
பெண்கள் நகைகளை வாங்குவது கூட சிரமம் இல்லை. அதை பராமரிப்பதும் உடல்வாகுக்கு தக்கவாறு தேர்ந்தெடுப்பதும்தான் பெரும் கலை. அவற்றை எவ்வாறு தேர்ந்தெடுக்கலாம் என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
தங்க நகைகளை வாங்கும்பொழுது வேலைபாடுகள் குறைந்த ஆபரணங்களை வாங்குவது நல்லது. செய்கூலி குறைவு என்பதை விட விற்கும்போதும் அதிக கழிவு ஏற்படாது. பில்லையும் சேர்த்து வாங்குவது அவசியம்.
சிலருக்கு காது மிகவும் சிறியதாக இருக்கும் அவர்கள் பெரிய தோட்டை போடமுடியாது. அதுபோன்ற காது உடையவர்கள் கல் நகைகளை தேர்ந்தெடுக்கலாம். பளிச்சென்று முகத்தை மெருகேற்றி காட்டும். வகை வகையான கல் வைத்த தோடுகளை வாங்கி வைத்துக்கொண்டால் விசேஷமான தினங்களுக்கு பயன்படுத்த அழகை கூட்டிக்காட்டும்.
சிறிய சைஸ் தோடுகளை வாங்கினால் காதும் துளை பெரிதாகி இழுத்துக்கொண்டு வராது. சின்ன சின்ன ரிங் வகைகளையும் பயன்படுத்தலாம். அது நிறைவாக நகை போட்ட அழகைக் கொடுக்கும்.
சிலருக்கு காது கண்ணத்தோடு ஒட்டி தோடு அணியும் இடம் பெரிதாக அமைந்திருக்கும். அவர்கள் எவ்வளவு பெரிய தோட்டை போட்டாலும் அழகாகவே இருக்கும். வெள்ளி, பிளாட்டினம், வைரம், தங்கம், நவரத்தின கற்கள் என்று எப்படி போட்டாலும் பளிச்சென்று இருக்கும். காதுதான் பெரியதாக இருக்கின்றதே என்று வீட்டிலும் பெரிதாகவே போட்டுக் கொண்டிருக்க வேண்டியது இல்லை. அப்படி போட்டால் காதில் துளை பெரிதாகி கீழ்வரையில் இழுத்துக் கொண்டு வருவதுண்டு. ஆதலால் வீட்டில் சிறிய தோடுகளை போட்டுக்கொண்டு வெளியில் செல்லும்பொழுது பெரிதாகப் போட்டுக் கொள்ளலாம். இது அசத்தலான அழகைக் கொடுக்கும்.
பெண்கள் தங்கள் அழகுக்காக தங்கவளையல் என்று இல்லாமல் பிளாஸ்டிக், உலோகம், தேங்காய் ஓடு, கண்ணாடி மற்றும் முலாம் பூசிய வளையல்கள் உட்பட ஏராளமான வகைகளை குறைந்த விலைக்கு வாங்கிவிட முடியும். இவற்றை உடைகளுக்கு தக்கவாறு அணிந்து சென்றால் திருட்டு பயமும் இல்லை. ட்ரெண்டியாகவும் இருக்கும்.
வீட்டில் இருக்கும் பெண்மணிகள் பட்டையான கை வளையலை கையை விட்டு கழன்றுவிடாதபடிக்கு சற்று இறுக்கமாக ஒன்று ஒன்று அணிந்துகொண்டால் எப்பொழுதும் வளைந்து நெளியாமல் நன்றாக இருக்கும். வீட்டில் அணிந்திருக்கும் புடவைக்கு எடுப்பாகவும் இருக்கும். நல்ல ஒரு ரிச் லுக்கை கொடுக்கும்.
காலில் கொலுசு அணியும்போது புடவைகளை கீராதவண்ணம் பார்த்து வாங்கவேண்டும். கொலுசு வாங்கும் பொழுது 100 கிராமுக்கு மேல் கொலுசு எடை இல்லாமல் பார்க்கவேண்டும். திருகாணியை நன்றாக பொருந்துகிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். பாத வெடிப்பு இல்லாதபடி மருதாணியால் பாதத்தை அழகுப்படுத்தி கொலுசை அணிந்துகொண்டால் அழகாக இருக்கும்.
கால் விரல்களுக்கு பொருத்தமான சிறிய வகை மெட்டிகள் கால் அழகுக்கு ஏற்றதாக இருக்கும். இரண்டு கால்களின் விரல்களுக்கும் வித்தியாசம் இருக்கும். இரண்டு கால் விரல்களுக்கும் பொருந்தும் படியானதை பார்த்து வாங்கவேண்டும்.
கல் பதித்த ஆபரணங்கள், விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் போன்றவற்றை அணியும்பொழுது மெத்தைகள் அல்லது மிருதுவான விரிப்புகளின் மீது இருந்து அணிந்துகொண்டால் கைதவறி கீழே விழுந்தால் கூட கற்கள் உடைந்துவிடாமல் இருக்கும். சிலர் தோடு, மூக்குத்தி வகைகளை வாஷ்பேஷனில் கழுவி அவ்விடத்தில் நின்றே அணிவது உண்டு. அதை தவிர்த்துவிடுவது நல்லது.