
உங்கள் முகத்தின் சருமத்தை உறுதியாக்கி, தோலுக்கடியில் உள்ள கொலாஜன் அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும், சருமம் பள பளப்பான இளமைத்தோற்றம் பெறவும் உதவும் ஐந்து வகையான ஃபேஸ் பேக் பற்றி இப்பதிவில் பார்க்கலாம். இதை நம் வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டு சுலபமான முறையில் தயாரித்து உபயோகிக்கலாம்.
பப்பாளி, லெமன் ஜூஸ் மற்றும் தேன்: நன்கு பழுத்த பப்பாளித் துண்டுகளை மசித்து அதனுடன் லெமன் ஜூஸ் மற்றும் தேன் கலந்து பேஸ்ட்டாக்கிக்கொள்ளவும். ஊட்டச்சத்து மிக்க இந்தப் பேஸ்ட்டை முகம் முழுவதும் பூசி, நன்கு காயும்வரை விட்டு வைக்கவும். பின், வெது வெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி விடவும். பப்பாளிச்சாறு தரும் ஆரோக்கிய நன்மைகளை உள்ளிழுத்து, புத்துயிர் பெற்றது போல் முகம் மினு மினுக்கும்.
ஓட் மீல் மற்றும் பால்: இரண்டு டேபிள் ஸ்பூன் ஓட் மீலில் ஒரு டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து அதை நல்ல ஸ்மூத்தான பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். இதை முகம் முழுக்கப் பூசி 20 நிமிடங்கள் விட்டு விடவும். பின் வெது வெதுப்பான நீரில் முகத்தைக் கழுவிவிடவும். இயற்கை முறையிலான இந்த ஃபேஸ் பேக் முக சருமத்தை அமைதியுடன் இறுக்கமடையவும், முகத்தில் படிந்துள்ள இறந்த செல்களை நீக்கவும் உதவும்.
கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர் பேக்: கடலை மாவு முகத்தின் சருமத் துவாரங்களில் அடைந்திருக்கும் அழுக்குகளையும், இறந்த செல்களையும் நீக்கும் குணம் கொண்டது. மேலும் சருமத்தை இறுக்கமடையச் செய்யவும் கடலை மாவு உதவும். இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன் யோகர்ட் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து ஸ்மூத்தான பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள்.
அதை முகம் முழுவதும் தடவி வைத்து அரைமணி நேரம் அப்படியே விட்டு விடவும். பின் முகத்தில் தண்ணீர் தெளித்து, பேஸ்ட்டை மெதுவாக பிரித்தெடுக்கவும். இதை தினசரி செய்து வந்தால் முகம் சுருக்கமின்றி, பள பளவென மின்னும்.
முட்டை வெள்ளைக் கரு, தேன் மற்றும் லெமன் ஜூஸ்: ஒரு முட்டையினுள்ளிருக்கும் வெள்ளைப் பகுதியை தனியே பிரித்தெடுதுக்கொள்ளவும். அதை நன்கு நுரை வரும்படி பீட்டரால் அடித்து, பிறகு அதனுடன் தேன் மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்துக் கலக்கவும்.
பின் இந்த ஊட்டச்சத்து மிகுந்த கலவையை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்த பிறகு அப்படியே அரைமணி நேரம் விட்டுவிடவும். அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தை நன்கு கழுவி விட சருமம் இறுக்கமடைந்து, மினுமினுப்பும் பெறும்.
வாழைப்பழம் மற்றும் யோகர்ட்: நன்கு பழுத்த ஒரு வாழைப்பழத்தை மசித்து அதனுடன் யோகர்ட் சேர்த்து க்ரீமியான பேஸ்ட் தயாரிக்கவும். பின் அதை முகம் மற்றும் களுத்துப் பகுதிகளில் தடவி, அரைமணி நேரம் விட்டுவிடவும். பின் தண்ணீரால் கழுவிவிட, சருமம், புத்துணர்ச்சியும் நீரேற்றமும் பெற்று இளமைத் தோற்றத்துடன் பள பளக்கும்.