரைத்த முடியை கருமையாக்க ஏராளமான ரசாயனங்கள் நிறைந்த சாயங்கள் சந்தையில் விற்பனை ஆனாலும், சிலர் ரசாயனம் கலக்காத இயற்கை பொருள் மூலம் தலைமுடியை கருப்பாக்க ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்கு ஒரு தீர்வாக கோக்கோ பவுடர் இருக்கலாம்.
கோகோ பவுடரில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் தாமிரம் முடி நரைப்பதை தாமதப்படுத்தும். தலைமுடி நரைக்க முக்கிய காரணம் மெலனின் அளவு குறைவதுதான். கோகோ பவுடர் மெலனின் அளவை அதிகரிக்கவும் மீட்கவும் உதவுகிறது. மேலும் கோகோவில் மெக்னீசியம் மற்றும் புரதம் ஆகிய சத்துக்கள் உள்ளன. இவை முடிகளின் வேர்கள் வரை சென்று வலிமையாக்குறது. இது முடியினை கருமையாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது. கோகோ பவுடரை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நரைமுடி வருவதை தாமதப்படுத்த முடியும். முற்றிலும் நரை வருவதை தடுக்க முடியாது.
கோகோ பவுடரை தலைமுடிக்கு பயன்படுத்துவது எப்படி?
கோகோ பவுடரில் சிறிது தயிரை கலந்து, அதை பேஸ்ட் போல ஆக்கி அதை தலைமுடியில் தடவி 20 நிமிடம் காயவிடவேண்டும். பின்னர் சாதாரண தண்ணீரில் தலைமுடியை அலசிவிட வேண்டும். முடியை அலசும்போது ஷாம்புவை பயன்படுத்தக் கூடாது. வாரம் ஒருமுறை இந்த கோகோ ஹேர் மாஸ்க் நரைமுடி சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
கோகோ பவுடருடன் தேங்காய் எண்ணெயை சேர்ந்து கலக்கி ஒரு கலவையாக தயார் செய்து தலைமுடிக்கு மேற்பூச்சாக பயன்படுத்தலாம். இது தலையின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து புதிய முடிகள் வளரவும், முடியின் நிறம் மாறவும் ஊக்கம் அளிக்கிறது.
வெந்நீரில் சிறிது கோகோ பவுடரை கலந்து, சுவையாக இருக்கிறதே! என்று குடித்துவிடாமல், குளிக்கும்போது தலைக்கு தேய்த்து குளிக்கவும். இப்போது நரைமுடிகள் காபி கலர் நிறத்திற்கு மாறும். இன்னும் கருமை வேண்டும் என்றால் சிறிது காபித்துளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
கோகோவை பொறுத்தவரையில் அது ரசாயனம் கலக்காதது, முற்றிலும் பாதுகாப்பானது. அதனால், அதை பயம் இல்லாமல் பயன்படுத்தலாம். இதில் எந்த பக்க விளைவுகளும் இருக்காது.