
ஜீன்ஸ், இளம்பெண்களின் பிரியத்துக்குரிய உடை. ஜீன்ஸ் அணிவதில் ஏராளமான சௌகரியங்கள் உள்ளன. எனவே அதை இளம் பெண்கள் மட்டுமல்லாமல் நடுத்தர வயதுப் பெண்கள் வரை விரும்பி அணிகிறார்கள். இந்தப் பதிவில் வெண்ணெய் ஜீன்ஸின் முக்கிய அம்சங்களை பற்றியும் சிறப்பியல்புகளை பற்றியும் பார்ப்போம்.
வழக்கமான ஜீன்ஸிலிருந்து வெண்ணெய் ஜீன்ஸ் எப்படி வேறுபடுகிறது?
சாதாரணமான ஜீன்ஸ் பாரம்பரியமாக 100% கனமான பருத்தியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது கடினமாகவும் கனமாகவும் சுருக்கங்களுடனும் இருக்கும். இதை அணிந்திருக்கும்போது உடலுக்கு இறுக்கமாக இருப்பது போல இருக்கும். ஆனால் பட்டரி ஜீன்ஸ் எனப்படும் வெண்ணெய் ஜீன்ஸ் அணிவதற்கு வசதியாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் தோற்றமளிக்கும்.
வெண்ணெய் ஜீன்ஸின் தனித்துவம்;
1. துணிக்கலவை;
சாதாரண ஜீன்ஸ் முரட்டுத்தனமான துணியால் தயாரிக்கப்படுகிறது. இதற்கு நேர் மாறாக வெண்ணெய் ஜீன்ஸ் பெரும்பாலும் பருத்தி, ஸ்பான்டெக்ஸ் மற்றும் சில சமயங்களில் பாலியஸ்டர் போன்றவற்றின் கலவையிலிருந்து வடிவமைக்கப்படுகிறது இதனால் மென்மையான அமைப்பைக் கொண்டிருக்கிறது. இதை அணிந்து கொள்ளும்போது சருமத்தை ஒட்டி உரசி எரிச்சலை ஏற்படுத்தாமல் வழு வழுத்தன்மையால் மென்மையான உணர்வை தருகிறது.
2. நெகிழ்வுத் தன்மை;
வெண்ணெய் ஜீன்ஸில் ஸ்பான்டெக்ஸ் அல்லது எலாஸ்டென்ஸ் சேர்க்கப்படுவதால், இதை குறிப்பிட அளவு நீட்டிப்பு செய்யமுடியும். அதாவது ஸ்ட்ரெட்ச்சபிள் வசதி இதில் இருக்கிறது. வடிவத்தை இழக்காமல் ஸ்ட்ரெட்ச் செய்து கொள்ள அனுமதிக்கிறது. சாதாரண ஜீன்ஸில் இந்த வசதி இல்லை. ஆனால் வெண்ணெய் ஜீன்ஸை நன்றாக ஸ்ட்ரெட்ச் செய்து கொள்ள முடியும் என்பதால் அது உடலுக்கு குறிப்பிடத்தக்க நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. நாள் முழுவதும் அணிந்திருந்தாலும் அது வசதியாக இருக்கிறது. உடலின் பாகங்களை சிரமமின்றி இயக்க முடியும்
3. இலகுத்தன்மை;
சாதாரண ஜீன்ஸ் அணிந்திருக்கும்போது உடலை அழுத்தி பிடிப்பது போல இருக்கும். ஆனால் வெண்ணை ஜீன்ஸ் உடலை அழுத்திப் பிடிக்காமல் உடலைத் தழுவியதுபோல் அமைந்திருக்கும். சாதாரண ஜீன்ஸில் இடுப்பு பகுதியில், டைட்டாகவும் கீழே அமரும்போது அசௌகரியமாகவும் உணர வைக்கும். ஆனால் வெண்ணை ஜீன்ஸ் அதுபோன்று இல்லாமல் இலகுவாகவும் அணிந்திருப்பதே தெரியாதது போன்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது. நீண்ட நேரம் அணிந்திருந்தாலும் உடலுக்கு இறுக்கிப் பிடிப்பதோ அல்லது வலியையோ ஏற்படுத்துவதில்லை.
4. பன்முகத்தன்மை;
வெண்ணெய் ஜீன்ஸ் பன்முகத்தன்மை கொண்டது. அதாவது இதனுடன் மேட்ச் ஆக அணியும் மேலாடைகள் பலவிதமாக இருந்தாலும் இது அழகான தோற்றத்தை தருகிறது. சாதாரணமான டிஷர்ட் முதல் விலை உயர்ந்த வேலைப்பாடுகளுடன் கூடிய குர்த்தி அணிந்தாலும் ஆடம்பரமான உணர்வை அளிக்கிறது. ஆனால் வழக்கமான ஜீன்ஸ் அணிந்திருக்கும் போது அது பார்ப்பதற்கு சாதாரணமான தோற்றத்தை மட்டுமே தருகிறது.
5. ஆயுள் மற்றும் பராமரிப்பு;
வெண்ணெய் ஜீன்ஸை பராமரிப்பது மிகவும் எளிது. அணிவதற்கு மென்மையாகவும் வசதியாகவும் இருக்கும் அதே வேளையில் இவற்றை துவைப்பதும் காயவைப்பதும் அயர்ன் செய்வதும் எளிது. பலமுறை துவைத்த பின்பும் அதன் வடிவமும் அமைப்பும் மாறாமல் நீடித்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சில பாரம்பரிய ஜீன்ஸ் வகைகள் காலப்போக்கில் நிறம் மங்கி வடிவத்தை இழந்துவிடும். விரைவில் வெளுத்துப்போய் உபயோகிக்க முடியாமல் போய்விடும். ஆனால் மேம்பட்ட துணி மற்றும் தொழில்நுட்பம் காரணமாக வெண்ணெய் ஜீன்ஸ் பெரும்பாலும் நீடித்து உழைக்கிறது.
6. எடை;
சாதாரணமாக டெனிம் ஜீன்ஸ் மிகவும் கனமானது. ஆனால் வெண்ணெய் ஜீன்ஸ் இலகுவாகவும் அணிந்திருக்கும்போது வியர்க்காமல் இருக்கும். வெப்பமான கால சூழ்நிலைக்கு கூட மிகவும் ஏற்றது. ஃபேஷன் விரும்பிகளுக்கு மிகவும் உகந்த சாய்சாக விளங்குகிறது. அணிந்திருக்கும் போது மிகவும் ஸ்டைலிஷ் ஆக உணரவைக்கும்.