
தற்போதைய ஃபேஷன் உலகம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பொருட்களை தயாரிப்பதை கவனத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதற்கான தேவையும் அதிகரித்து வருகிறது. வீகன் தோல் கைப்பைகள் பெண்களின் மத்தியில் பிரபலமாக உள்ளன. இவற்றின் சிறப்பம்சங்கள் பற்றி இந்தப பதிவில் பார்ப்போம்.
வீகன் லெதர் என்றால் என்ன?
வீகன் லெதர் பைகள் என்பவை விலங்குகளின் தோலைப் பயன்படுத்தாமல் செயற்கையான முறையில் தயாரிக்கப்படுபவை. இவை பாரம்பரியமான தோல் பைகளுக்கு மாற்றாக உள்ளன. இவற்றில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பகுதியும், இவற்றை ஒட்டப் பயன்படுத்தும் பசை (glue) முதற்கொண்டு மிருகங்களின் உடலில் இருந்து பெறப்பட்டவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இவை விலங்குத் தோலைக் கொண்டு தயாரிக்கப்படுபவை அல்ல என்பதால் இவற்றை சைவத் தோல் பைகள் என அழைக்கிறார்கள்.
வீகன் லெதர் பைகள் எந்தப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன?
வீகன் லெதர் பைகளை பல்வேறு வகையான பொருட்களில் இருந்து தயாரிக்கலாம். அவை பாலிமர்கள் மற்றும் பிற சேர்மங்களிலிருந்து உருவாக்கப்படுகின்றன.
1. பாலியூரிதீன் (PU): இது சைவ பாணியில் பிரபலமான மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படும் செயற்கைப் பொருளாகும். இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. மேலும் நெகிழ்வுத்தன்மையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் இருக்கும். இது விலங்குகளின் தோலால் செய்யப்பட்ட பைகளை ஒத்திருக்கும்.
2. தாவர அடிப்படையிலான இயற்கை பொருட்கள்:
அன்னாசி: அன்னாசி இலைகளின் இழைகளிலிருந்து தயாரிக்கப்படும் இந்தப் பொருள் சுற்றுச்சூழலுக்கு உகந்தது மற்றும் மக்கும் தன்மை கொண்டது.
கற்றாழை தோல்: கற்றாழையின் இலைகளிலிருந்து உருவாக்கப்பட்ட இந்த பொருள், அதன் நீடித்து உழைக்கும் தன்மை, மென்மையான அமைப்பு மற்றும் கரிம தோற்றத்திற்கு பெயர் பெற்றது.
ஆப்பிள் தோல்: தொழிற்சாலைகளில் ஆப்பிள் பழங்களில் இருந்து பழச்சாறு எடுக்கப்பட்ட பின் கழிவுப்பொருட்களான ஆப்பிள் தோல்களைக் கொண்டு வீகன் பைகள் தயாரிக்கப்படுகின்றன.விவசாயக் கழிவுகளை மீண்டும் பயன்படுத்த இது ஒரு ஆக்கப்பூர்வமான வழியாகும்.
காளான் தோல்: காளான்களின் வேர் அமைப்பான மைசீலியத்திலிருந்து பெறப்பட்ட இந்த உயிரியல் அடிப்படையிலான பொருள் பயன்படுத்தப் படுகிறது. இதற்கு குறைந்தபட்ச வளங்கள் தேவைப்படுகின்றன.
கார்க் தோல்: ஓக் மரங்களின் பட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் இந்த பொருள் இயற்கையாகவே நீர்ப்புகாத, இலகுரகமானது. பட்டையை அறுவடை செய்வது மரத்திற்கு தீங்கு விளைவிக்காது.
மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள்: சில சைவ தோல் பைகள் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக், ரப்பர் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன, இது கழிவுகளைக் குறைக்க உதவுகிறது. மேலும் மெழுகு பூசப்பட்ட பருத்தி கேன்வாஸ் அல்லது காய்கறி கழிவுகள் போன்ற பொருட்களாலும் சைவ வீகன் கைப்பைகளை தயாரிக்கலாம்.
வீகன் லெதர் ஹேண்ட்பேகுகளின் நன்மைகள்.
விலங்குகளின் தோல்களை பயன்படுத்தாமல் தயாரிக்கப்படுவதால் விலங்குகள் கொல்லப்படுவதைத் தடுக்கிறது. பாரம்பரிய தோல்பைகள் தயாரிப்பதைவிட இவற்றிற்கான குறைவான வளங்களே தேவைப் படுகின்றன. மேலும் குறைவான மாசுபாட்டை வெளியிடுகின்றன. கால்நடை வளர்ப்பு மற்றும் ரசாயன முறையில் தோல் பதனிடுதல் செயல்முறைகளில் தொடர்புடைய சுற்றுச்சூழல் குறைபாடுகள் தவிர்க்கப்படுகிறது.
பல்வேறு வகையான டிசைன்களில் கிடைக்கின்றன. பார்ப்பதற்கு ஸ்டைலிஷ் ஆகவும் நவநாகரிக தோற்றத்துடனும் இருக்கும். பணப்பைகள் முதல் பெரிய அளவிலான பைகள் உள்ளன.
இவை வழக்கமான லெதர் பேக்குகளை விட மலிவு விலையில் கிடைக்கின்றன. இதனால் இவற்றை வாங்குவதற்கான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளது. பல பிராண்டுகள் இலவச ஷிப்பிங்கில் கிடைக்கின்றன. இதனால் மக்கள் ஆர்வமாக இவற்றை வாங்குகிறார்கள். காளான் தோல் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகள் போன்ற புதுமையான பொருள்களின் பயன்பாடு ஃபேஷன் துறையின் நிலையான நடைமுறைகளை நோக்கிய மாற்றத்தை எடுத்துக்காட்டுகிறது.