
பெண்கள் தங்களை அழகாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக மணிக்கணக்கில் கூட மேக்கப் போட்டுக் கொள்ளும் பழக்கம் உண்டு. இன்னும் சில பெண்கள் தினமும் மேக்கப் போடாமல் வெளியிலே செல்ல மாட்டார்கள். தினமும் மேக்கப் போடுவதால் சருமத்தில் எண்ணற்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. சீக்கிரம் வயதான தோற்றம், சரும வறட்சி, அரிப்பு போன்ற பிரச்னைகள் வரும். மேக்கப் தினமும் போடுவதால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
1. சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க வேண்டும் என்று போடப்படும் மாய்ஸ்ட்ரைசர்ஸை தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது சருமத்தை கருமையாக்க வழிவகுக்கும்.
2. உதட்டை அழகாகவும், இளஞ்சிவப்பாகவும் வைத்துக்கொள்ள பயன்படுத்தும் லிப்ஸ்டிக்கில் லெட், காட்மியம், குரோமியம், அலுமினியம் போன்ற ரசாயனம் இருக்கிறது. இது நம் வயிற்றினுள் சென்று மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
3. சருமத்தில் தினமும் க்ரீம், பாடி லோஷன், சோப் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலமாக சருமத்தில் அழற்சி, வறட்சி போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
4. முகத்தில் போடும் பவுடரில் உள்ள கனிமங்களை தொடர்ந்து சுவாசிப்பதன் மூலம் நுரையீரலில் பெரும் பாதிப்பு ஏற்படும்.
5. முகத்தில் தினமும் மேக்கப் போடுபவர்கள் அதை இரவில் அகற்றிவிட்டு தூங்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், மேக்கப் சருமத்தில் உள்ள சிறுதுளைகளில் (pores) அடைத்துக் கொள்வதால் சருமம் நெகிழ்வுத்தன்மையை இழந்துவிடும். இதனால் சருமத்தில் சுருக்கம், வயதான தோற்றம் ஏற்படும்.
6. கண்களை சுற்றியுள்ள இடங்கள் மிகவும் மென்மையாக இருக்கும். அந்த இடங்களில் கன்சீலர், மஸ்காரா, ஐ லைனர் போன்றவற்றை பயன்படுத்துவதால், கண்களில் எரிச்சல் ஏற்பட்டு நோய்த்தொற்று வரும் வாய்ப்புகள் உள்ளன. அதிக ரசாயனம் இல்லாத மேக்கப் பொருட்களை வாங்கி பயன்படுத்துவது நல்லது. இல்லையேல் கண்களுக்கு கீழ் கருவளையம் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.
7. மேக்கப் போடுவதற்கு முன் சன் ஸ்கிரீன் போட்டுக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இதுவே சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கிறது.
8. மேக்கப் போட பயன்படுத்தும் பிரஸ்ஸை வாரத்திற்கு ஒருமுறை கழுவி வைக்க வேண்டும். நம் உடலில் இருக்கும் இறந்த செல்கள் மற்றும் வியர்வையில் பேக்டீரியாக்கள் இருக்கும்.
மேலும் உங்களுடைய மேக்கப் பொருட்களை மற்றவர்களுடன் பகிர்வதை தவிர்த்து விடுங்கள். இதனால் நோய்த்தொற்று வரும் அபாயம் இருக்கிறது. எனவே, தினமும் மேக்கப் போடும் பழக்கத்தை முடிந்த அளவு குறைத்துக் கொண்டு இயற்கையான அழகுடன் வாழ்வதற்கு முயற்சித்துப் பாருங்களேன்.